Wednesday, December 28, 2005

விடியலை நேரம் உணர்த்தினாலும்....

விடியலை நேரம் உணர்த்தினாலும்
பனிதூறும் காலத்தில்
சூரியன் வருவதில்லை.

வழமையான உடல் நிறையை விட
ஆறு ஏழு கிலோவால்
என் நிறை உடை வடிவில்
என்னைத் துரத்தும்.
தொட்டிலுக்குள் பார்த்தால்
எட்டு மாத செல்ல மகள்
கையால் முகம் போர்த்து
பஞ்சுக்குஞ்சாய் துயிலும் அழகு.

வெளியில் இறங்கும் போது
நற நற என என் காலடியில் உடையும்
பனிக்கண்ணாடித்துண்டங்கள் போல் என் மனசு .

கால்கள் நடுவீதியில் நடக்கும் போது
பூப்பூவாய் தேங்காய்ப்பூ பனித் தூவல்கள்.
தொட்டுப்பார்த்தால்

வாய் நீர் வடித்துக்கொண்டே
தள்ளுவண்டிக்குள் உறங்கும்
குழந்தையின் கன்னத்தின் மென்மை.

சிரித்து நின்ற மரங்கள் எல்லாம்
என் உணர்வைப்போல்
மரத்துத்தான் கிடக்கிறது .
விழியை மறைக்கும்

உப்பு நீரைப்போல்
மரங்களின் கிளை இலைகளை
மறைக்கும் பனித்துளிகள் .

யாரும் ஆறதல் கூறிவிட்டால்
உடைந்து விழுந்து கன்னக்கதுப்பை
ஈரமாக்க துடிக்கும்
உவர்ப்பு நீரைப்போல்
மரக்கிளைகளிலும்
கட்டிட கூரைகளிலும் தொங்கும்
பனிக்கண்டாடிக் கூர்முனைகள்.

ஊசியாய் குளிர் என்னைத்தாக்க
போரில் கண்முன்னே
தாயை இழந்த
குழந்தையின் படபடப்புப்போல்
என் உடல் மெல்ல நடுங்கும்.

மெல்ல அணைத்து
ஓசையின்றி முத்தமிட்டு
காப்பக காறியிடம்
குழந்தையை கொடுத்துவிட்டு
உணவு விடுதியில்
வேலையில் மூழ்கிற போது
நெருப்பு ,கொதி எண்ணெய் எல்லாமே
என் உடல் மேல் பட்ட வேதனை.

இறைச்சி மீன் வெட்டும்
கூரிய கத்தி கொண்டு
என் உடலை யாரோ
அறுப்பது போன்ற உணர்வு
பீறும் இரத்தமாய்
என் உணர்வுகள் எல்லாம்
என்னை கொன்று தின்னும்.
ரணப்படும் என் மனசு.

சொல்லமுடியாத துயரம்
என்னை அப்பும்.
ஓ என் செல்ல மகள்

என்னைத்தேடுவாளோ?

உடலில் உள்ள
உரோமம் எல்லாம் சேர்ந்து
ஒருவித சிலிர்ப்பைத்தந்து
விழிவழியே உப்பு நீரை வரவழைக்கும்.

நளாயினி தாமரைச்செல்வன்.

Saturday, December 24, 2005

முதன் முதல்.!

"அம்மா..!! முதன் முதல் கை ஒண்டை விட்டிட்டு நிக்கிறன். நீங்க ஓகே சொன்னாத்தான் நான் கையாலை கதிரையை பிடிப்பன். ஓகேயா?"

Friday, December 23, 2005

"ஸ்ஸ்ஸ் ஒருத்தருக்கும் சொல்ல வேண்டாம். ரகசியம் ஒண்டு"

"விழுழுறன் விழுழுறன்" "ஆஆஆ ..! அட்ட்டிடி விழுழும்ம்."


நீ செய்யும் குறும்பில்-என்
குழப்பம் தொலைந்து போகும்.

அம்மான்ரை குரல் மட்டும் கேக்குது. ஆனா அம்மாவை காணம்!!!!

Thursday, December 22, 2005

கட்ட்ட்டிப் பிடிச்சு முத்த்தமொண்டு வச்சு....


செல்லக் கருவிழியான்.

பிரசவம்...!


உயிரை சாவின் எல்லைக்கு
எடுத்துச்செல்லும்
அந்த வயிற்று வலியில்
எமக்கு என்ன தெரியும் .
வைத்தியர் சொல்வதையே
கிரகிக்க முடியாத நிலை.
நா வரண்டு போகும்
தொண்டை கட்டும்.
மசில்சுகள் வலி எடுக்கும்.
யாரோ கழுத்தை பிடித்தே
அமுக்கும் நிலையாக இருக்கும்.
கட்டிலால் எழும்பி
ஓட முயல தோன்றும்.
மலம் கழிக்க வேண்டும்
என்ற உணர்வு தோன்றும்.
வார்த்தைப்பகிர்தலுக்கே
அங்கு இடமில்லை.
ஏலுமானால் கைப்பாசை
சில சமயம் ஒத்துழைக்கும்.
மூச்சே வர மறுக்கும்
ஒரு சின்ன வினாடிக்குள்
மூச்சு மீண்டும் வரும்
ஆனாலும் களைத்த களைப்பில்
மூச்சு மீண்டும் அறுந்தே போகும்
மீண்டும் சில அறுபட்ட
வினாடித் துளியில் தம்மடக்கி
மூச்செடுக்க முயல்வோம்.
முடியவே முடியாது.
அருகில் நிற்கும் க
ணவரை எட்டிப்பிடித்தால்
சில சமயம் மூச்சு வந்து விடுமோ
என மனசு சொல்ல
தம்மடக்கி கை எட்டிப்போகும்
மீண்டும் சோர்ந்து விடும் கைகள்.
மீண்டும் கைப்பாசை கை தாவும்
தண்ணி என பெருவில் கொண்டு
வாயருகில் போகுமுன்
மூர்ச்சையாகும் தருணம்
மீண்டும் வந்துவிடும்.
கைப்பாசையும் மூர்சையாகும்
மயக்கம் வந்து வந்து போகும்
இறுதிக்கட்டத்தில்
முற்றுமுழுதாக மூர்ச்சையாகி விடுவோம்.
உயிர் இருக்கும்
உணர்வு இருக்கும்
அப்பப்போ வயிறு
இறுகி இறுகி
உடல் பின்பக்கமாக வளையும்.
கண் சொருகும்.
அப்பப்போ விழித்துப்
பார்க்க தோன்றும்.
ஆனாலும் முடிவதில்லை.
கத்த முடிவதில்லை
அசைய முடிவதில்லை.
உடலோ சோர்ந்து துவண்டு
அதை எடுத்துரைக்க வார்த்தைகள்
என்னிடம் இல்லை.
குழந்தை வருவதை
கருவிகள் காட்ட
அவசரம் அவசரம்
எல்லோரிலும் அவசரம்
இறுதியாக
சேர்த்து வைத்திருந்த
மிச்ச தைரியத்தையும்
பிய்ந்த உயிரையும்
ஒன்றாய்த்திரட்டி
வில்லாய் வளைய
குழந்தை மெதுமெதுவாக
தாதி கை தாவும்.
குழந்தை அழும் சத்தம் மட்டும்
எம் செவி வழி பாயும்.

நளாயினி தாமரைச்செல்வன்.
2002