காதல் துய்த்து காதல் துய்த்து
காதல் தோய்த்த பலாச்சுழையாகி
உணர்வுகளை எல்லாம் ஒன்றாய்குவித்து
காதல் நோயில் கிறங்கிக் கிடப்பேன்.
கோபக்கனலை
மென்று விழுங்கி
என்னை நானே
வதைத்துக்கொள்வேன்.
போட்டி பொறாமை
வஞ்சம் பொய்மை
கணையாய் வந்தால்
போதி மரத்துப் புத்தனாவேன்.
அன்புச் சிறையுள்
என்னைப் பூட்டி
அணுவணுவாய்
ரசித்து மகிழ்வேன்
விடுதலை உணர்வை
மென்று தின்று
மனிதநேயம்
வளர்த்துக்கொள்வேன்.
தனிமைச்சுவரை
எனக்குள் அமைத்து
கிழமைக்கணக்காய்
அழுது சிரிப்பேன்.
மௌனம் மௌனம்
நன்றே என்று
மாயச் சிறையுள்
புகுந்து கொள்வேன்.
மழையில் நனைந்து
பனியில் உறைந்து
உணர்வுகள் சாக
மரத்துக்கிடப்பேன்.
நிலத்தில் நீந்தி
நீரில் நடந்து
வெற்றிப் படிகள்
ஏறிமகிழ்வேன்.
காதல் நோய் என்னை வதைத்து
வெறுமை என்னை துரத்தம் போது
கழுவில் ஏற்றி என்னை மாய்த்து
மீண்டும் மீண்டும் புதிதாய்ப் பிறப்பேன்.
நளாயினி
சுவிஸ்.
11/02/2007