Tuesday, September 20, 2005

நினைவுகள்..!




நினைவுகள்..!

நிலையாய் இல்லை
தலை கீழாயும்
மாறி மாறியும்
குறுக்கும் நெடுக்குமாய்
நடக்கிறேன்.

சிலசமயம்
அந்தரத்தில்
தொங்கும்
வெளவாலாய்.

இன்று
வெள்ளிக் கிழமை
வீட்டில்
பூக்களின் நறுமணம்
ஊதுபத்தியின் வாசம்
நிதானமாய் எரியும்
சுடர் விளக்கு
தாளித்த சமையல்
எதுவும்
என்நுகர்வில் இல்லை.

நீயும் நானும்
அவரவராய் இருந்துபேசிய
அந்தஆலமரவயல்வெளிநினைவுகள்
ஊமைப்பட
ஒளிப்பதிவு போல்
உயிரைச் சுட
நிதானமாய்
எரியும்சுடர் விளக்கை
வயல்வெளிக்காற்று வந்து
அலைக்களிக்கிறது.

இன்றும்
உன் கடிதம் வராததால்
உதிர்ந்த பூவாய்
எரிந்து முடிந்த
ஊதுபத்தியாய்
காற்றில் அணைந்த
விளக்காய்
பசியின்றி
உணவை வாங்கும்
இரைப்பையாய் நான்.

கண்ணாடி பார்க்கிறேன்.
நெற்றியில் மட்டும்
திருநீற்றுக் கீறு
மிளிர்கிறது.
உன் கடிதம்
நாளைவரும்என்ற
நம்பிக்கையில்
என் கண்களை
கடிதப் பெட்டிக்குள்
அடகு வைக்கிறேன்.

நளாயினி தாமரைச்செல்வன்.

5 comments:

  1. இனிய கவிதை.

    //எழுத்துலக சித்தாந்தங்கள் எல்லாம் காதல் மொழிகள் கூட ஆண்களுக்கே உரியதாக அவர்களால் மட்டுமே உச்சரிக்கும் வாசகங்களாக.//

    லீனா மணிமேகலை அவர்களின் "ஓற்றையிலையென" தொகுப்பு படித்ததில்லையா நீங்கள்?!! ஆம் எனில் அவசியம் படியுங்கள்.

    ReplyDelete
  2. நல்லாயிருக்கு மேடம்

    ReplyDelete
  3. "ஒற்றை இலையென" இன்னமும் வாசிக்க கிடைக்கவில்லை. அகம் சார்ந்த கவிதைகள் கவிதைகள் என கேள்விப்பட்டேன். நன்றி அருள்குமார். நன்றி கணேஸ். நலம் தானே.

    ReplyDelete
  4. நல்ல கவிதை நளாயினி...

    ஒற்றையிலையென முழுக்க முழுக்க காதல் பற்றியது அல்ல அகம்/புறம் இரண்டுமே சரிவர கலந்திருக்கும் கிடைக்கப்பெற்றால் வாசியுங்கள்...நல்ல கவிதை தொகுப்பு...

    ReplyDelete