Thursday, September 29, 2005

மறுமணம் என்பது பெண்களிற்கு ஏன் கானல் நீர்.....?

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்கிறது பழமொழி. அந்த திருமணபந்தத்தில் இணைந்து விட்ட இரு உடல்கள் விதி வசத்தால் இளவயதிலேயே உயிர் பறிக்கப்படுகிற போது அங்கு சமூக நீதி தடம் மாறிப்போகிறது.

கற்பு என்பது பெண்ணிற்கு மட்டுமே என்கின்ற வேத வாக்கு இன்னமும் தூக்கியெறியப் படாததால் பெண் பல இம்சைகளிற்கு ஆளாகிறாள். தனித்தே காலத்தை கடத்துபவளாக செத்து மடிகிறாள்.

உணர்வுகள் ;சமூகம் என்கின்ற பார்வைகளுள் சின்னாபின்னப்பட்டு பல துன்பங்களிற்கு ஆளாகி செத்து மடிய வேண்டிய ரணம் நிறைந்த வாழ்க்கை.
இது சமூகத்தின் ஓர வஞ்சக சிந்தனை. ஆண் மனைவியை இழக்கும் போது அந்த ஆணிற்கு மறு திருமணத்தை செய்ய முண்டியடிக்கும் இந்த சமூகம் பெண்ணின் விடயத்தில் பின்னிற்பது வேதனை தான்.


ஆனாலும் கணவனை இழந்த பெண்ணின் உணர்வுகளை இந்த சமூகம் புரிவதே கிடையாது. வெள்ளைச்சேலையைக்கொடுத்து அவளின் உணர்வை அதற்குள் மறைத்து விட்டு ஜாலம் காட்டுகிறது . பெண்கள் விழிப்பு பெற்று கலர் புடவையை உடுத்தாலும் அதற்கு அப்பால் உணர்வு என்பதை யாரும் பார்க்க மறந்து போகிறோம்.

ஆண்களிற்கு ஏதும் உடையில் மாற்றம் கிடையவே கிடையாது. புதுமாப்பிளைக் கோலம் பரிசாக. ஆண்களுக்கு ஒரு நீதி என்றும் பெண்களுக்கு ஒரு நீதியென்றும். எதையும் சமூக நோக்கோடும் மனிதாபிமான நோக்கோடும் நாம் இன்னமும் பார்க்க தொடங்கவில்லை.

எமது பண்பாட்டு விழுமியங்கள் சிலதை காலத்துக்கு ஏற்றவாறு புதிய நல்ல சிந்தனைக்கு ஏற்றவாறு தீயிட்டு கொழுத்த வேண்டியவர்களாக இருக்கிறோம்.அந்த தீயிடலுள் கணவனை இழந்த பெண்ணின் கொடுமை அடங்குகிறது. இது பற்றிய விழிப்புணர்வும் தேவையாகிறது. சமூக எழுச்சி தேவையாக உள்ளது அத்தனை சமூக மனங்களிலும் மாற்றம் உருவாக்கப்படல் வேண்டும்.

மனைவியை இழந்த ஆணுக்கு முண்டியடித்து திருமணத்தை செய்து வைக்கும் சமூகம் பெண்ணிற்கு மட்டும் தயக்கம் காண்பித்து வருகிறது. மனைவியை இழந்த ஆணால் குழந்தைகளை வளர்க்க முடியாது என காரணம் கூறி ஒருவாறாக திருமணத்தை செய்த வைத்துவிடுகிறது.

பெண் என்றதும் கடவுளாக பார்த்து ஒரு குழந்தையை கொடுத்தானே!! அந்த குழந்தையின் சந்தோசத்தில் வாழ்ந்து விடலாம் என தைரியம் கூறும் இந்த சமூகம் அதே தைரியத்தை ஏன் ஆணிற்கு கூற மறுக்கிறது.
அங்கே ஆணின் உணர்வுகள் உணர்ச்சிகளை புரிந்து கொண்டு சமூகம் தைரியமாக மறு திருமணத்தை செய்து வைத்துவிடுகிறது. அதே போல பெண்ணிற்கும் உணர்வுகளும் உணர்ச்சிகளும் இல்லை என கூறுவது எத்தனை மடமை.


எமது சமூகத்தில் மனைவியை இழந்த ஆணை திருமணம் செய்ய முன்வரும் பெண்களைப்போல் கணவனை இழந்த பெண்ணை திருமணம் செய்யவரும் ஆண்கள் மிக குறைவே. அங்கொன்றும் இங்கொன்றுமாக கைவிட்டு எண்ணிவிட முடியுமே அன்றி புள்ளி விபரத்தரவுகளை எடுத்து விட முடியாது.

எமது சமூகத்தில் கணவனை இழந்த பெண்ணை திருமணம் செய்ய ஆண்கள் பின்ணிற்பதற்கு நான்கு காரணங்களை முன்வைக்கலாம்.

1) சீதனம்.
2) கற்பு என்பதை தனித்து பெண்ணிற்கு மட்டுமே என்கின்ற பிடிவாத கொள்கை.
3) ஆணின் வயதை விட பெண்ணின் வயது குறைவாக இருக்க வேண்டும் என்கின்ற கொள்கை.
4) முதல் கணவனின் நினைவு தொல்லை தரலாம் என்கின்ற பயம். ஆண்களிற்கு .

நினைவுகள் இருக்கும் தான் அதனை அனுசரித்து அத்தனைக்கும் ஆறுதலாக இருந்து விட்டால் எத்தனை உயர்வாய் அவளின் மனதில். !!

இந்த நான்கு காரணங்களாலும் கணவனை இழந்த பெண்ணிற்கு மறுமணம் என்பது கானல் நீராகிறது.
கணவனை இழந்த ஆணை திருமணம் செய்த பெண்கள் எத்தனை இன்பமாக வாழ்கிறார்கள். எப்படி?!! அந்த ஆணின் மனதை புரிந்து அத்தனை துன்ப துயரத்திலும் பங்கெடுத்து எத்தனை சாதுரியமாக வாழ்கிறாள்.

சில பெண்களிடம் இருந்து படிப்பதற்கு நிறைய உள்ளது இந்த சமூகத்திற்கு.

ஒரு பெண் மனைவியை இழந்த ஆணை திருமணம் செய்ய முன்வருகிறாள் என்றால் இங்கு சீதனம் என்கின்ற பிடியில் இருந்து தன்னை காக்கும் முயற்சியே. சில நல்ல உள்ளங்கள் அந்த ஆணின் உணர்வுகளை புரிந்து திருமணம் செய்ய முன்வந்திருப்பதும் கண் கூடே.

எது எப்படியோ நாம் மனித மனங்கள் உணர்வுகள் உணர்ச்சிகள் என பரந்து பட்டு சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.

மறு மணம் என்பது எத்தனை தேவை என ஒரு மாத கணவன் மனைவி பிரிவு கூறியும் கூட எமது சமூகம் பாராமுகமாக இருப்பது தான் புரியவில்லை. அத்தனையும் ஆணாதிக்க சமூகத்தின் எச்சமாய்.

இங்கு பிள்ளைகளின் மனநிலை என்பது அடுத்த ஒரு காரணமாக மனக்கண்முன் எழுந்து நிக்கிறது. பிள்ளைகளிற்கு ஆசுவாசமாக எடுத்துரைத்தால் நிச்சயமாக புரியும் பக்குவம் அவர்களிற்கு வரும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனாலும் நிதர்சன வாழ்வில் இது சாத்தியமா என்பது கேள்விக்குறியே.

ஆனாலும் மனைவியை இழந்த ஆண் மறுமணத்திற்கு தயாராகும் போது பிள்ளைகளின் மனநிலையை பார்த்தா மணம் முடிக்கிறார் என்பதும் இங்கு பெரியதொரு கேள்விக்கணையாக மனதில் எழுகிறது.

காலப்போக்கில் குழந்தைகளிற்கு அன்பும் அரவணைப்பும் கிடைக்கிறபோது புரிதல் என்பது சாத்தியமே.

ஆகையால் கணவனை இழந்த பெண்ணிற்கு மறுமணம் என்பது அத்தியாவசியமாகிறது. தாராளமாக கணவனை இழந்த பெண்கள் ஆண்கள் முன்வரும் பட்சத்தில் விரும்பின் மறுமணத்தை தாராளமாக ஏற்றுக்கொள்ளலாம்.


என்ன பாவம் நாம் செய்தோம்?
மானிடராய் பிறந்தோர்க்கு
மரணம் அது நிச்சயம்.
சிரிக்கும் பூக்களாய்

திரிந்த எமை
சிறையில் பூட்டுவது தகுமோ?

கணவனின்
இழப்பை விட
சமூகம் செய்யும்
கொடுமை
அதைவிட பெரிதெமக்கு.

கோவிலில் கூட
வெள்ளைப்பூவை
வைத்துத்தான்
அதிஸ்டம் பார்ப்பர்.

வீதியில் நாம்
நடந்து போகையில்
தெருநாயாய்
பார்வையால் உதைப்பர்.

வெள்ளைப்பூக்களை
அர்ச்சனைக்கு எடுக்கும்
பார்ப்பணியரால்
வந்த கொடுமை இது

பள்ளிச்சிறுவர்க்கு
வெள்ளை உடையை
கொடுத்துவிட்டு
அப்பளுக்கற்ற
உள்ளம் அதற்குள் என
கவி பாடுவர்.

எம்மை மட்டும்
முளுவியளம்
சரியில்லை என
எப்படித்தான் ஆக்கினரோ?

போர்க்கொடுமையை
பூகம்ப அதிர்வுகளை
புயலை
வெள்ளப்பெருக்கை
அத்தனை அழிவுகளையும்
எம்மை வைத்தே
வர்ணனை செய்வர்.

இத்தனை கவிஞர்
இத்தரையிருப்பினும் எம்
உணர்வைப்புரியாமல
முற்றும்.


நளாயினி தாமரைச்செல்வன்.
02-03-2003

16 comments:

  1. // கணவனை இழந்த ஆணை திருமணம் செய்த பெண்கள் எத்தனை இன்பமாக வாழ்கிறார்கள். //

    ???

    ReplyDelete
  2. Anonymous10:04 am

    http://remarriagematrimony.com/

    ReplyDelete
  3. ஓ சுட்டிக்காட்டியமைக்கு நன்றி லதா. மனைவியை இழந்த ஆணை என வருதல் வேண்டும். திருத்தியமைக்கிறேன்.

    ReplyDelete
  4. I don't think it is an issue anymore except maybe in the minds of some தமிழ்க் கவிஞர்கள்.. (உங்களைச் சொல்லவில்லை!)

    எனக்குத் தெரிந்த எத்தனையோ குடும்பங்களில் கணவனியிழந்த பெண்களுடைய திருமணம் முடிந்திருக்கிறது..சிறிய இடைக்காலத்திற்குப் பிறகு!

    ஒன்றிரண்டு குழந்தைகள் பிறந்தப் பிறகு கணவனையிழந்த பெண்களுக்கு வேண்டுமானால் நீங்கள் சொல்வது சரியாயிருக்கலாம்.. அத்தகையோர் மனைவியை இழந்த ஆண்களை - அவர்களுக்கு குழந்தைகளிருந்தாலும் -
    மணந்துக்கொள்ளத் தயாராயிருக்கும் பட்சத்தில் தடையேதுமிருக்காது..

    நண்பரொருவர் சுட்டிக்காட்டியிருப்பதுபோல் சென்னை, மதுரை, சேலம் போன்ற நகரங்களில் அதற்கென சேவை மையங்களும், குழுக்களும், இணையத் தளங்களும் அதிக அளவில் உள்ளன..

    நீங்கள்தான் நம் நாட்டிலேயே இல்லையே..எங்கேயோ இருந்துக்கொண்டு நடைமுறையில் இல்லாத ஒன்றை நினைத்து கவலைப் படுகிறீர்கள்..

    ReplyDelete
  5. now this is not a "kanal niir" for Penkal.

    ReplyDelete
  6. எனது தளத்திற்கு வந்து தங்களது உணர்வுகளை மொழிவடிவமாக்கியமைக்கு மிக்க நன்றி.உங்கள் அனைவரது கருத்தக்களையும் உள்வாங்கிக்கொள்கிறேன்.

    ReplyDelete
  7. Anonymous2:29 pm

    ஒற்றை வரியில் இப்போது ஒன்றும் மறுமணம் கானல்நீர் அல்ல என்று கூறிவிட முடியாது. இந்தியா மிளிர்கிறது என்பது எவ்வளவு அபத்தமோ அவ்வாறுதான் இதுவும். முதல்மணமே கானல்நீர் சில பெண்களுக்கு.

    ReplyDelete
  8. Anonymous4:25 pm

    ஒற்றை வரியில் இப்போது ஒன்றும் மறுமணம் கானல்நீர் அல்ல என்று கூறிவிட முடியாது. இந்தியா மிளிர்கிறது என்பது எவ்வளவு அபத்தமோ அவ்வாறுதான் இதுவும். முதல்மணமே கானல்நீர் சில பெண்களுக்கு
    - anonymous2 vazhimozhikiradhu.

    ReplyDelete
  9. Anonymous6:03 pm

    இப்பொழுதும் , சில பத்தாண்டுகளுக்குள்ளும் மறுமணம் என்பது சிக்கலாக இருக்கிறது என்னவோ உண்மை தான். ஆனால் இதே ஒரு 50 வருடங்களுக்கு முற்பட்ட எமது சமூகத்தில பரவலாகா நடந்துள்ளது. அப்போதிய காலச் சூழமைவு குறித்து தெளிவாகா எனக்கு தெரியாவிட்டாலும் அந்த காலத்தில இது சகசகாக நடந்துள்ளது என்பது உண்மை.

    ReplyDelete
  10. Anonymous6:37 pm

    ஒற்றை வரியில் இப்போது ஒன்றும் மறுமணம் கானல்நீர் அல்ல என்று கூறிவிட முடியாது. இந்தியா மிளிர்கிறது என்பது எவ்வளவு அபத்தமோ அவ்வாறுதான் இதுவும். முதல்மணமே கானல்நீர் சில பெண்களுக்கு
    - (inthiya) anonymous3yum vazhimozhikiradhu.

    even though it is not as absurd as telling India Shining;-)

    ReplyDelete
  11. எனது உணர்வுகள் உங்களைப்போலவே இயல்பானவை. நான் வளரும் சமூகத்தை பூசி மெழுகவோ அன்றி சாயம் பூசி அழுகு படுத்தவோ எனக்கு இஸ்டமில்லை.கண்களின் ஊடே கண்டு கொண்டதையும் அதன் மூலம் நான் பெற்ற தேடலையும் அதன் உணர்வுகளையும் எனது மொழியாம் தமிழின் ஊடாக வெளிப்படுத்துவதில் எனக்கு அத்தனை உரிமையும் உள்ளது. அதே போலவே உங்களது வாழ்வின் தேடலை உணர்வின் மொழியினை மொழிவடிவில் தருகிறபோது நானும் அதை உள்வாங்கி கொள்ள தயாராகவே உள்ளேன்.

    ReplyDelete
  12. http://womankind.yarl.net/archives/2005/04/25/410
    எத்தனை உண்மையான பதில் முதல் மணமே கானல் நீராகிவிடுகிறது என்பதற்கு தோழியரில் வாசித்தது.. மனசை அன்பால் அழகுபடுத்த வேண்டியவர்களாக இருக்கிறோம்.

    ReplyDelete
  13. முதல்மணமோ மறுமணமோ
    இருமணம் இணையாமல் போயின்
    வாழ்வங்கே கானல்தான்.
    கவலைவேண்டாம் சகோதரி
    இப்போதெல்லாம் வயதான கைம்பெண்கூட
    வெள்ளையாடை தறிப்பதில்லை.
    என் வாழ்க்கையும் இதில் ஊடுருவியதுதான்,
    எனது மறுமணவாழ்வில் வந்தவர் மணமானவரே
    [ஒரு தோழியின் யோசனைப்படி]தற்ப்போது
    மிக்க நலம். உங்கள் வரிகளைப்படித்தபோது
    என் பழைய கவிதை ஒன்றின் நினைவு>

    நீரின்றிக்காய்ந்த
    மரநிழலில்
    கைம்பெண்.

    ReplyDelete
  14. ஆண்களும் /ஆணியத்தால் உருவாக்கப்பட்ட இந்த சமூகமும் கன்னிப் பெண் என்ற உருவாக்கம் புனிதமானது என்பதை நம்புகிறவர்கள். அந்த எண்ணம் இருக்கும் வரை எப்படி ஒரு ஆண் கைம்பெண்ணை திருமணம் செய்வான். நீங்கள் இந்த பிரச்சினையை மேலோட்டாமாக விமர்சனம் செய்திருப்பதாக எண்ணுகிறேன் ,நீங்களும் கூட "புனிதத்தை" நம்புகிறவற் போலும் .

    ReplyDelete
  15. Anonymous9:44 pm

    koothadi,
    aangalum/ aaniyathaal uruvaakappatta kirithuvamum, kuranum kaimbennin
    marumanathai anumadhikiradhu.

    vilai nilaththai tharisu nilam endru solli mukkadittu, veenadithadhu indhu madham matumdhaan.

    ReplyDelete
  16. //கற்பு என்பது பெண்ணிற்கு மட்டுமே என்கின்ற வேத வாக்கு இன்னமும் தூக்கியெறியப் படாததால் //

    வேதவாக்கை ஏன் நம்புகிறீர்கள்? வேதமென்பதும் மனிதன்... குறிப்பாக ஆண் படைத்தது, எழுதியது தான் என்பதை என்றைக்கு நீங்கள் உணருகிறீர்களோ அன்று தான் அனைத்து கொடுமைகளுக்கும் நிரந்தரத்தீர்வு கிட்டும்.

    //ஆனாலும் கணவனை இழந்த பெண்ணின் உணர்வுகளை இந்த சமூகம் புரிவதே கிடையாது. வெள்ளைச்சேலையைக்கொடுத்து அவளின் உணர்வை அதற்குள் மறைத்து விட்டு ஜாலம் காட்டுகிறது .//

    நீங்கள் இன்னும் எந்தக்காலத்தில் இருக்கிறீர்கள்? வெள்ளைப்புடவை காலமெல்லாம் மெல்ல மெல்ல மலையேறி விட்டது. பொட்டு பூ வைப்பதும் ஏற்பபுடையதாகி விட்டது. எதற்கெடுத்தாலும் எள்ளி நகையாடும் சில வெற்றுக்கும்பல்களுக்காக பயப்படுவது தான் உங்கள் பலவீனம்.

    ReplyDelete