யன்னல்களும்
அதன் திக்குகளும்
அதற் கூடே
மாறி மாறி தெரியும்
காட்சிகள் மட்டுமே
பழக்கப்பட்ட
இந்த பூமியில்;
வேகமாய் ஓடும்
றெயிலைப்போல்
என் மனசும்
ஈழம் விரைகிறது .
இப்படித்தான்
நினைவுச் சுரங்கத்தால்
மட்டுமே ஈழத்தை
அடைகிறேன்.
சிந்திய குருதிகளுக்குள்
எத்தனை காவியங்கள்.
எழுகின்ற அலைகளுக்குள்
எத்தனை முகம் தெரியா உணர்வுகள்.
இவர்களுக்கு மின்மினி
இல்லா இரவுகள் கூட
ஈழம் மிதந்துவரும்
கனவுகளைத்தான்
தந்திருக்கிறது.
பயத்தை அல்ல..
வெடித்து சிதறியது
அவர்கள்
உடல்கள் மட்டுமே
ஆனால் அவர் தம் கொள்கைகள்
மற்றையோர் மனங்களில்
ஆழமாய் புதைந்து
ஆணிவேர் விடுகிறது.
வேகமாய் ஓடிய ரயில்
கண்ணின் பிடிதூரம்
மறையும் முன்பே
குழந்தையின்
"அம்மா" எனும் ஓசை
செவிபாயும் .
தபால்காரன் மணிச்சத்தம்;
ஈழத்து சோகங்களை மட்டுமே
சுமந்து வரும் கடிதம்
நலமேதும் விசாரிக்காமல்.
வேலை
கணவன்
குழந்தை
சம்பளக்கவர்
என மீண்டும்
இயந்திர வாழ்க்கையுள்
ஐக்கியமாகிவிடுகிறோம்.
யன்னல்களுக்குள்
அடங்கிப்போன
எம் வாழ்வு போல்
உணர்வுகளும்
அடங்கித்தான் போகிறது.
நளாயினி தாமரைச்செல்வன்.
2002
கவி நன்றாய் இருக்கிறது வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி பிருந்தன்.
ReplyDelete