Monday, October 24, 2005

சுவிசில் ஓர் விடுமுறை நாளில் அதிகாலைப் பொழுது..

சிவத்தக் கொண்டை,
உருட்டும்
உருண்டை விழிகள்.
கொட்டாவி விட்டே
சோம்பல் முறித்து
விடியலைக் கூறும்.

வேலை அலுப்பில் இரவு
கட்டிலில் விழுந்த உடம்பு.

உடம்பசதி, நேரம்,
இவை எல்லாம் தெரியாமல்
அல்ப்ஸ் மலைத்தொடரின்
மடியில் இருந்து
விழுந்து தொலைக்கும்
சூரியக் குழந்தை.

அடர்ந்த
போர்வையையும்
தாண்டி
காலில் முத்தமிட்டு
அட சீ..

மெல்ல , மெல்ல,
உடம்பெல்லாம் சூடேற்றி
கண்மடலில் உரசி
சூடாய் முத்தமிட்டு
கண் மணியோடு
சண்டை பிடிக்கும்
சூரிய உதடு.

சிணுங்கும் என்னை
இறுக அணைத்து
இழுத்துச் செல்லும்
சூரியக் கைகள்.

யன்னல் திறந்து
வெளியில் பார்த்தால்
சூரியனின் முகம் பார்த்து
முத்தமிடும் சக்களத்தி .

அடடே..!
மஞ்சள் கம்பளம் மேல்
கறுத்தப் புள்ளிகள்.
திருஸ்டிக் கழிப்போ.!?

குளித்து
சுத்தபத்தமாய் ,
பறவைகளின்
இசை கேட்ட படி
சூரிய அடுப்பில்
உணவு தயாரிக்கும்
மரங்கள்.

இசை விற்பனர் எ
ல்லாம் தோற்றனர் போ.

ஒருவரை ஒருவர்
மிதித்தெழாது
கீதம் இசைக்கும்
குருவிகளின்
கான இசை.

ம்!
தனிப்பாட்டு ,
குழுப்பாட்டு
எல்லாம், எல்லாம்.
போதை ஏறும்.

உணர்வில் மேடை போட்டு
கானம் இசைக்கும் துள்ளல்.

மனசோ..
ஓசை எழுப்பாமல்
இறக்கை நெய்து
மரக்கிளையின்
பனித்துளிகளைக்
காயப்படுத்தாமல்
மரத்தில் அமர்வு.

இவற்றை எல்லாம்
தொலைத்து
அவசரமாய்ப் போகும்
ஆறு மணிப் புகையிரதம்.

ஓடி ,ஓடி
தானும் களைத்து
இயற்கையையும் மாசாக்கி
இன்று மட்டும்
ஓய்வெடுக்கும்
சிவப்பு ,வெள்ளை
கறுப்பாய் கார்கள்.

மலையின் உச்சியில்
பனி மணல்
பல இரவுகள்
வீணாய் நிலா.
யாருமில்லை அங்கு.,

ஏக்கத்தோடு
மலையுள்
முகம் மறைத்து

என் மனசு மட்டும்
கீச்சு மாச்சு தம்பளம்
விளையாடிய காலைகள்.

அருகில் பச்சை
மரக்குடைகளின் கீழ்
இரவுக் காதலனின்
சரசத்தை சுகித்த படி
சூரிய உதடுகளை
முத்தமிடத்துடிக்கும் பூக்கள்.

அதனுள் மரத்தை தறித்து
தாம் அமர செய்து வைத்துள்ள
பொறுப்பற்ற மனிதரின்
இருக்கும் அமர்வுகள்.

இவற்றை எல்லாம்
ரசிக்க மறந்து
உலக விடயத்துள்
மூழ்கிய படி
இருக்கும் அமர்வில்
வெள்ளைக்காரப் பாட்டி.

என்ன பார்க்கிறாய்..!?
வா.. வா.. அருகில்.

என்னைப்போல்
உன்னால் பூக்க முடியுமா ?
எனக் கூறி
சிவந்து,சிரித்து நிக்கும்
அப்பிள் பூக்கள்.

என் வீட்டுப்
பனங் கூடலுக்கால்
முகங்காட்டி வரும்
என் வீட்டுச்சூரியனை
நினைத்து, நினைத்து
சொல்ல நினைத்ததை
சொல்லாமல் தடுத்தது
தழுதழுத்த குரல்.

விம்மி , வெடித்து
மீண்டும் பஞ்சணையில்
முகம் புதைத்தழும்
உயிரும் மனசும்.

நளாயினி தாமரைச்செல்வன்.

6 comments:

  1. என்னதான் ஆல்ப்ஸ்மலைசூரியன் அழகாய் இருந்தாலும் அவன் இரவல் சூரியன், எங்கள் சூரியன் பனங்கூடலுக்கல் வரும் சூரியன்தான், கவிதை அருமை வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. எங்கள் முற்றத்து நிலா எங்கள் பனங் குhடல் சூரியன் எல்லாம் கனவாச்சு. நன்றி பிருந்தன். அது சரி அதென்ன அந்த மாதிரி சிகரெட் அடிக்கிறிங்கள்.

    ReplyDelete
  3. அன்பு கவிஞருக்கு
    பாராட்டுகள்
    தொடர்ந்து எழுதுங்கள்
    அன்பு
    இசாக்

    ReplyDelete
  4. என் வீட்டுப்
    பனங் கூடலுக்கால்
    முகங்காட்டி வரும்
    என் வீட்டுச்சூரியனை
    நினைத்து, நினைத்து
    சொல்ல நினைத்ததை
    சொல்லாமல் தடுத்தது
    தழுதழுத்த குரல்.
    ----------
    --------------

    அடுத்த எல்லைப்புறத்து
    சூரியன்
    ஆயிரம் தான்
    பவ்யம் காட்டினாலும்
    செருப்பணியாத உள்ளங்காலை
    சுட்டு வதைத்த
    சொந்த நிலத்து சூரியனைத் தேடித்தான்
    தாமரைகள் காத்திருக்கின்றன....

    சூரியனைக் காதலனாகக் கொண்டாலும்
    பொருத்தமான கவிதைப் பதிவு...

    பாராட்டுகள் நளாயினி...

    ReplyDelete
  5. கவி நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. சுடு தார் வீதியில் வெறும் காலுடன் நடந்த காலங்கள். முகிலோ மரநிழலோ இல்லாத சமயம். முகில் சிலசமயம் போகும் கைகாட்டி சின்ன நிழலை அடடாh.அதே ஒரு சொர்க்கம் தான். நன்றி நண்பன். நன்றி இசாக். நன்றி தர்சன்.

    ReplyDelete