ஆராரோ ஆரிவரோ ஆராரோ ஆரிவரோ.
கண்ணே என் கண்மணியே கண்ணுறங்கு கண்ணுறங்கு.
நேரமோ எட்டு மணி என் மகளே கண்ணுறங்கு
கண்ணுறங்கு கண்ணுறங்கு என் மகளே கண்ணுறங்கு
காலையிலை ஆறுமணி வேலைக்கு எழும்ப வேணும்.
தொல்லையின்றி படுத்தால்தான் வேலைக்குச் சென்றிடலாம்.
பாட்டி இல்லை, பாட்டன் இல்லை பக்கத்துணை யாருமில்லை.
பாசத்திற்கு பஞ்சமிங்கு டேக்கயருக்கு போக வேணும்.
ஆராரோ ஆரிவரோ ஆராரோ ஆரிவரோ.
ஆராரோ ஆரிவரோ ஆராரோ ஆரிவரோ.
வேலைக்குப் போனால் தான் காசு பணம் சேர்த்திடலாம்.
நாளைக்கு வளர்ந்து நீயும் படித்துழைத்துஈழத்தைஉயர்த்திடலாம். நான் மடிந்து போனாலும் என்கடமை தொடர்ந்திடுவாய்
கண்ணுறங்கு கண்ணுறங்கு என் மணியே கண்ணுறங்கு.
மழலை கேட்க முடியவில்லை;அமுதூட்ட முடியவில்லை
இதயம் கனக்கிறது, விழி நீர் வழிகிறது.
என் சோகம் சொல்லி விட்டால் உன் தூக்கம் கலைந்து போகும்.
கண்ணுறங்கு கண்ணுறங்கு என் மணியே கண்ணுறங்கு .
செல்லடிச் சத்தமில்லை, பெம்பர் கிபீர் உறுமலில்லை
சத்துணவுக் குறைவுமில்லை, மரத்தின் கீழ் உறக்கமில்லை.
பஞ்சணையில் தூங்குகின்றாய், பக்கத்துணைதான்யாருமில்லை.
கண்ணுறங்கு, கண்ணுறங்கு என் மணியே கண்ணுறங்கு.
பால்தடைக்கு ஊசி போட்டும் மார்பால் பால் சுரக்கிறது.
உணவுத் தடையால் அங்கு பாலே வற்றிப்போச்சு.
வெற்று மார்புள் முகம்புதைத்தழும் பிஞ்சுகள் தான் எத்தனை.
இதயம் கனக்கிறது, நெஞ்சும் வெடிக்கிறது, விழி நீர் எரிகிறது.
என் சோகம் சொல்லிவிட்டால் உன் தூக்கம் கலைந்து போகும்.
ஆராரோ ஆரிவரோ ஆராரோ ஆரிவரோ.
கண்ணே என் கண்மணியே கண்ணுறங்கு கண்ணுறங்கு.
நேரமோ எட்டு மணி என் மகளே கண்ணுறங்கு
கண்ணுறங்கு கண்ணுறங்கு என் மகளே கண்ணுறங்கு
ஆராரோ ஆரிவரோ ஆராரோ ஆரிவரோ.
நளாயினி தாமரைச்செல்வன்.
1994
அழகாய் இருக்கிறது ஆரிவரோ, புலம்பெயர் தாய்மாரின் வேதனக்குமுறல் இயல்பாகவந்திருக்கிறது.வாந்த்துக்கள்.
ReplyDeletenanre .
ReplyDelete