Thursday, May 31, 2007

படத்தின் மேல் கிளிக்செய்யுங்கள்.

படத்தின் மேல் கிளிக்செய்யுங்கள்.

Wednesday, May 30, 2007

எரிந்த நூல் அகம்.

அகரம் எழுதிய மண்ணில்
கல்வித்தடம் பதிக்க
தமிழன் மூச்சாய்

நிமிர்ந்து நின்ற
நூல் அகம்
எரிந்து தவித்த கோரம்.

தழுவிப்புரட்ட
துடித்த கைகள்
சாம்பரை மட்டுமே
தொட்டழுத கோரம்.

விழி வர மறுத்த கண்ணீர்
முளைத்துப்பெருத்த உறுதி
இனவெறிக்கெதிராய்
சபதமெடுத்து
சங்கு முழங்கி
உயிர்த் தீ வளர்க்கும்
வேங்கைகள்.

நற்சிந்தனையை தரமறுத்து
ஏட்டுக்கல்வியையும்
பறித்த இனவெறி
முடிந்ததா?

தலைக்கனம் பிடித்த
தமிழன்.

ஓ! தலைக்கனம்
கல்விக்கனம்
வீரக்கனம்.

இனவெறி அரசால்
என்ன செய்ய முடிந்தது.
_____
நளாயினி தாமரைச்செல்வன்.

திருமணத்தின் பின் காதலைப்பற்றிப் பேசுவது கொலைக்குற்றம் என ஆகிவிட்ட கலாச்சாரத்தின் முகத்தில் ஓங்கி அறைகிறது 'உயிர்த்தீ'.

நளாயினியின் கவிதைவெளி
எழுதியவர்: க.வாசுதேவன்
Saturday, 26 May 2007
நன்றி http://www.appaal-tamil.com/

நளாயினி தாமரைச் செல்வனின் 'உயிர்த்தீ' மற்றும் 'நங்கூரம்'

தொடருந்துப் பயணங்களின் போதான வாசிப்பில் எப்போதுமே ஒரு விதத் தீவிரமிருப்பதாகப் படுகிறது.

'உயிர்த்தீ' யைக் எடுத்து முதற் கவிதையில் கண்ணையும் மனதையும் பதிக்கும் போது அது பயணத்தைப் பற்றிப்பேசுகிறது. புகையிரதப் பயணத்தைப்பற்றிப் பேசுகிறது. அல்லது புகையிரதப் பயணம் எனும் ஒரு படிமத்தைப் பற்றிப் பேசுகிறது. நிற்காத, நிறுத்தாத, தொடர்ந்து கொண்டேயிருக்கும் ஓரு பயணம்பற்றிப் பேசுகிறது.




இவ்வாறுதான் ஆரம்பிக்கிறது நளாயினியின் கவிதைப் பயணம் அல்லது காதற்பயணம். சாதாரணமான சொற்கள். சாதாரணமான எண்ணங்கள். அசாதாரணமான பிடிவாதம். உள்ளிருந்து உருக்குலைக்கும் உணர்வுகளை உள்ளுணர்ந்த வகையிலேயே வெளிப்படுத்துத்தலில் ஒரு புனிதமும் குழந்தைத்தனமும் உள்ளுறைந்து கிடக்கிறது.


யாரும் அறியா ஒரு கணத்தில், சுயத்தையும் மீறி, மனதில் மலையென விரியும் காதல்சார்ந்த அகப்பரிமாணங்கள் இன்பிருப்பை நோக்கிய ஞாபகங்களின் செங்கம்பள விரிப்பு. எவரில் இது உருவாகவில்லை? தம்முள் உள்ள குழந்தையைக் கொல்லாத எவர் இதற்கு விதிவிலக்காகினார்கள்? உயிருக்குள்ளிருந்து பாடும் பறவையின் குரல்வளையை நசுக்காதவர்கள் எவரால் இதனிடமிருந்து தப்பிக்கொள்ள முடிந்தது?

ஆனால், சாத்தான் நம்மைப்பார்த்துக் கொண்டிருக்கிறது. சமூகமெனும் சாத்தான். அதனிடம் ஒழுக்கம் உண்டு, கலாச்சாரம் உண்டு. அதனிடம் தீர்ப்புகள் உண்டு. அதனிடம் பொறாமையும் வக்கிரமும் உண்டு. மலையென விரியும் நினைவுகளும் மலையின் உச்சியைத் தொடும் அனுபவமும் சாத்தானின் தொடுகையினால் தொடடாற் சிணுங்கியைப்போல் சுருங்கிவிடுகிறது.

திருமணத்தின் பின் காதலைப்பற்றிப் பேசுவது கொலைக்குற்றம் என ஆகிவிட்ட கலாச்சாரத்தின் முகத்தில் ஓங்கி அறைகிறது 'உயிர்த்தீ'.

நளாயினி கையாளும் "தொட்டாற்சிணுங்கிப்" படிமம் சுற்றி வளையாமல் விடயத்தைத் நேரடியாகவே தொட்டு நிற்கிறது. தொட்டாற் சிணுங்கியின் தப்பிவாழும் இரகசியம் சுருங்கி வாழல். சுருங்கி வாழல் என்பது தன்னை மறைத்தல். தன்னை மறுத்தல்.

இத்தொடருந்தில் என்பக்கத்திலும், முன்னாலும் இருக்கும் எல்லோரையும் இல்லாமல் ஆக்குவதற்காகக் கண்களை மூடிக்கொள்கிறேன். பசும்வெளியை உறிஞ்சிக்கொண்டே பயணிக்கிறது புகையிரதம். கண்களை மீண்டும் திறந்து 'உயிர்த்தீ' யின் ஒன்பதாம் பக்கத்தை வாசிக்கிறேன். மீண்டும் கண்களை மூடுகிறேன். காலமழியும் ஒரு கணத்துள் உயிரின் அந்தம் வரை அதிர்வலைகள் பிறப்பெடுக்கின்றன. உயிரின் அந்தமென்பதே பிரபஞ்சத்துள் அழிந்துபோகிறது.


குளிரில் நடுங்கும் குருவிகளுக்குத் தலைசாய்க்க மடிகேட்கும் மனத்தின் வியாபக வீச்சத்தை புரிந்து கொள்வதற்குக் காதலித்திருக்கவேண்டும். காலம் தாழ்த்தி வந்து போகவேண்டிய வண்டி புறப்பட்டபின்னர் ஒரு போதும் மீண்டும் வராத ஒருவண்டிக்காகக் காத்திருக்கக் கற்றிருக்க வேண்டும்.


"பச்சைக் குழந்தையாய் அழுதிருக்கிறேன்" (பக்கம்14). பாரதக் கதைபடித்த சிறுவயது. கீசகன் வதைப்படலம். பாஞ்சாலியின் மீது கொண்ட அடங்காக் காதலினால் கீசகனின் படும் வேதனை. பஞ்சு மெத்தையிலும் முள்ளெனக் குத்தும் நிலவொளி. அப்போ புரியவில்லை. அனுபவமற்ற வயது. அனுபவித்த பின்னர்தான் புரிகிறது. பச்சைக் குழந்தையாய் நானும் அழுதிருக்கிறேன்.




"எமது உணர்வுகளை இரகசியமாக வைத்துக்கொள்". உன்னுடைய உணர்வுகள் என்னுடைய உணர்வுகள் என்றெல்லாம் இல்லை. அவை எமது உணர்வுகள். எம்மில் யாரேனும் ஒருவர் "எமது" உணர்வுகளை வைத்திருந்தால் போதும். அவை அழிவற்றவையாகிவிடும். நான் உன்னைக் காதலிக்கிறேன். ஒரு வேளை நீ என்னை காதலிக்காது போனால், "எமது" உணர்வுகள் என்னிடம் உள்ளவரையும் காதல் வாழும். இரகசியமாக வைத்துக்கொள், யாரும் வந்து கொச்சைப் படுத்திவிட்டுப்போகக் கூடாது பார்".

"உன்னை நான் இங்கு பத்திரமாகப் பாதுகாக்கிறேன்" (பக்கம் 19). "நானும் பாவம்".
நான் என்பது நானல்ல. இன்று நான் வேறொருத்தி அல்லது வேறொருவன். நீயும் அவ்வாறே. ஆனால், அந்தக் காதல்? அந்த நானும் அந்த நீயும் கொண்ட காதல்?


அதுவென்னாயிற்று?

அது அழிந்து விட்டதென்றால். நானும் நீயும் அழிந்து கொண்டிருப்பவர்களா? நம் இருத்தல் என்பது அழிவின் தொடர்ச்சியா? இல்லை. நிச்சயமாக நானும் நீயும் அழிவின் தொடர்ச்சிகளல்ல.
ஆகவே, அந்த நானும் அந்த நீயும் அந்த காதலும் உணர்வுகளும் அழிவற்றவையே. அந்த உன்னை இந்த நான் இங்கு பாதுகாக்கிறேன். அந்த நானை இந்த நீ அங்கு பாதுகாத்துக்கொள்.


அழிவற்றிருப்பதற்கு நமக்கு வேறு வழியில்லையென்பதைப் புரிந்து கொண்டாயானால் அதுவே போதும்.

எனக்கென்ன பைத்தியமா? காதலை அறிவுகொண்டு அளக்க முற்படுகிறேன் போலல்லவா படுகிறது. இருப்பு, வாழ்வு, அழிவு என்றெல்லாம் பிதற்றுகிறேன் போல் படுகிறது

நயாயினியின் கவிதைவெளி அறிவுத்தளத்தில் நிற்பவர்களுக்குக் கேலியாகப்படலாம். ஆனால், கிளித்தட்டு விளையாடிய காலத்திற்கு மனதை அழைத்துச் சென்ற பின்னர்தான் தெரிகிறது அவரின் கவிதைகள் எத்தனை அழகானவையென்று. அப்போதுதான் தெரிகிறது வெள்ளைச் சீருடை அணிந்து நளாயினி பாடசாலைக்குச் செல்லும் காட்சி. அப்போதுதான் தெரிகிறது நளாயினி பாடசாலைக்குக் கொண்டு செல்லும் புத்தகப் பக்கங்களுக்குள் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் கவிதைகளின் கையெழுத்துப் பிரதிகள்.

அவஸ்தைப்படலும், ஆற்றுப்படுத்தலுமாய் தொடர்கிறது கவிதைகள். முதுமை வருவதாகவும் முடிந்து போனதை எண்ணி என்னசெய்வதென்பதாகவும் அவ்வப்போ தேற்றல்கள். இருப்பினுமென்ன? எந்தத் தேற்றல்களும் நிரந்தரமானவையல்ல. எத்தனையாயிரம் பொய்களை வேண்டுமானாலும் மனம் தனக்கு வாரிவழங்கலாம். ஆனால் இழந்துபோன உண்மையை எத்தனை கோடி பொய்களாலும் மறைத்து விடமுடியாது.
"அடிக்கடி உமிழ் நீரை உமிழ்ந்து விழுங்கும்போது சுகமாகத்தான்உள்ளது" (பக்கம் 91). இருப்பினும் என்ன தொண்டைக்குள் சிக்கிக் கொண்ட முள்ளைச் சமிப்பதற்கு மார்க்கமில்லை. இந்நிலையில் மாற்றமேயில்லை.

இவையெல்லாவற்றையும் விட "ஆனாலும்புதிதாய் வரும் ஆண்டின் நாட்காட்டியை ஏற்கத் துடிக்கும் சுவரில் அறைந்த ஆணிபோல்தான் நாமும்" (பக்கம் 94) எனும் வரிகள் உணர்த்தி நிற்பது என்ன என்பதைப் புரிய அச்சம் எழுகிறது. வெறுமை, தோல்வி, விதியிடம் சரணடைந்து வருவதை ஏற்கும் மனப்பாங்கு எனப் பல்வேறு கருமைகளைப் பறைசாற்றுகிறது இந்தச் சுவராணிப்படிமம்.

கருமையாயிருப்பினும் நளாயினியின் கவிதையுலகம் அதிகாலைச் சூரியனின் கதிர்களைக் கண்டு குயில்பாடும் பாடல்களாக ஒலிக்கிறது. வசந்தகாலத்தையும் இலுப்பைப் பூக்களையும் காத்திருக்கும் அணில்களுக்கு இரையூட்டுகின்றன நளாயினியின் கவிதைகள்.

அவரது இன்னொரு தொகுப்பான 'நங்கூரமும்' அதே தளத்தில், அதே லயத்தில், அதே சுருதியில் தொடர்கிறது. இரண்டு தொகுப்புகளையும் ஒன்றாகவே ஆக்கியிருக்கலாம் என்றுகூடத் தோன்றுகிறது.

காதலைக் கேவலமென்றும், காதலிப்பது கேவலமென்றும் கூறும் மனிதர்கன் அதையெல்லாவற்றையும் விடக்கேவலமானவர்கள் எனும் ஒரு கவிஞனின் கூற்று மனதில் எழுகிறது. இப்போதெல்லாம் காதற்கவிதை எழுவது ஏதோ ஒரு விதமான "பிற்போக்குத்தனம்" என்று எண்ணும் ஒரு போக்கும் உள்ளது. என்ன செய்வது ? முடவர்கள் ஓடுபவர்களுக்கு வழங்கும் ஒழுக்கத்தீர்ப்புப் பற்றி என்ன சொல்வது ?

இரு தொகுப்புகளினதும் வடிவமைப்பு உள்ளடக்கத்தை நிறைவு செய்து பிரதிபலிக்கிறது. ஜீவன் எனப்பெயர்பெற்ற ஓவியர் நந்தா கந்தசாமியை எனக்கு நந்தகுமார் என்றுதான் தெரியும்.பன்னிரண்டு வயதில் நானும்அவரும் ஒரே வகுப்பில் படிக்க ஆரம்பித்து சில வருடங்கள் தொடர்ந்தோம். அப்போதிருந்து அவருக்குள்ளிருந்த ஓவியரை நானறிவேன். நளாயினியின் கவிதைகளை தனக்கேயுரிய கவித்துவ மனப்பாங்குடன் அவர் உள்வாங்கியிருப்பது கண்கூடு.

இப்போ நான் இறங்க வேண்டிய இடத்திற்கு தொடருந்து வந்தடைந்து விட்டது. கவிதைப் புத்தகங்களை மூடிக்கொள்கிறேன். வீடு சென்றதும் பூச்செடிகள் நாட்டும் போது மீண்டும் இக்கவிதைகளை மீட்டுப்பார்ப்பேன்.

பூக்களின் அழகு மிகுந்திருக்கும்.

க.வாசுதேவன்

26.05.2007.

நன்றி
http://www.appaal-tamil.com/index.php?option=content&task=view&id=620&Itemid=55

Tuesday, May 22, 2007

உயிர்த்தீ......6

இந்த குளிர்
எத்தனை அழகைத்தருகிறது.!
அப்படித்தான் நீயும் எனக்குள்!
ஆனால் பல காயங்களைத் தந்தபடி

உதடுகள் கைகள்
வெடித்து இரத்தம்
உறைவது போல்
பலத்த வலிகள்.

ஊசியாய்
பல துளைகள்
உடல் எங்கும்
அறையும்
குளிர் போல்.

முள்ளந் தண்டிற் கூடாக
குளிர் உடலெங்கம்
பரவுவதை நன்கு
உணர முடிகிறது.

இந்த குளிரில் இருந்து
காப்பதற்கான முயற்சி

உடலை நன்கு இறுக்கியபடி
என்னையே எனக்குள்
இழுத்து வைத்துக்கொண்டு
ஓரிடத்தில் உட்கார்ந்து விட்டேன்.

இந்த குளிரில் இருந்து
என்னைக் காக்க
ஒரு போர்வையாவது தாவேன்.

(எனது "உயிர்த்தீ" கவிதைத்தொகுதியில் இருந்து.)

Monday, May 21, 2007

முடிச்சவிழ்க்கப்படாத மர்மங்கள்.



photo by nalayiny.

படத்தின் மேல் கிளிக்செய்து பெரிதாக பார்க்கமுடியும்.

Friday, May 18, 2007

எனக்கே எனக்கான சூரியன் நீ.

photo by nalayiny.




படத்தின் மேல் கிளிக்செய்து பெரிதாக பார்க்கமுடியும்.

Wednesday, May 16, 2007

HYcoo poem.

1)உறவுகளை காணோம்.

மலர்க் கொத்துக்கள்.

முதியோர் இல்லம்.



2)ஈழ வான்பரப்பில்

இயந்திரப் பறவைகள்

தமிழின அறுவடை.


3)சிறகரிந்து

வீட்டில் கற்கும் கிளி

பெண்.


4)பசி

ஏப்பம் விட்டது

அம்மா தயே.


5)உழாது

விதைத்த நெல்மணி

சிசுக்கொலை.


6)முத்தம்

கலைத்த முகில்

கார் கூந்தல்


7)அம்மா திரித்த

கயிறு

தொப்புள் கொடி.



8)சூரியனின்

கை பிடித்துப் போகிறாள்.

சூரிய காந்திப்பூ



9)

மனிதம்

மண்டியிட மறுப்பு

போர்




10)சிவந்த விழி

கன்னத்தளும்பு

அராஜக கணவன்

ஆக்கம் நளாயினி தாமரைச்செல்வன்.

Saturday, May 12, 2007

ப.வி.ஸ்ரீரங்கன் பார்வையில் எனது கவித்தொகுதிகள்.

நன்றி திண்ணை.கொம்.

http://www.thinnai.com/?module=displaystory&story_id=60611091&format=html



நளாயினி தாமரைச் செல்வன்:உயிர்த்தீ ,நங்கூரம்.


"குறுங்கை இரும்புலிக் கோள்வல் ஏற்றை
ப+நுதல் இரும்பிடி புலம்பத் தாக்கித்
தாழ்நீர் நனந்தலைப் பெருங்களி றடூஉம்
கல்லக வெற்பன்" - நற்.36| 1-4

முன்னொரு காலத்தில்...பகிடிக்குப் பாடியவொரு கவிதையில் சுவைப்பதற்குப் பாவையின் அழகே முதலிடமாக...எனினும் மனதில் உரசி விரியும் ஒரு அற்ப உணர்வாக இந்த நெடி பண்டுதொட்டு வீசியபடிதாம் இருக்கிறது!இந்த நெடி மிகப் பழமையானது.அதன் சாரம் உயிரினது இருப்போடு உரசிக்கொண்ட அகாலப் பொழுதில்தாம் அது"காதல்"என்ற கோதாவில் நம்மிடம் அறிமுகமாகிறது.

"கவிழ்மயிர் எருத்திற் செந்நாய் ஏற்றை
குருளைப்பன்றி கொள்ளாது கழியும்
சுரன்"-ஐங்.397| 1-3

எனக்குத் தெரிந்த இந்தச் சமாச்சாரம் வெறும் புணர்வின் உந்துதலால் எப்பவோ தோன்றி என்னைத் தாழ்த்தியபடி,தடவியபடி,எனது காலை வாரியபடி மெல்லக் கொல்லும்!எனக்கும் அப்பப்ப நேசிக்கத் தெரிந்திருக்கிறது.நான் எனக்குள் கும்மியடிப்பதற்காகக் "காதலித்த"வரலாறு மிகக் குறுகியது.அந்தக் குறுகிய பொழுதில் எனக்கு நானே எமனாக விரிந்ததும் உண்டு.ஒரு அப்பாவியாய் வாழ்வில் குறுக்கிட்டவளை வசமாக வதைப்பதில் நான் எமனுக்கு நிகரானவன் என்பது அந்தக்"காதலின்"மறு பக்கமாய் நிழல் பரப்பிய இன்றைய பொழுதில் ஒருசில "காதற் கவிதைகளை"நளாயினி தாமரைச் செல்வன் தந்திருக்கிறார்!

"நங்கூரம்"
"உயிர்த்தீ"

நளாயினியின் முதற் தொகுப்பு நங்கூரம்!அது கடலிலிட்ட நங்கூரமாகவே இருப்பதில் வியப்பில்லை.அங்குமிங்குமாகவே படித்துப்பார்த்தேன்.பிடித்ததென்று கூறுமளவுக்கு அவரது உணர்வுகள் எதுவும் என்னை ஒன்றுஞ் செய்யவில்லை.ஆரம்பக் காலத்து எழுத்துகளுக்கு எப்பவும் இந்தக் கதைதாம்.எனினும் அவை பேசுவது படிமங்களில்பட்டுச் சிந்திப்பதன் உணர்வு தரும்"ஏற்ற இறக்கங்களாக"இருப்பதும் சாத்தியமானதே.

"உன்னை என் விழிகள் கண்டதும்
என்னமாய்ப் படபடக்கும்
அதனோடு கூச்சமும்,காதலும்
என்னுள் பவனி வரும்.
எனக்கு அருகில்
நீ வரும் போது
ப+கம்ப அதிர்வு..."-நங்கூரம்,நளாயினி.

காதல் என்பது காமத்தின் நெருக்குதல் தரும் தரும அடிதாம்.அதைமீறி அதற்கென்றொரு மண்ணுமில்லை.பச்சைக் கருக்கு மட்டையால சாத்தும் பருவக் கோளாறுக்கு புலம்பித்திரிதல் "எதிர்பால்"எழும் வினையோடு அலைந்து,சல்லாபத்துக்கான தோலின் தேடுதலோடு வண்டிகட்டி"காதற் சுமை"காவித் திரிவது மனித மொழிகளுக்குள் பல்வினைப் பயனாய்க் கிடந்தலைகிறது.

"காமம் காமம் என்ப காமம்
அணங்கும் பிணியு மன்றே நுணங்கிக்
கடுத்தலும் தணிதலும் இன்றே யானை
குளகுமென் றான்மதம் போலப்
பாணியு முடைத்தது காணுநர்ப் பெறினே" குறுந்தொகை.136

எந்தக் காலத்தில் நின்றாலும்,நிலைத்தாலும் சிந்தனைத் தொடர்ச்சிக்கு ஒரு குறுக்கு மதில் கட்டிக்கொள்ள முடிந்திருக்கா?எதைப்பற்றியுரைப்பினும்-"இது"பற்றியுரைப்பதும் சற்றுக் கடுப்பாகித் தணிவதற்கானதாக மேவுவது சாலப் பொருந்தும்-இடம்- எனக்கு சற்று அதிகமானதாகப் படும்போது, நான் காதல் என்றொரு கதையைக் கிளப்பி விடுவதுண்டு!அதுவும் சற்றுச் சிக்கல் நிறைந்த பருவத்தைக் கண்டால் "பட்டபாட்டுக்குக் கெட்டகேட்டுக்குப் பாயும்" உணர்வுக் கொதிக்கு நான் படும்பாடு அந்த"நாய்ப் பாடு",அப்படியொரு சக்கரத்தில் சுற்றிச் சுற்றி வரும் செக்கு மாட்டுச் சூழலை உடைத்தபடி நளாயினி எழ முனையும் தொகுப்பாக "உயிர்த்தீயை"படித்தபோது உணரத்தக்கதாக இருந்திருக்கிறது.

"மைவளம் ப+த்த மலரேர் மழைக்கண்ணார்
கைவளம் ப+த்த வடுவொடு காணாய் நீ
மொய்வளம் ப+த்த முயக்கம்யாம் கைப்படுத்தேம்
மெய்வளம் ப+த்த விளைதகு பொன்னணி"-பரி.18|16-19

பரிபாடலென்ன பண்டையப் பாட்டியின் பிதற்லென்ன எல்லாம் அந்தத் திசையை மேவுவதற்காகத் தெய்வத்தின்மீது "காதலாகிக் கசிந்து"தத்தம் காமத்தைக் குறியீடாக்கியது மட்டுமல்ல அதை வெளிப்படுத்துவதிலும் ஒரு புரட்சியைச் செய்து காட்டினாள் ஆண்டாள் என்ற சீமாட்டி.சிரித்து,இரசித்து,சுவைத்துத் தமிழை ஆண்டாள் அவள்.

நளாயினிக்கு உரிய காலம் இப்போது தோன்றிவிட்டது.பெண் தனது உணர்வுகளை அசலாக வெளிப்படத்தும் ஒரு காலத்தைக் கனிய வைத்த மானுட வளர்ச்சிப்போக்கு இத்தககைய உணர்வுகளை வெளிப்படையாகச் சொல்லும் அளவுக்கு ஆண்டாள்களை உருவகித்துள்ளது.இத்தகையவொரு சந்தர்ப்பத்தை எவரும் வருந்தித் தேடியதில்லை.எனினும் இதுவும் மிக முக்கியமானவுணர்தானே!

இஃதின்றி உண்டோ உலக உய்வு?
"காதல் காதல்,இல்லையேல் சாதல்,சாதல்"

என்றெல்லாம் நம்மட ஆட்கள் பாடிச் சென்றுள்ளான்கள்.இப்படி எக்கச்சக்கமான வீராதி வீரன்கள் எல்லாம் பாடிய நிலையில் நாமும் நளாயினியின்"காதற் கவிதைகளோடு"ஒன்றியும் ஒன்றாமலும் ஓரத்தில் நின்றபடி கொஞ்சம் உரசிப் பார்ப்பதும்,துரத்திப் பிடிப்பதும் சாத்தியமே.

நளாயினி தனது மனதைக் காதலோடு கண்டடைந்த பொழுதொன்று கவிதையாகிறது.

"...இப்போதாவது
கண்டெடுத்தேன!!
காமக் கிளர்வுகள் ஏதுமின்றி
உன் பாதச் சுவடுகளையும்
நினைவுகளையும்
சிரிப்பொலிகளையும்
துன்பங்களையும்
தாங்கியபடி
நட்பா!?காதலா!?
பிரித்துப் பார்க்க முடியவில்லை..."-உயிர்த்தீ.பக்கம்:8

எப்படியோ நளாயினிக்கும் இந்தப் பிரச்சனை வந்துவிட்டது.
நட்பு-காதல்!காதலென்றால் அதற்கு"எதிர்பால்"எழும் வினையுண்டென்று உணரத்தக்கவொரு சூழலில்தாம் இந்தப் பிரச்சனை முகத்தில் ஓங்கியொரு உதைவிடுகிறது.சும்மா நட்பு,காதலென்று உருட்டிப் புரட்டியொரு ரீல்விடுவதில் எந்தப் பலனுமில்லை.எனக்குக் காதலென்றால் அது எப்பவும் உடல் சார்ந்த"எதிர்பால் வினை"தாம்.இப்பவெல்லாம் நல்ல நல்ல மெழுகுத் தோல்களில்-அதுவும் பொன்னிறத் தோல்கள் படுத்தும்பாடு பெரும்பாடு!தமிழ்ச் சினிமாவின்"பெண்"என்னையெல்லாம் உருட்டிப் புரட்டியெடுத்து எச்சிலூறும் பொழுதுகளுக்குள் தள்ளி அவமானப்படுத்துவதும் மனசில் உரசும்போது,மீளவும்"காதலா,நட்பா"என்ற கேள்வியெல்லாம் நரகலோகத்துக்குரியது.

"மக்கள் பயந்து மனை அறம் ஆற்றுதல்
தக்கது அறிந்தார் தலைமைக் குணம் என்ப
பைத்தரவு அல்குல் படிற்றுரை யாரொடு
துய்த்துக் கழிப்பது தோற்றம் ஒன்றுஇன்றே."-வளையாபதி

எல்லோரும் நல்ல மனையாளோடு வாழ்வது...என்று பாடும்போது,நல்ல மனையானோடு(ஆண்பால்)வாழ்வதுபற்றி எந்தப் பெண்ணும் பாடித்தானாகவேண்டும்.அந்தக் காலத்துச் சுப்பர்களெல்லாம் தங்கட மனசில"பெண்டிர்களை"த் தகவமைத்தபோது"கொடியிடை,இஞ்சி இடுப்பழகி,நூலிடையாள்"என்று கக்கூசுக்குள்ளிருந்து யோசிச்சபோது,இந்தப் பெண்களும் தங்கட இரசனைகளை வலுவாகச் சொன்னாதாகச் சரித்திரமில்லை.கோகுலத்துப் பசுக்களெல்லாம் கோபாலனின் பேரைக்கேட்டே பலபடி பால் கறந்தபோது, நமது தேசத்துப் பெண்களெல்லாம் தத்தமது கோபாலர்களின் பெருமைகளைச் சொல்லித்தான் ஆகவேண்டும்.

"...உன் அழகு
உன் எழில்
உன் நடை
உன் தோற்றம்
உன் மதிநுட்பம்
அப்பப்பா
இன்னும் இன்னும்
எப்படி உன்னில் மட்டும்?..."-நங்கூரம்,பக்கம்:37

எல்லோரும் சொன்ன "பெருமைகளில்"உருவமைத்த ஊனங்களில் மிகுதி இன்புறல்"காதலிக்கும்"நளாயினிக்கும் சாத்தியமாவது புரிந்துகொள்ளத் தக்கதே.நமது வாழ்சூழலை மீறித் திடகாத்திரமாக எழுந்து உணர்வுகளைப் பகிர்வதற்கு மிகுந்த பயிற்சி வேண்டும்.அதை நளாயினி உயிர்த்தீயில் இப்படிச் சொல்கிறார்:

"உன் அங்கவஸ்த்திரம் கொண்டு
என் உயிர் பறித்தவனே!!
வாத்தியக் கருவி
ஒன்றைக் கண்டெடுத்தேன்.
அடடே!!
பார்த்துக் கொண்டிருக்கவே
எனக்குள் எத்தனை நாதம்."-உயிர்த்தீ,பக்கம்:48

கவிதையை வாசித்துவிட்டு,கொஞ்சம் கற்பனையை விரியவிட்டால் இரசவாதம் ரொம்பக் கறாராகவிரியும்!ஆனால் இது அப்படியல்ல.நளாயினியின் குடும்பம் இசைக் குடும்பம்-இசைக்கும் குடும்பம்!அவரால் கண்டெடுக்கப்பட்ட வாத்தியக் கருவி எதுவென்று பெரிதாக யோசிக்கத் தேவையில்லை.

இப்போதெல்லாம் காதலென்பதை தமிழ்ச் சினிமா மொழியில் சொல்வதைத் தவிர வேறுபல கூறுகளைப் பேசமுடியாதுள்ளது.தமிழ்ச் சினிமாவில் ஒரு துண்டு துணியோடு ஓடவோட விரட்டிப் பிடித்து,பிசைந்தெடுக்கப்படும் நாயகி "உண்டி சுருங்குதல் பெண்டிற்கு அழகு"என்று பிரக்டிக்கலாகாச் சொல்லும்போது,நாமும் அவளின் பொக்கிளின்(தொப்புள்) அழகோடு சங்கமித்து,நம்மை வருத்தும்போது-

"மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பு மிகை,அவை உள்வழிப்
பற்றா வினையாய்ப் பல பல யோனிகள்
அற்றா யுழலும் அறிதற்கு அரிதே."-வளையாபதி.

இப்படி வளையாபதியில் பாடுகிறதையும் கொஞ்சம் யோசித்துக் கிடக்கத்தாம் வேண்டும்.ஆனால் நளாயினி காதலிப்பதின் சுகத்தையும்,வலியையும்-தன்னைப் புரிவதையும்,உணர்வதையும் உயிர்த் தீயில் சொல்லும்போது அதையும் செவிகொண்டு கேட்பதில் நான் எதையும் இழப்பதற்கில்லைத்தாம்.

"என் உடலுக்கு
உயிர் தா.
என் இதயத்திற்குச் சுவாசம் தா.
என் நரம்புகளுள்
உணர்வு சேர்.
என் விழிகளுக்கு
ஒளிய+ட்டு.
எனக்குள் கவிதை
ஊற்றாய் வா.
நீ தந்த உயிர் மூச்சு
என்னை விட்டுப் பிரியும்வரை
உன்னையே என் கவி
தொழுது நிற்கும்..." என்று எழுதிய நளாயினிதாம் இப்படியும் எழுதுகிறார்:

"என் எதிர்பார்ப்புகள் எல்லாமே
தொலைந்து போவதாய்.
கல்லெறிந்தே கொல்லும் மனிதர்
வார்த்தை அம்புகளால்.
என் இதயத்தால் வழிகிறது குருதி...
...என்னைச் சூழ இருந்த
நண்பரைக் காணவில்லை.

அவர்களின்(ஒருமை இங்கே பன்மையுற்றிருப்பினும்...)சாயலில்
மர்ம மனிதர் பலர்.
என்னை நரபலி எடுக்கத் துடிக்கும் அவசரம்..." - உயித்தீ,பக்கம்:122

பறந்து பறந்து காதலைப் பாடினாலும் நாம் இந்தச் சமூதாயத்துள் கால் பதித்தேதாம் இருக்கிறோம் என்பதையும் நளாயினி புரிந்தே இருக்கிறார்.இந்தப் புரிதல் அவரிடம் நல்ல படைப்புகளைக் காலப்போக்கில் எதிர்பார்க்கத் தூண்டுகிறது.

"விரிதிரைப் பெருங்கடல் வளைய உலகமும்
அரிதுபெறு சிறப்பிற் புத்தேள் நாடும்
இரண்டுந் தூக்கிற் சீர்சா லாவே
ப+ப்போல் உண்கண் பொன்போல் மேனி
மாண்வரி அல்குற் குறுமகள்
தோள் மாறு படூஉம் வைகலோ டெமக்கே."-(குறுந்தொகை:101)

ப.வி.ஸ்ரீரங்கன்
01.11.2006

Friday, May 11, 2007

நவீன ஓவியத்தின் கூறுகள். 2

photo by nalayiny.


யாருடைய காலடித்தடம்.? ரணப்பட்டு கிடக்கிறது.

“நங்கூரம்” கவிதைத் தொகுப்பு -ஓர் அறிமுகம்!

-ஓர் அறிமுகம்!
-ரவி(சுவிஸ்) -
நன்றி http://www.vaarppu.com/





“புதிதாய்ப் பிறந்துவிட்டுப் போகிறேன்”

அந்த வீதியில்
நீயும் நானும்
நட்பாய்த் தெரிந்த
முகம் ஒன்று

நானோ நட்பாய்
சிரித்து வைத்தேன்

ஆனால் நீயோ
அவனைப் பார்த்து
என்ன சிரிப்பு
எனக் கூறியபோது
ஏனோ அதிகம்
இடிந்துபோனது
நம் காதல்தான்.

உனக்கான காத்திருப்பில்
நீ வரப் பிந்தியதால்
என் நண்பனோடு
சிரித்துக் கதைத்தேன்.

ஆனால் நீயோ
என்ன கதைத்தாய் என
என்னைக் குடைந்தெடுத்து
குற்றக் கூண்டில்
நிறுத்தினாய் பார்
அப்போ என் மனம்
நீ என்மீது வைத்துள்ள
காதலையும் நம்பிக்கையையும்
ஆய்வுசெய்து
அறிக்கை எழுதத் தவறவில்லை.

என் கூந்தலை வெட்டியதற்காய்
எப்படியெல்லாம் திட்டித்
தீர்த்தாய்
நான் உன்னிலிருந்து விலகிப்
போகவல்லவா செய்துவிட்டாய்.

காதல் என்றால் என்னவென்று
தெரியுமா உனக்கு?
எனக்கே எனக்கான வாழ்வையும்
உனக்கே உனக்கான வாழ்வையும்
நீயும் நானும்
மனம் கோர்த்து
வாழ்ந்து பார்ப்பதுதான்

அதற்காய்
என் வாழ்வை
என் விருப்புவெறுப்பை
எல்லாம் துறந்து
உனக்காய் மட்டும் என் விருப்பு வெறுப்போடு
உனக்காய் வாழ
எனக்கு இஸ்டமில்லை.

நீ நினைக்கும்
குருட்டு
செவிட்டு
ஊமைக் காதலியாக நான்
இருப்பேன் என நினையாதே.

என்னை சிதை ஏற்றாமல்
என்னை எனக்கே
திருப்பித் தந்துவிடு.

போதும்
நீ என்மீது வைத்த காதலும்
அதன் மீதான நம்பிக்கையும்.

போனால் போகிறது
நான் உன்மீது
கொண்ட காதலைப் புதைத்து
மீண்டும் புதிதாய்
பிறந்துவிடப் போகிறேன்.

-நளாயினி

காதல் பற்றி சினிமா சலிக்கச் சலிக்கப் பேசிவருகிறது. இன்று காசுக்குக் கவிதை பண்ணும் சினிமா பாடலாசிரியர்களிலிருந்து திருப்திக்காக எழுதும் கவிஞர்கள் வரையும் பேசிக்கொண்டுதானிருக்கிறார்கள். கவிதை எழுதுவது காதலுக்குத் தகுதியாய் இழையோடும் புள்ளி வரையிலும் கூட பெரிது படுத்தப்பட்டுக் கொண்டிருப்பது காதல். பண்டித சிகாமணிகளிலிருந்து அரட்டை அரங்கிப்போர் வரையிலும் படாத பாடுபட்டு இழுத்து வைத்து வரையறை செய்கிறார்கள். நட்பு, அன்பு, காதல் இதுவெல்லாம் கற்பிதம் என்கின்றனர் பின் நவீனத்துவ மொழிபெயர்ப்பில் அதுவறிந்தோர். ஒன்றை மட்டும் சொல்ல முடிகிறது. நிலவும் இந்த ஆண் பெண் உறவு முறைகளில் உளவியல் முறைமைக்குள் அதனடிப்படையான வாழ்முறைக்குள் காதல் என்பது உணர்வு சார்ந்து உணர்ச்சி சார்ந்து செயற்படுகிறது என்பதை சொல்ல முடியும். நட்பு அன்பு என்பதும் அப்படியே. அதுவும் கூட்டு வாழ்முறைக்குள் இது அதிகம் செயற்பட வாய்ப்பு உண்டு. அதேயளவு இவற்றின் மீதான இடக்குமுடக்குகளும் உண்டு. ஆக வாழ்நிலை சார்ந்து பேசப்படும் பொருளாக இவைகளெல்லாம் இருக்கிறது எனலாம். அறிவியல் பூர்வமாக காதலை நட்பை அன்பை கற்பிதமாக நிறுவக் கூடிய அல்லது நிறுவ முயல்பவர்கள் கூட தனது தாயின் இறப்பில் கண்ணீர் வடிக்கின்றனர்தான்.

“காதல் என்பது பொறாமையின் இன்னொரு வடிவம் என்பார்கள். காதல் என்பது வெறும் "சென்டிமென்ட் பிளாக் மெயில்" என்றே நான் கருதுகிறேன். இரு உடல்கள் சேருவதற்கு நமக்கு ஒரு கலாச்சார காரணம் தேவைப் படுகிறது. அதற்கு நாம் காதல் என்று பெயரிட்டுள்ளோம்...” என்கிறார் சோபாசக்தி, மலையாள இதழொன்றுக்கான தனது பேட்டியில்.

நூற்றாண்டுகளாக கொடுமைகளை அனுபவித்துவந்த பில்லீ கறுப்பின மக்களின் ஆத்மாவோடு பேசிய பாடகி.. காதலைப் பற்றி இவ்வாறு பாடினாள்...

“உறக்கமற்ற விழிகளோடு ஒவ்வொரு விடியலையும்
நீ எதிர்கொள்ளும் வரையிலும்...
காதலில் தோல்வியைச் சந்திக்கும் வரையிலும்...
அந்தத் தோல்வியின் மீது நீ வெறுப்புக் கொள்ளும் வரையிலும்...
உனக்குத் தெரியாது காதல் என்றால் என்னவென்று.”
என்று அரங்குகள் அதிர பாடித் திரிந்தாள்.

காதல் உயிரினும் மேலானது என்றவாறாக அதிமுக்கியத்துவம் கொடுத்துப் பேசுவது போலவே இதெல்லாம் கற்பிதம் என்ற உலர்த்தலுக்குப் பயப்பட்டு மௌனமாய் அடக்கி வாசிக்கும் அறிவுசீவிகளுக்கும் இடையில் பலவாறான வடிவில் பேசுபொருளாக அது இருந்து கொண்டுதானிருக்கிறது.

காதலை நட்பு அன்பு தோழமை என்பவற்றிற்கு கொடுத்த முக்கியத்துவத்தை விட பூதாகாரப்படுத்த -கட்டமைக்கப் பட்டிருக்கும் இந்த ஆண்-பெண் உறவு முறைக்குள் உளவியல் முறைமைக்குள்- உடல் மீதான வேட்கை முக்கியமானதுதான். அதனால் காதல் எதிர்ப்பால் தளத்துக்குள் உலாவுகிறது. கவிதையுள்ளும் இப்படியே.

நளாயினி காதல் என்றால் என்னவென்று இப்படிச் சொல்கிறார்...

“எனக்கே எனக்கான வாழ்வையும்
உனக்கே உனக்கான வாழ்வையும்
நியும் நானும்
மனம் கோர்த்து
வாழ்ந்து பார்ப்பதுதான்

அதற்காய்
என் வாழ்வை
என் விருப்புவெறுப்பை
எல்லாம் துறந்து
உனக்காய் மட்டும் என் விருப்பு வெறுப்போடு
உனக்காய் வாழ
எனக்கு இஸ்டமில்லை”

இதே கவிதை நட்பையும் காதலையும் எதிர்கொள்வதை -இவ் அறிமுகக் குறிப்பு தொடக்கத்தில் உள்வாங்கியுள்ள- “புதிதாய்ப் பிறந்துவிட்டுப் போகிறேன்” என்ற கவிதையில் பார்த்திருப்பீர்கள்.

நங்கூரம் நளாயினியின் முதல் கவிதைத் தொகுதி. தான் படைத்த காதல் கவிதைகளை தொகுப்பாக்கியிருக்கிறார். பெண் தனது மனநிலையில் நின்று பேசும் பொருளாக பொதுமையாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அது படைப்பை அளப்பதற்கான அளவுகோலுமி;ல்லை. பெரும்பாலும் ஆண் எழுத்தாளர்களிடம் வைக்கப்படாத இந்த அளவுகோல் பெண் எழுத்தாளர்களிடம் நீட்டப்படுவதுண்டு. இங்கு நளாயினி தனது நிலையில் நின்று பேசுகிறார். அவரது கவிதைகள் பேசுகின்றன. பொருந்திப் போவதான அனுபவங்கள் உணர்வுகள் கொண்டவர்களிடம் அவரது கவிதைகள் பேசுகின்றன.

உடற் தொடுகை மட்டுமின்றி எதிர்பார்ப்பு ஏமாற்றம் தோல்வி வெற்றி கோபம் பணிவு விரக்தி நம்பிக்கை...என முரண்களுக்கிடையே எட்டப்படும் உணர்வுநிலை உணர்ச்சிநிலை மனிதஜீவியை இரத்தமும் சதையும் கொண்ட இயங்குபொருளாக்குகிறது. காதலிலும் இது செயற்படுகிறது. இவற்றை தனது கவிதைகளில் பதிவுசெய்திருக்கிறார் நளாயினி.

உன் கடிதம்
நாளை வரும்
என்ற நம்பிக்கையில்
என் கண்களை
கடிதப் பெட்டிக்குள்
அடகுவைக்கிறேன்.
(பக்.14)

யாருக்கும் தெரியாமல்
உன் நினைவுகளைச் சுமந்தபடி
நானும்
என் நினைவுகளைச் சுமந்தபடி
நீயும்
காத்திருக்கும் காத்திருப்புகள்
எவ்வளவு அற்புதமானவை
(பக்.16)

இப்படியாய் காத்திருப்பின் சுகங்களைச் சொல்லும் கவிஞர் சுவாரசியமாக சிறுவயது நினைவுகளில் இவருடன் அறிமுகமாகிறார்.

ஓ இவன் என் முதல் கணவன்
அந்தப் புழுதி மண்ணில்
மூக்கு வடிய
கொன்றைப் பூப் பறித்து
இரு மாலை சூட்டி
தென்னோலை பிடுங்கி
தாலி செய்து
நானும் இவனும்
மாலை மாற்ற
அயல்வீட்டுச் சிறுவர் சிறுமியர்
பீப்பீப்பீ டும்டும்
என மங்கல வாழ்த்தொலிக்க
என் கழுத்தில் தாலி கட்டியவன்.
இவனுக்கு மண்ணில் சோறுகறி சமைத்து
சிரட்டையில்
உணவு கொடுத்தேன்
எனது ஐந்து வயதில்(பக்.48,49)

“இவர்கள் யார் தடுக்க” என்ற கவிதை காதலன் காதலி இடையில் முரண்நிலைகளை உரையாடலாக்கி நம்பிக்கைகளை வலியுறுத்துகிறது. அதுமட்டுமன்றி பொதுவில் ஆண்கள் கருத்தாளுமை செலுத்துபவர்களாகவும் பெண்கள் துவண்டுவிடுபவர்களாகவும் காட்டப்படும் ஆண்நோக்கு நிலையை தலைகீழாக்கியிருக்கிறார் இக் கவிதையில்.
கவிதை இவ்வாறு முடிவுறுகிறது.

காதலன் - “ஓ! நாம் இணைந்தால் பெற்றொர் சாவதாய்...”
காதலி- “எல்லாம் பொய்.
எந்தப் பெற்றொரும்
பிள்ளைகள் காதலுக்காய்
செத்ததாய்ச் சரித்திரமில்லை.
இந்த இயற்கை எல்லாம்
நம்மை வாழச் சொல்லும்போது
இவர்கள் யார் தடுக்கு?” என்று கவிதையை முடிக்கிறார்.

“நாளும் காதல் கொள்வோம்” என்ற கவிதையில் காதல் இன்பம் பற்றிப் பேசுகிறார்.

அன்பை வெளிப்படுத்தத்
தெரியாதவர் எம் இனம்
துன்பம் இன்பம் என்பர்
உயிரைக் கொடுப்பேன் என்பர்
இன்பத்தை நாக்கு சுவர்களுக்குள் -என
நினைத்து அமுக்கிவிட்டனர்
வார்த்தையிலும் ஒவவோர் தொடுகையிலும் -ஏன்
நடத்தையிலும்கூட
இன்பம் உண்டு என
அறியாததும் ஏனோ?
காதலது நாளும் காதலென்றால்
எம் இனம்
காமமாய்ப் பார்ப்பதும் ஏனோ?
காதல் என்றால்
வார்த்தையிலும்
ஒவ்வோர் தொடுகையிலும் -ஏன்
நடத்தையிலும்கூட
நாளும் இன்பமாய்
காதல் கொள்வோம். (பக்.41)

பெண்கள் தமது உணர்ச்சிகளை வேட்கைகளை வெளிப்படையாகப் பேசினாலே காமமுறும் ஆண்மன வக்கிரங்கள் பெண்களை நுகர்பொருளாகப் பார்ப்பதன் வெளிப்பாடு. இந்த வெளிப்பாட்டை பூசிமெழுக இன்று பெண்கள் பாவிக்கும் உடல்சார்ந்த மொழிகளின்மீது கலாச்சாரக் கூச்சல் இடுகின்றனர். ஆண்உலகு வகுத்த ஒழுக்கங்களை சமூக ஒழுக்கமாக கேள்வியின்றி வரித்துக்கொண்ட அல்லது மனசின் ஒரு மூலையில்தன்னும் உறங்கவைத்துக் கொண்டிருக்கிற பெண்களும்கூட இந்தச் கூச்சலை நிகழ்த்துகின்றனர். இதை எதிர்கொள்ளும் உக்கிரமான தளத்தில் நளாயினியின் கவிதைகள் பேசவில்லை. ஆனாலும் உணர்ச்சிகளை வெளிப்படையாகப் பேசமுனையும் அவரின் உந்தல் இங்கு “மனத்திரையில்” தெரிகிறது...

நாம் இடைக்கிடை
சந்திக்கும் அந்த மாலைப் பொழுதுகளில்
உன்னை
ஆரத் தழுவத் துடிக்கும் அந்தக் கைகளை
வலுக்கட்டாயமாக இழுத்துப் பிடிக்கிறேன்.
உன்னை
முத்தமிடத் துடிக்கும் என் உதடுகளை
பற்களால் அடிக்கடி கடித்து
தண்டனை கொடுக்கிறேன்.
உன் கைவிரல்களுடன் கைகோர்க்கத் துடிக்கும்
என் விரல்களை
கைரேகைகளுடன் பின்னிக் கொள்கிறேன்... (பக்.32)
என்கிறார்.

சமூக வெறியுள் அகப்பட்ட காதலிடை பேசுகிறார்...
“நமக்கு வயதானதுபோல்
சமூகவெறிக்கும் வயதாகாதா என்ன?
புதிதாயல்லவா பிறப்பெடுக்கிறது...”

காதலி நொந்துகொள்ளவில்லை. காதலனிடம் கேட்கிறாள்...
“சமூகம் திருந்தாது.
நாம்தான் மாற வேண்டும்
காலம் போகிறது
வயதும் போகிறது
வாயேன் ஓடிப்போய் மாலை மாற்றுவோம்.”

உடனடிப் பிரச்சினைகளுக்கான தீர்வுக்கு சமூக மாற்றம்வரை காத்திருக்கக் கோரும் கோமாளித்தனத்துக்கு இங்கு விடை சொல்லப் பட்டிருக்கிறது. ஆனால் கவிஞர் றோகண உடனான காதலில் இதற்கு முரண்நிலை எடுப்பது தமிழ்த் தேசியத்தின் ஊட்டலோ என எண்ண வைத்துவிடுகிறார். இது ஒரு அவலம்தான்.

இனவெறி
மொழிவெறி
மதவெறி
எமக்கல்ல -உன்
இனத்துடன் மோத.
உரிமைவெறி ஒன்றுதான்.
அரசு உன் இனமாதலால் -எம்
உரிமை கிடைக்கும் வரை
கைகோர்ப்புகள் கனவில் மட்டுமே.
விடியலுக்காய்க் காத்திருப்போம். (பக்.47)

இத் தொகுப்பில் பாடல் வடிவிலமைந்த இரு கவிதைகளும் “தேதி ஒன்று குறிங்கையா”, “அழகு” இரண்டும் உள்ளடங்கியிருக்கிறது. இது கவிஞரின் இன்னொரு பரிமாணத்தைத் தொடுகிறது எனலாம்.

தொகுப்பின் பொதுவான உள்ளடக்கங்களுக்கு முரணானதாய் சராசரியாய் எழுதப்பட்டிருக்கும் வரிகள் இத் தொகுப்பில் சில வெளிப் பட்டிருக்கின்றன என்பதையும் சொல்லித்தான் ஆகவேண்டும்.. கவிதையின் காலக்குறிப்பு இல்லாததால் இவ் வரிகள் ஆரம்ப காலங்களில் எழுதப்பட்ட கவிதைகளில் வெளிப்பட்டவையா என்றும் எண்ணத் தோன்றுகிறது.
உதாரணமாய்...

காதல் தோல்விகளும் வெற்றிகளே
வாழ்வின் படிக்கற்களே
சாகாவரமாய் இதயமதில் வாழ்வதும்
காதல் தோல்விகளே.
காதல் என்றும் தோற்பதில்லை. (பக்.15)

உன் பாதத்தின் வேகம்
எனை உன்னோடு அழைக்கும்
உன் கரங்கள் சொல்லும் கதைகள்
எனை உனக்கே அர்ப்பணம் செய்யும்.... (பக்.36)

நீ என்னை விழிகளால்
பருகியபோதே
உன் விழித் தொலைநகல்மூலம்
உன் இதயத்தில் பிறின்ரானேன்... (பக்.38)

இந்த “வைர” வரிகளை தொகுப்பிலிருந்து வீசிவிடச் சொல்கிறது இக் கவிதைத் தொகுப்பின்மீதான என் வாசிப்பு.

கவிஞர் சொல்கிறார்...
மனச்சாட்சி கயிற்றின் விளிம்பில் நடப்பதால்
விமர்சன கல் எறிவுகளைக்கூட
மலர்களின் தாவலாய்
மாலை ஏற்புகளாய்
செங்கம்பள வரவேற்பாய்

இது எனக்கான பயணம்
எனக்கான இருப்பைக்கூட
உறுதிசெய்யும் படிநிலை. ... (பக்.57)

தேவையற்ற ரணவலிகளுக்கு
மனம் அசையா
வைராக்கியத்தை தீபமாய் ஏற்றி.
எனக்கானவை இனி
எனக்கானவைதான்
பகிர்தல்கள் இனி என்
பரந்த பசுமை வெளியுள் மட்டுமே.
இது எனக்கான பயணம்
எனக்கான இருப்பைக்கூட
உறுதிசெய்யும் படிநிலை... (பக்.59)

தொடருங்கள் நளாயினி.

குறிப்பு:
அட்டைப்பட ஓவியத்தின் மிளிர்வுக்கு நூலின் உள் வடிவமைப்பு (லேஅவுட்) ஈடுகொடுக்கவில்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. ஜீவனின் படைப்பாற்றல் இங்கு கணனி ஓவியமாக அற்புதமாக வெளிப்பட்டுள்ளது.

மேலும் “பூஜிக்கத் தொடங்கிவிட்டேன்” (பக்.29) என்ற கவிதை “உதடுகளுக்குக் காதல் கடிதம்” (பக்.63) என்ற தலைப்புடன் மீண்டும் தொகுக்கப்பட்டிருக்கிறது. இதேபோல் “காத்திருப்புகள்” (பக்.16) என்ற கவிதை “இன்ப வலி” (பக்.30) என்ற தலைப்புடன் மீண்டும் தொகுக்கப்பட்டிருக்கிறது. இது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய தவறுகள்.

Thursday, May 10, 2007

புதியமாதவியின் பார்வையில் உயிர்த்தீ.




நன்றி ஊடறு
http://udaru.blogdrive.com/archive/296.html


உலகில் எல்லா தத்துவவாதிகளும் ரொம்பவே புறக்கணித்துவிட்ட தலைப்புகளில் ஒன்று "நட்பு".ஆண்-பெண் இருவரின் சமத்துவமும் தனித்தன்மையும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிகழ்வாகி விடும்போது மட்டுமே ஆணும் பெண்ணும் சமாதானமாகி நட்புடன் வாழ முடியும். ஆனால் பெண்ணுக்கு சம உரிமையும் அவளுடைய தனித்தன்மையும் காலம் காலமாக நசுக்கப்பட்டே வந்துள்ளது.

எல்லா மதங்களையும் ஆண்கள்தான் உருவாக்கினார்கள். எல்லா சட்டங்களையும் ஆண்கள்தான் படைத்தார்கள். எல்லா கல்விமுறைகளையும் ஆண்கள்தான் நிர்ணயித்தார்கள். இப்படி எல்லாமே ஆண்களால் உண்டாக்கப்பட்டுள்ள சமுதாயத்தில் இதுவரைக்கும் அவள் தன் தனித்துவம் மரிக்காமல் பிழைத்திருப்பதே மாபெரும் அற்புதம்தான். அவளது ஆளுமைக்கு எதிராக இந்த அளவுக்கு தாக்குதல் நடந்தும் அவளின் தனித்துவம் எஞ்சியிருப்பது இயற்கையின் தேவை. இயற்கையே பெண்ணே பாதுகாத்து வந்துள்ளது எனலாம். உயிர்த்தீ அணையாமலிருக்க இயற்கை அவள் தனித்துவத்தை அடைகாத்து வந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

தடுக்கப்பட்ட அனைத்து தளங்களிலும் பெண் தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும்போது அதன் தன்மை முற்றிலும் வித்தியாசமாக அதிக அழகுடன் அதிக உயிர்ப்பு தன்மையுடன் இருக்கும்.

ஆடை கிழிந்தால் ஒட்டுப்போடலாம்
வானம் கிழிந்தால்..
கணவன் இல்லாது வாழ்ந்து முடியலாம்
காதலன் இல்லாது..?
என்று பஞ்சாப் கவிஞர் அம்ருதாப்ரிதம் விடுதலைக் காதலைப்பாடுவார்.

'ராக்கி கட்டி
நம் நட்பை
சகோதரப் பாசமாக
பரிணாமம் செய்து
தொடர நினைத்தேன்

நம் நட்பு
ராக்கி கயிற்றையும்
மஞ்சள் கயிற்றையும்விட
மேலானது -என்று
புன்னகையுடன் சொன்னாய்'

என்று நட்பின் உன்னத நிலையை 'நெல்லிக்கனி' கவிதையில் சொல்லுவார் கவிஞர் புதியமாதவி.

'தனியாக இருக்க எவரும் விரும்புவதில்லை. அவருக்கு நண்பர்கள் தேவைப்படுகிறார்கள்! நண்பர்கள் தேவைப்படும்வரை அவர் சரியான நண்பராக இருக்க முடியாது. ஏனென்றால் தேவை என்பது மற்றவரை ஒரு பொருளாக தாழ்த்தி விடுகிறது. தனித்திருக்க எவரால் முடியுமோ அவர் மட்டுமே நண்பராயிருக்கவும் முடியும். நட்பு- அது அவர் தேவை அல்ல. அவரது மகிழ்ச்சி. ' என்பார் ஓஷோ. நட்பின் இக்கருத்தைப் பிரதிபலிக்கும் கவிஞர் வைகைச்செல்வியின் இக்கவிதை. (இது முதல் அத்தியாயம் அல்ல -அம்மி க.தொ)

'நண்பனே!
எந்நேரத்திலும்
எதற்காகவும்
நீ என்னைப் பிரிந்து செல்லலாம்
அது உன்னுடைய சுதந்திரம்
சொல்லாமல் பிரிந்திட்டாய்
அதற்காக வருந்தாதே.
தண்ணிலவும் செங்கதிரும்
யார் அழைத்து வந்தன?
யார் சொல்லிப் போயின?
நீயும் பிரிந்து செல்லலாம்.
அது உனது சுதந்திரம்'

இப்படியாக தோழமை உணர்வுகள் குறித்து பல்வேறு பெண்கவிஞர்கள் தங்கள் கவிதைகளைப் படைத்துள்ளார்கள்.' அந்த வரிசையில் கவிஞர் நளாயினி தாமரைச்செல்வன் அவர்கள் தன் தோழமையை 'உயிர்த்தீ" யாக உருவகப்படுத்தி நட்புக்கு ஒரு மணிமண்டபம் படைத்துள்ளார் என்றுதான் சொல்லவேண்டும்.

எத்தனையோ செடி
வளர்க்கிறேன் வீட்டில்
தினமும் நீர் ஊற்றி
பசளை இட்டு
சூரிய ஒளி படவைத்து
அதெப்படி
சூரிய வெளியில்
பச்சையமே தயாரியாது
என்னுள் இத்தனை
பசுமையாக வளர முடிகிறது
உன்னால்

என்று மற்ற உறவுகளிலிருந்து நட்பின் பசுமை முற்றிலும் வேற்பட்டது என்பதை அறிவியல் பார்வையுடன் ஒப்பிட்டுச்
சொல்லுவார்.

'வால் பிய்ந்த பல்லியாய்
உன் ஞாபகங்களை
வெட்டிக்கொண்டாலும்
மீண்டும் மீண்டும்
பல மடங்கு
வீரியத்துடனும்
வேகத்துடனும்
வளரத்தான் செய்கிறது


என்று நடப்பியல் காட்சிகளையும் நட்புக்கு உருவகப்படுத்திக் காட்டி இருப்பார்.

'பேசாப் பொருளாகிய
ஆண்-பெண் நட்பு
நம்மால் பேசு
பொருளாகி உள்ளது'

என்று சொல்லியிருந்தாலும் கவிதைகள் முழுக்கவும் காதலும் நட்பும் பின்னிப்பிணைந்து ஒரு சில இடங்களில் மயங்கி ஒரே சாயலாய் முகம் காட்டி இருக்கிறது. காதல் நினைவுகளுக்கும் ஏக்கங்களுக்கும் இலக்கியங்கள் ஏற்கனவே சொல்லிவைத்துள்ள அனைத்தையும் நட்புக்குள்ளும் கவிஞர் அடைத்து வைக்க முயற்சி செய்கிறார். சில இடங்களில் கைகொடுக்கும் காட்சிகள் பல இடங்களில் மயக்கம் தரத்தான் செய்கின்றன.

"வெறும்
காதலையும் கமத்தையும்
உடலெங்கும் பூசிக்கொண்டு"
வாழும் மனிதர்களுக்கு தங்கள் நட்பின் உன்னதப் பக்குவ நிலை எங்கே புரியும்? என்று அங்கலாய்க்கும் கவிஞர்
பிறிதொரு இடத்தில்

நீ சொல்லித்தான்
நான் தெரிய வேண்டுமென்பதில்லை
உன் நிலை.

முட்டாளே
நீயும் என்னை
காதலிக்கக் கற்றுவிட்டாய்.

முக்கித்திணறி
மூர்ச்சையாவது
எனக்குப் புரிகிறது.

இப்போதாவது தெரிகிறதா
காதலின் வலி என்னவென்று..!

என்று சொல்லியிருப்பது வாசிப்பவனுக்கு மயக்கத்தை ஏற்படுத்தத்தான் செய்யும். கவிஞரே சொல்லியிருப்பது போல

நட்பா!? காதலா!?
பிரித்துப் பார்க்க முடியவில்லை
எப்படி வேண்டுமானாலும்
இருந்துவிட்டுப் போகட்டும்

பெண்ணுக்குள் இருக்கும் அக்கினிக்குஞ்சை யாராலும் அணைக்க முடியாது. காதலாய், நட்பாய் அவள் உயிர்த்தீ கசிந்துருகி உயிரின் அந்தம் வரைப் பரவி இந்த மண்ணுக்கு உயிர்ப்பிச்சைத் தருகிறது.

உயிர்த்தீ - கவிதைகள்
வெளியீடு - இமேஜ் ரூ இம்ப்ரெஷன், (உயிர்மை)
சென்னை 18
பக் - 144 , விலை- ரூ.70

Monday, May 07, 2007

என்ன சொல்ல.. என்ன சொல்ல.!



* மழலைத் தமிழ் பேசுகிற போது
தமிழ்ச் சோலை மலர்த்தோட்டத்துள்
கொய்து குவித்து வைத்துள்ள
பூக்கள் மேல் புரண்டெழும் உணர்வு.

* நீ செய்யும் குறும்பில்-என்
குழப்பம் தொலைந்து போகும்.

* உன் சிரிப்பலையில்-என்
சிந்தனை அமிழ்ந்து போகும்.

* உன் பார்வை ஒன்று போதும்
பனித்துகள்களாய் நான் மாற.

* உன் முத்தப்பதிப்பில்-என்
கருப்பை உன் சுகம் அறியும்.

* உன் மென்மையான அம்மா எனும்
உதட்டசைவில் என் மேனியில்
கோடி முத்தங்கள் பதிந்தெழும் உணர்வு.


நளாயினி தாமரைச்செல்வன்.