Thursday, May 10, 2007

புதியமாதவியின் பார்வையில் உயிர்த்தீ.




நன்றி ஊடறு
http://udaru.blogdrive.com/archive/296.html


உலகில் எல்லா தத்துவவாதிகளும் ரொம்பவே புறக்கணித்துவிட்ட தலைப்புகளில் ஒன்று "நட்பு".ஆண்-பெண் இருவரின் சமத்துவமும் தனித்தன்மையும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிகழ்வாகி விடும்போது மட்டுமே ஆணும் பெண்ணும் சமாதானமாகி நட்புடன் வாழ முடியும். ஆனால் பெண்ணுக்கு சம உரிமையும் அவளுடைய தனித்தன்மையும் காலம் காலமாக நசுக்கப்பட்டே வந்துள்ளது.

எல்லா மதங்களையும் ஆண்கள்தான் உருவாக்கினார்கள். எல்லா சட்டங்களையும் ஆண்கள்தான் படைத்தார்கள். எல்லா கல்விமுறைகளையும் ஆண்கள்தான் நிர்ணயித்தார்கள். இப்படி எல்லாமே ஆண்களால் உண்டாக்கப்பட்டுள்ள சமுதாயத்தில் இதுவரைக்கும் அவள் தன் தனித்துவம் மரிக்காமல் பிழைத்திருப்பதே மாபெரும் அற்புதம்தான். அவளது ஆளுமைக்கு எதிராக இந்த அளவுக்கு தாக்குதல் நடந்தும் அவளின் தனித்துவம் எஞ்சியிருப்பது இயற்கையின் தேவை. இயற்கையே பெண்ணே பாதுகாத்து வந்துள்ளது எனலாம். உயிர்த்தீ அணையாமலிருக்க இயற்கை அவள் தனித்துவத்தை அடைகாத்து வந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

தடுக்கப்பட்ட அனைத்து தளங்களிலும் பெண் தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும்போது அதன் தன்மை முற்றிலும் வித்தியாசமாக அதிக அழகுடன் அதிக உயிர்ப்பு தன்மையுடன் இருக்கும்.

ஆடை கிழிந்தால் ஒட்டுப்போடலாம்
வானம் கிழிந்தால்..
கணவன் இல்லாது வாழ்ந்து முடியலாம்
காதலன் இல்லாது..?
என்று பஞ்சாப் கவிஞர் அம்ருதாப்ரிதம் விடுதலைக் காதலைப்பாடுவார்.

'ராக்கி கட்டி
நம் நட்பை
சகோதரப் பாசமாக
பரிணாமம் செய்து
தொடர நினைத்தேன்

நம் நட்பு
ராக்கி கயிற்றையும்
மஞ்சள் கயிற்றையும்விட
மேலானது -என்று
புன்னகையுடன் சொன்னாய்'

என்று நட்பின் உன்னத நிலையை 'நெல்லிக்கனி' கவிதையில் சொல்லுவார் கவிஞர் புதியமாதவி.

'தனியாக இருக்க எவரும் விரும்புவதில்லை. அவருக்கு நண்பர்கள் தேவைப்படுகிறார்கள்! நண்பர்கள் தேவைப்படும்வரை அவர் சரியான நண்பராக இருக்க முடியாது. ஏனென்றால் தேவை என்பது மற்றவரை ஒரு பொருளாக தாழ்த்தி விடுகிறது. தனித்திருக்க எவரால் முடியுமோ அவர் மட்டுமே நண்பராயிருக்கவும் முடியும். நட்பு- அது அவர் தேவை அல்ல. அவரது மகிழ்ச்சி. ' என்பார் ஓஷோ. நட்பின் இக்கருத்தைப் பிரதிபலிக்கும் கவிஞர் வைகைச்செல்வியின் இக்கவிதை. (இது முதல் அத்தியாயம் அல்ல -அம்மி க.தொ)

'நண்பனே!
எந்நேரத்திலும்
எதற்காகவும்
நீ என்னைப் பிரிந்து செல்லலாம்
அது உன்னுடைய சுதந்திரம்
சொல்லாமல் பிரிந்திட்டாய்
அதற்காக வருந்தாதே.
தண்ணிலவும் செங்கதிரும்
யார் அழைத்து வந்தன?
யார் சொல்லிப் போயின?
நீயும் பிரிந்து செல்லலாம்.
அது உனது சுதந்திரம்'

இப்படியாக தோழமை உணர்வுகள் குறித்து பல்வேறு பெண்கவிஞர்கள் தங்கள் கவிதைகளைப் படைத்துள்ளார்கள்.' அந்த வரிசையில் கவிஞர் நளாயினி தாமரைச்செல்வன் அவர்கள் தன் தோழமையை 'உயிர்த்தீ" யாக உருவகப்படுத்தி நட்புக்கு ஒரு மணிமண்டபம் படைத்துள்ளார் என்றுதான் சொல்லவேண்டும்.

எத்தனையோ செடி
வளர்க்கிறேன் வீட்டில்
தினமும் நீர் ஊற்றி
பசளை இட்டு
சூரிய ஒளி படவைத்து
அதெப்படி
சூரிய வெளியில்
பச்சையமே தயாரியாது
என்னுள் இத்தனை
பசுமையாக வளர முடிகிறது
உன்னால்

என்று மற்ற உறவுகளிலிருந்து நட்பின் பசுமை முற்றிலும் வேற்பட்டது என்பதை அறிவியல் பார்வையுடன் ஒப்பிட்டுச்
சொல்லுவார்.

'வால் பிய்ந்த பல்லியாய்
உன் ஞாபகங்களை
வெட்டிக்கொண்டாலும்
மீண்டும் மீண்டும்
பல மடங்கு
வீரியத்துடனும்
வேகத்துடனும்
வளரத்தான் செய்கிறது


என்று நடப்பியல் காட்சிகளையும் நட்புக்கு உருவகப்படுத்திக் காட்டி இருப்பார்.

'பேசாப் பொருளாகிய
ஆண்-பெண் நட்பு
நம்மால் பேசு
பொருளாகி உள்ளது'

என்று சொல்லியிருந்தாலும் கவிதைகள் முழுக்கவும் காதலும் நட்பும் பின்னிப்பிணைந்து ஒரு சில இடங்களில் மயங்கி ஒரே சாயலாய் முகம் காட்டி இருக்கிறது. காதல் நினைவுகளுக்கும் ஏக்கங்களுக்கும் இலக்கியங்கள் ஏற்கனவே சொல்லிவைத்துள்ள அனைத்தையும் நட்புக்குள்ளும் கவிஞர் அடைத்து வைக்க முயற்சி செய்கிறார். சில இடங்களில் கைகொடுக்கும் காட்சிகள் பல இடங்களில் மயக்கம் தரத்தான் செய்கின்றன.

"வெறும்
காதலையும் கமத்தையும்
உடலெங்கும் பூசிக்கொண்டு"
வாழும் மனிதர்களுக்கு தங்கள் நட்பின் உன்னதப் பக்குவ நிலை எங்கே புரியும்? என்று அங்கலாய்க்கும் கவிஞர்
பிறிதொரு இடத்தில்

நீ சொல்லித்தான்
நான் தெரிய வேண்டுமென்பதில்லை
உன் நிலை.

முட்டாளே
நீயும் என்னை
காதலிக்கக் கற்றுவிட்டாய்.

முக்கித்திணறி
மூர்ச்சையாவது
எனக்குப் புரிகிறது.

இப்போதாவது தெரிகிறதா
காதலின் வலி என்னவென்று..!

என்று சொல்லியிருப்பது வாசிப்பவனுக்கு மயக்கத்தை ஏற்படுத்தத்தான் செய்யும். கவிஞரே சொல்லியிருப்பது போல

நட்பா!? காதலா!?
பிரித்துப் பார்க்க முடியவில்லை
எப்படி வேண்டுமானாலும்
இருந்துவிட்டுப் போகட்டும்

பெண்ணுக்குள் இருக்கும் அக்கினிக்குஞ்சை யாராலும் அணைக்க முடியாது. காதலாய், நட்பாய் அவள் உயிர்த்தீ கசிந்துருகி உயிரின் அந்தம் வரைப் பரவி இந்த மண்ணுக்கு உயிர்ப்பிச்சைத் தருகிறது.

உயிர்த்தீ - கவிதைகள்
வெளியீடு - இமேஜ் ரூ இம்ப்ரெஷன், (உயிர்மை)
சென்னை 18
பக் - 144 , விலை- ரூ.70

No comments:

Post a Comment