Friday, September 30, 2005

உணர்வும் மனசும்.


நினைவுக் கவலைகளை
மூட்டை கட்டிவைத்துவிட்டு
இன்று மட்டும்
மனதுக்கு அமைதி வேண்டி
மலைப்பகுதி ஒன்றில்.
யாரும் இல்லை.
ம்! றிலாக்சாய் மனசு.

இனிமை இனிமை
ஆகா இன்பப்பொழுது.

வேலைப்பழு
குழந்தைகள் சினப்பு
கணவனின் அன்புத்தொல்லை
இன்னுமே வாசிக்காத
ஊரில் இருந்து வந்த கடிதம்
எல்லாம் விலத்தி
ஆகா இன்பம் இன்பம் .

கீச் கீச் என என்
காதுவரை தடவிபோகும்
குருவிகளின் சங்கீதம்.

எறிந்து விட்ட
சில்லறையாய்
மரக்கிளைகளுக்கால்
தெரியும் சூரியனின்
ஒளிக் கதிர்கள்.

பச்சைப் பசுமையாய்
இதம் தரும் குளிர் ஒன்று
என்னை படர்வதாய்.
சுகமான அனுபவம் தான்.
நீண்ட நேரமாய்.

நிலவுக்கு பயந்து
பரதேசம் போனதாய்
என்னிலை ஆனது.
ஈ ஒன்று
ஈஈ என்று
இன்னல் செய்து
என் அமைதியை
குழப்பி நின்றது.

கையை ஓங்கினேன்
அடித்துக்கொல்ல

மின்னலாய் மனதுள்
பாவம் பாவம் ..
அதுவும் உயிர்தானே.

கொல்வதை நிறுத்தி
ஈயை ரசிக்க
மனசு இசைந்தது.

பறப்பதும்
தன் ஈர உதடு பதித்து
முத்தமிட்ட படி
என்னில் அமர்வதும்
கிசுகிசுத்து
கதைகள் பல
என்காதில் சொல்வதும்.

என்ன சொன்னது
என உணர முயன்ற எனக்கு
இடியொன்று
என்னுள் இறங்கியதாய்.
ஆ பாவம்...
இத்தனை நேரமும்
ஈஈ என்று
தனக்கே உரிய
எத்தனை துன்பத்தை
எனக்கு சொன்னதோ..........?
நளாயினி தாமரைச்செல்வன்.
15-6-2000
தலை கொடு
தழை அறு
விடுதலை
நளாயினி தாமரைச்செல்வன்.
29-09-2003

Thursday, September 29, 2005

மறுமணம் என்பது பெண்களிற்கு ஏன் கானல் நீர்.....?

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்கிறது பழமொழி. அந்த திருமணபந்தத்தில் இணைந்து விட்ட இரு உடல்கள் விதி வசத்தால் இளவயதிலேயே உயிர் பறிக்கப்படுகிற போது அங்கு சமூக நீதி தடம் மாறிப்போகிறது.

கற்பு என்பது பெண்ணிற்கு மட்டுமே என்கின்ற வேத வாக்கு இன்னமும் தூக்கியெறியப் படாததால் பெண் பல இம்சைகளிற்கு ஆளாகிறாள். தனித்தே காலத்தை கடத்துபவளாக செத்து மடிகிறாள்.

உணர்வுகள் ;சமூகம் என்கின்ற பார்வைகளுள் சின்னாபின்னப்பட்டு பல துன்பங்களிற்கு ஆளாகி செத்து மடிய வேண்டிய ரணம் நிறைந்த வாழ்க்கை.
இது சமூகத்தின் ஓர வஞ்சக சிந்தனை. ஆண் மனைவியை இழக்கும் போது அந்த ஆணிற்கு மறு திருமணத்தை செய்ய முண்டியடிக்கும் இந்த சமூகம் பெண்ணின் விடயத்தில் பின்னிற்பது வேதனை தான்.


ஆனாலும் கணவனை இழந்த பெண்ணின் உணர்வுகளை இந்த சமூகம் புரிவதே கிடையாது. வெள்ளைச்சேலையைக்கொடுத்து அவளின் உணர்வை அதற்குள் மறைத்து விட்டு ஜாலம் காட்டுகிறது . பெண்கள் விழிப்பு பெற்று கலர் புடவையை உடுத்தாலும் அதற்கு அப்பால் உணர்வு என்பதை யாரும் பார்க்க மறந்து போகிறோம்.

ஆண்களிற்கு ஏதும் உடையில் மாற்றம் கிடையவே கிடையாது. புதுமாப்பிளைக் கோலம் பரிசாக. ஆண்களுக்கு ஒரு நீதி என்றும் பெண்களுக்கு ஒரு நீதியென்றும். எதையும் சமூக நோக்கோடும் மனிதாபிமான நோக்கோடும் நாம் இன்னமும் பார்க்க தொடங்கவில்லை.

எமது பண்பாட்டு விழுமியங்கள் சிலதை காலத்துக்கு ஏற்றவாறு புதிய நல்ல சிந்தனைக்கு ஏற்றவாறு தீயிட்டு கொழுத்த வேண்டியவர்களாக இருக்கிறோம்.அந்த தீயிடலுள் கணவனை இழந்த பெண்ணின் கொடுமை அடங்குகிறது. இது பற்றிய விழிப்புணர்வும் தேவையாகிறது. சமூக எழுச்சி தேவையாக உள்ளது அத்தனை சமூக மனங்களிலும் மாற்றம் உருவாக்கப்படல் வேண்டும்.

மனைவியை இழந்த ஆணுக்கு முண்டியடித்து திருமணத்தை செய்து வைக்கும் சமூகம் பெண்ணிற்கு மட்டும் தயக்கம் காண்பித்து வருகிறது. மனைவியை இழந்த ஆணால் குழந்தைகளை வளர்க்க முடியாது என காரணம் கூறி ஒருவாறாக திருமணத்தை செய்த வைத்துவிடுகிறது.

பெண் என்றதும் கடவுளாக பார்த்து ஒரு குழந்தையை கொடுத்தானே!! அந்த குழந்தையின் சந்தோசத்தில் வாழ்ந்து விடலாம் என தைரியம் கூறும் இந்த சமூகம் அதே தைரியத்தை ஏன் ஆணிற்கு கூற மறுக்கிறது.
அங்கே ஆணின் உணர்வுகள் உணர்ச்சிகளை புரிந்து கொண்டு சமூகம் தைரியமாக மறு திருமணத்தை செய்து வைத்துவிடுகிறது. அதே போல பெண்ணிற்கும் உணர்வுகளும் உணர்ச்சிகளும் இல்லை என கூறுவது எத்தனை மடமை.


எமது சமூகத்தில் மனைவியை இழந்த ஆணை திருமணம் செய்ய முன்வரும் பெண்களைப்போல் கணவனை இழந்த பெண்ணை திருமணம் செய்யவரும் ஆண்கள் மிக குறைவே. அங்கொன்றும் இங்கொன்றுமாக கைவிட்டு எண்ணிவிட முடியுமே அன்றி புள்ளி விபரத்தரவுகளை எடுத்து விட முடியாது.

எமது சமூகத்தில் கணவனை இழந்த பெண்ணை திருமணம் செய்ய ஆண்கள் பின்ணிற்பதற்கு நான்கு காரணங்களை முன்வைக்கலாம்.

1) சீதனம்.
2) கற்பு என்பதை தனித்து பெண்ணிற்கு மட்டுமே என்கின்ற பிடிவாத கொள்கை.
3) ஆணின் வயதை விட பெண்ணின் வயது குறைவாக இருக்க வேண்டும் என்கின்ற கொள்கை.
4) முதல் கணவனின் நினைவு தொல்லை தரலாம் என்கின்ற பயம். ஆண்களிற்கு .

நினைவுகள் இருக்கும் தான் அதனை அனுசரித்து அத்தனைக்கும் ஆறுதலாக இருந்து விட்டால் எத்தனை உயர்வாய் அவளின் மனதில். !!

இந்த நான்கு காரணங்களாலும் கணவனை இழந்த பெண்ணிற்கு மறுமணம் என்பது கானல் நீராகிறது.
கணவனை இழந்த ஆணை திருமணம் செய்த பெண்கள் எத்தனை இன்பமாக வாழ்கிறார்கள். எப்படி?!! அந்த ஆணின் மனதை புரிந்து அத்தனை துன்ப துயரத்திலும் பங்கெடுத்து எத்தனை சாதுரியமாக வாழ்கிறாள்.

சில பெண்களிடம் இருந்து படிப்பதற்கு நிறைய உள்ளது இந்த சமூகத்திற்கு.

ஒரு பெண் மனைவியை இழந்த ஆணை திருமணம் செய்ய முன்வருகிறாள் என்றால் இங்கு சீதனம் என்கின்ற பிடியில் இருந்து தன்னை காக்கும் முயற்சியே. சில நல்ல உள்ளங்கள் அந்த ஆணின் உணர்வுகளை புரிந்து திருமணம் செய்ய முன்வந்திருப்பதும் கண் கூடே.

எது எப்படியோ நாம் மனித மனங்கள் உணர்வுகள் உணர்ச்சிகள் என பரந்து பட்டு சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.

மறு மணம் என்பது எத்தனை தேவை என ஒரு மாத கணவன் மனைவி பிரிவு கூறியும் கூட எமது சமூகம் பாராமுகமாக இருப்பது தான் புரியவில்லை. அத்தனையும் ஆணாதிக்க சமூகத்தின் எச்சமாய்.

இங்கு பிள்ளைகளின் மனநிலை என்பது அடுத்த ஒரு காரணமாக மனக்கண்முன் எழுந்து நிக்கிறது. பிள்ளைகளிற்கு ஆசுவாசமாக எடுத்துரைத்தால் நிச்சயமாக புரியும் பக்குவம் அவர்களிற்கு வரும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனாலும் நிதர்சன வாழ்வில் இது சாத்தியமா என்பது கேள்விக்குறியே.

ஆனாலும் மனைவியை இழந்த ஆண் மறுமணத்திற்கு தயாராகும் போது பிள்ளைகளின் மனநிலையை பார்த்தா மணம் முடிக்கிறார் என்பதும் இங்கு பெரியதொரு கேள்விக்கணையாக மனதில் எழுகிறது.

காலப்போக்கில் குழந்தைகளிற்கு அன்பும் அரவணைப்பும் கிடைக்கிறபோது புரிதல் என்பது சாத்தியமே.

ஆகையால் கணவனை இழந்த பெண்ணிற்கு மறுமணம் என்பது அத்தியாவசியமாகிறது. தாராளமாக கணவனை இழந்த பெண்கள் ஆண்கள் முன்வரும் பட்சத்தில் விரும்பின் மறுமணத்தை தாராளமாக ஏற்றுக்கொள்ளலாம்.


என்ன பாவம் நாம் செய்தோம்?
மானிடராய் பிறந்தோர்க்கு
மரணம் அது நிச்சயம்.
சிரிக்கும் பூக்களாய்

திரிந்த எமை
சிறையில் பூட்டுவது தகுமோ?

கணவனின்
இழப்பை விட
சமூகம் செய்யும்
கொடுமை
அதைவிட பெரிதெமக்கு.

கோவிலில் கூட
வெள்ளைப்பூவை
வைத்துத்தான்
அதிஸ்டம் பார்ப்பர்.

வீதியில் நாம்
நடந்து போகையில்
தெருநாயாய்
பார்வையால் உதைப்பர்.

வெள்ளைப்பூக்களை
அர்ச்சனைக்கு எடுக்கும்
பார்ப்பணியரால்
வந்த கொடுமை இது

பள்ளிச்சிறுவர்க்கு
வெள்ளை உடையை
கொடுத்துவிட்டு
அப்பளுக்கற்ற
உள்ளம் அதற்குள் என
கவி பாடுவர்.

எம்மை மட்டும்
முளுவியளம்
சரியில்லை என
எப்படித்தான் ஆக்கினரோ?

போர்க்கொடுமையை
பூகம்ப அதிர்வுகளை
புயலை
வெள்ளப்பெருக்கை
அத்தனை அழிவுகளையும்
எம்மை வைத்தே
வர்ணனை செய்வர்.

இத்தனை கவிஞர்
இத்தரையிருப்பினும் எம்
உணர்வைப்புரியாமல
முற்றும்.


நளாயினி தாமரைச்செல்வன்.
02-03-2003

Wednesday, September 28, 2005

குழந்தைகளை நேசி.
குதூகலம் கொள்.
மூப்பைத் தள்ளிப்போடு.
நளாயினி தாமரைச்செல்வன்.
29-09-2003
சிந்தனை வளர்.
செயல் கொள்.
உன்னத வாழ்வு.
நளாயினி தாமரைச்செல்வன்.
29-09-2003
எல்லை தகர்.
அறிவால் வேலியிடு.
போர் இல்லை.
நளாயினி தாமரைச்செல்வன்.
29-09-2003
விழிகளைத் திற
இயற்கையுள் இறக்கு
இன்பம் உனக்குள்.
நளாயினி தாமரைச்செல்வன்.
29-09-2003

Tuesday, September 27, 2005

உடலில் மாற்றம்.உடலில் மாற்றம்._
ஐம் புலன்களையும்-நான்
அடக்கிக் கொண்டாலும்
உன் வருகையின்
முன் மொழிதலை-என்
தோல்கள்
உணர்த்தி விடுகின்றன.
அதன் பின்னர்
அடுக்கடுக்காய்
உடலில் மாற்றம்.
உமிழ்நீர் சுரக்க மறுத்து
நா அண்ணத்தில்
ஒட்டிக் கொள்ளும்.
பின் தொடர்ந்து
வருகிறான்வருகிறான்- என
இதயம் பிரசவிப்பது
செவிவரை கேட்கும்.
காதல் உணர்வை
பயம் மேய
கால்கள் நடை தளரும்.
நீ அருகில்
வந்து விட்டால்
உடல் உரோமம்
கூச் செறியும்.
அப்பப்பா!
விழிகளா இவை!
ஒவ்வோர்
முகங்களையும்
வேவு பார்க்கும்.
தெரியா முகங்கள்
என்றால்
மனசோ
ஆனந்தம் கொள்ளும்.
முகமொன்று
தெரிந்து விட்டால்
உடலும்,உணர்வும்
உசார் பெறும்.
அப்போ
நீ ஓர் வழிப்போக்கனாய்
என்னை முந்திச்செல்பவனாய்,
இல்லை என்றால்
நான் ஒரு பாதசாரியாய்
உன்னை முந்திச்
செல்பவளாய்.
நான் ஒரு பாதசாரியாய்
உன்னை விலத்தி வந்ததால்
இப்போ
என் மனசுஇங்கே
புரண்டு அழுகிறது.
நித்திரை துறந்து
துடிக்கிறது.
அடுத்த சந்திப்பில்
நிச்சயமாய்
தெரிந்த முகம்
வந்தால் என்ன?
உன்னுடன்
கைகோர்த்து
நடைபயில்வேன்.
விசர் மனசு,
இப்படித்தான்
எத்தனை முறை
சபதமெடுக்கும்.
நான் ஒரு மக்கு,
இது கூட
உன் மீதான காதலை
இன்னும் அதிகமாய்
உசுப்பி விடுகிறது
என்பதை
அறியாதவளாய் இருக்கிறேன்.

நளாயினி தாமரைச்செல்வன்.
1997
சிந்தனை கொள்
சிறை உடை.
நீயாய் வாழ்.
நளாயினி தாமரைச்செல்வன்.
29-09-2003
கருவாசம் கொள்.
தாய்மையை உணர்.
சிசுக்கொலை முற்றுப்புள்ளி.

நளாயினி தாமரைச்செல்வன்.
29-09-2003

Sunday, September 25, 2005

உராய்வு (கவிதையோடு கரைதல்....)


உராய்வு கவிதைத்தொகுதி என் கைசேர்ந்த போது அதன் அட்டைப்படம் என் உணர்வில் கலந்த போது தாயின் கருப்பையில் ஒரு கரு நீந்துவது போல என் மனக் கண்முன் காட்சி தந்தது. மிகுந்த பயபக்தியுடன் ஒரு தாய்மைக்கே உரிய உணர்வோடுதான் என்னால் அந்த புத்தகத்தை தொடமுடிந்தது என்றால் மிகையாகாது.

உண்மையிலேயே எனது கைகளில் புதிய புத்தகம் கிடைத்தால் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஓடி ஓடி மூச்சிரைக்க கவிப்பசி தீர்த்த பின் தான் அட்டைப்படத்தில் இருந்து இறுதி பின் மட்டைப் புறம்மட்டும் படிப்பேன்.ஆனால் இந்த கவித்தொகுதி என்கை கிடைத்தபோது,... கிடைத்த போது என்பதை விட தவழ்ந்த போது என்னுள் மூச்சிரைக்க ஓடி ஓடி கவிப்பசிதீர்க்க முடியாமல் போய்விட்டது.

ஒரு கரு ஒன்று புத்தக வடிவில் என்கையில் தவழ்கின்ற தாய்மை உணர்வுதான் அதனை தடுத்தது எனலாம். அட்டைப் படத்தின் முக்கியத்தவத்தை இதன் மூலம் உரணமுடிகிறது என்னால்.

அந்த உராய்வு என்ற எழுத்து வடிவம் குhட சில நிமிடங்கள் என்னை தாமதிக்கச்செய்து விட்டது. வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டள்ளது. அதை அத்தகையதொரு வடிவமாக வடிவமைத்த ரொபேட்டுக்கும் பாராட்டுக்கள். இனி கவிதையுள் செலல்லாம் வாருங்கள்.

கவிதைதத்தொகுதி - உராய்வு
பக்கங்கள்-128
ஓவியங்கள்- மூனா
நூல் வடிவமைப்பு-நான்காம் தமிழ்.
கணணி வரைகலை-நான்காம் தமிழ்.
தலைப்பு எழுத்து- ரொபேட்.
வெளியீடு-வி.Nஐ.பதிப்பகம்.திருகோணமலை.
கவிதைகள்-54.

"காலத்தின் கவிக் குhர்" இவன் என்கின்ற ஏ.சி.தாசீசியஸ் அவர்களின் தாரக மந்திரத்தோடு தொடங்குகிறது.இக் கவி நூல்.அன்புடன் உராய்வுடன் நன்றியுடன் என முறையே கவிஞர் கி.பி அரவிந்தனது பார்வை அடுத்து கவிஞனுடைய பார்வை என விரிகிறது இன் நூல்.அந்தந்த கவிதைகளுள் இறங்கி அதற்கு தகுந்த மாதிரியான உணர்வுகளை படங்களிற்குhடாக கொண்டு வந்திருக்கிறார் கிறுக்கல் மன்னன் மூனா அவர்கள்.

இனி கவிதையுள் செல்லலாம் வாருங்கள்.

புதிய ஆண்டு ஒன்றை வரவேற்கின்றதான கவிதை. அப்படித்தான் நான் நினைத்தேன். வாசித்து முடித்த போது அந்த நினைப்பு காணாமல் போய் விட்டது. மிகுந்த ஆக்குரோசம் பொங்க கேள்விக் கணைகளோடு தொடங்கி புதியதோர் ஆண்டாய் மிளிர நீ என்னென்ன எல்லாம் செய்ய வேண்டும் என கட்டளை போடுவதாய் அமைகிறது.

அன்பு உள்ள இடத்தில்தானே ஆக்குரோசமும் கோபமும் கொப்பளிக்க முடியும். நாம் யாரிலெல்லாம் அதிகமாக அன்பு வைக்கிறோமோ அவர்களோடு தானே சண்டைபிடிக்கவும்; கெஞ்சவும்; குhத்தாடவும் முடியும்.

அதே போல புதிய ஆண்டிற்கு கட்டளை இட்டுவிட்டு வரங்கள் சில கேட்கிறார். புலம்பெயர்ந்த கட்டிடப்பனிக்கால வாழ்வை வெறுத்து ஓடும் ஒரு குழந்தையை இதில் காணமுடிகிறது.ஒரு தாயிடம் குழந்தை அடம்பிடிக்கிற தன்மை இந்த கவிதையில் காணப்படுகிறது. ஒரு குழந்தைக்கே உரிய துடினம் இந்த கவிதையில் தெரிகிறது. கவி வார்த்தைத்தேடல் பெருமிதத்தை தருகிறது. கவிதை வரிகள் ஒவ்வொன்றுமே இழுத்துவரப்படாமல் இயல்பாக வந்து அமர்ந்திருக்கிறது.உணர்வின் வடிவாய் கவிதைவரிகள் நர்த்தனமிடுகின்றன.

மொழியின் சிறப்பு பற்றி குhறுவதாக அமைகிறது அடுத்த கவிதை.

அன்னையின் தாலாட்டில் கண்வளர்ந்தவர்கள் தானே நாமெல்லாம். மொழிவளத்தை அங்கு தானே அறிந்து கொண்டோம். அந்த மொழியின் சிறப்பு இந்த அண்டமெல்லாம் தளைக்கும் என எத்தனை உறுதியிட்டு அறுதியிடுகிறார்.

ஆழக்கடலின் உள்ளிருந்தும்
கோளத்தமிழின் ஒலி முழங்கும்.
ஈழத்தாயின் மடியமரும்
தாளக் குhத்து ஆடி மகிழும்.

செத்து மடியும் என்பார்கள்
செம்மொழித் திறன் விளங்கும்.
செய்யுட் காலம் கடந்தும்
செய்மதி கண்டு தமிழ் சிறக்கும்.

கேள்வி கேட்டு கட்டளை இட்டு வரம் கேட்டு தன் மொழியாம் தமிழைப்பாடி தனக்குத்தானே நம்பிக்கை தீபத்தை ஏற்றிய கவிஞன். மீண்டும் நிலை குலைந்து அழும்காட்சி அடுத்து விரிகிறது.

தன்னைத்தானே தேற்றுவதும் அழுவதுமாய்போகும் கவிதை நம்மையும் கலங்க வைத்து விடுகிறது. இறுதியில் நம்மையெல்லாம் கலங்க வைத்த குழந்தை கண்சிமிட்டி சிரித்தபடி சிந்தனையை உதிர்ப்பது போல் கவிதையால் நம்மை கவர்ந்தீர்கிறார். அதில் பிரகாசம் தெரிகிறது. அடுத்தடுத்தமைந்த கடிதம் , ஈழம் என்ற தலைப்பிலான கவிதைகள்.

எண்ணத்தின் தோற்றமெல்லாம்
கன்னத்தில் தெரிகிறதே
ஏக்கத்தின் முழு உருவம்
என் உதட்டில் தவழ்கிறதே.

அழுது அடம்பிடித்து சிந்தனையை விரித்தவிட்டு குதாகலமாய் துள்ளி ஓடிய குழந்தையைப்பார்த்து அப்பாடா இனி அழுகை பிடிவாதம் எல்லாம் தொடராது என நினைத்து பெருமூச்சு விட்ட தாயை மறுகணமே ஏதோ ஒரு ஞாபகத்தில் மீண்டும் ஓடி வந்து அடம்பிடிக்கும் குழந்தைகயைப் பார்த்திருப்பீர்கள்.. அதே போல அடுத்த கவிதை தொடர்கிறது.விடுதலையின் பங்குதாரர் என்ற தலைப்பிலான கவிதை.
வீரமாய்ப் பாய்ந்த வேங்கை
தூரம் நோக்கிப் பயணமென்ன
வேரென்று நம்பி நின்றோம்
நீண்டு நீரும் உறக்கமென்ன

அழுதழுது தன்னை சமாதானப்படுத்துகின்ற தன்மை
களத்தினிலே புயலாய் வீரர்.
உள்ளத்தினில் பூவாய் வீரர்.
விடுதலையின் பங்கு தாரர்.
விடிவினிலே வெள்ளி வீரர்.

அழுது வடிந்து பின் இவரது கோபப்பார்வை கடவுள் மீது செல்கிறது.நியாமான கோபக்கனலே. சிந்திக்க வைக்கிறார்.

அடுத்த கவிதையில் கவிதை என்ற தலைப்பிலான கவிதையில் கவிஞனுக்குரிய மிடுக்கு வந்து விடுவது தெரிகிறது.


என்னை யாரென்று நினைத்துக் கொண்டீர்கள் என குரல் எழுப்புவது தெரிகிறது. தன்னைத்தானே கவிஞன் என தானே உறுதியிடுகிறான் இந்த குழந்தை. தன்னைத்தானே கவிஞன் என குhறும் கவிஞனை குழந்தை என்பது தகுமோ இனி என எண்ணத்தோன்றுகிறது. என்றாலும் விளையாட்டுக் குழந்தையல்லவா இவன். நம்பமுடியாது.

ம்... சவால் விடுகிறான். குhவி அழைக்கிறான் நம்மையெல்லாம் முஸ்டியை முறுக்குவது தெரிகிறது.

கொத்தித் தின்று உம்தன்
உடல் கொழுக்க
விரைந்து கரைந்துடன்
வாரீர் காக்கைகளே..

என அறைகுhவல் விடுகிறான் இந்த குழந்தை. என்னாச்சு இவனுக்கு..!? இத்தனை நகைச்சுவை கொண்ட திமிர்த்தனம் குhடாது என நினைக்கத் தோன்றுகிறது.

இப்படித்தான் என் எழுதல்
அன்றைய கிறுக்கல்கள் பார்த்து
வெட்கித்தலைகுனியும்
இன்றைய எனது கிறுக்கல்கள்

ஓ.. இப்படிக் குhட ஒன்றா... என நினைத்தபடி சண்டித்தனமாக வாறன் என நினைத்தபடி கதிரையில் இருந்து நிமிர்ந்தபடி எழுதிய காதிங்களை புறம் தள்ளி பேனைவை மூடிவைத்துவிட்டு இனி இந்த செல்ல விளையாட்டெல்லாம் இவரோடை சரிவராது என நினைத்தபடி நானும் அடுத்த பக்க கவிதைக்குள் நுழைகிறேன்.

ஓ ...... அது தானே பார்த்தேன்..!! என்ன இத்தனை வீரம் எங்கிருந்து வந்ததென.....!!!!

காதலியர் கடைக்கண் காட்டிவிட்டால் இளைஞர்க்கு (குமரர்க்கு) மாமலையும் ஓர் கடுகாம். என்று சும்மாவா சொன்னார்கள்.

விருப்பு வெறுப்பு என்கின்ற கவிதை அந்த ரகசியத்தை சொல்லி நிற்கிறது.. அடுத்த பக்கத்திற்குள் நுழைகிறேன் இவள் யாரோ என்ற தலைப்பிலான கவிதை வாசித்தகுறையில் அடுத்த பக்கத்தை தட்டுகிறேன் ஆர்வமிகுதியால் ஆச்சரியம் அங்கும் காத்துக்கிடக்கிறது. ஆர்வமிகுதி மேலிட மற்றய பக்கங்களிற்கு தாவி ஓடுகிறேன். ஆச்சரியம் ஆச்சரியம் ஆச்சரியம். எதுவுமே ஒழுங்காக வாசிக்க முடியவில்லை. காதலர்க்கு பசி இருக்கும் ஆனா சாப்பிடேலாது. அதே மாதிரி கவிப்பசி இருக்கு காதல் கவிதைகளை வாசிக்க முடியாமல் ஆச்சரியத்தில் பக்கங்களை புரட்டுகிறேன். ஒருபடியாக அமைதியாகி வாசிக்க தொடங்குகிறேன். ஆச்சரியம் மேலிட. ஆனந்த சந்தோசம்.

இயற்கையையும் பெண்ணையும் இந்த கவிஞன் ஒப்பிடுகின்ற தன்மை அன்பை பண்பை நேசத்தை பாசத்தை நகைச்சுவைத்தன்மையை இவனிடத்தில் காணமுடிகிறது இவனது காதல் கவிதைகளிற்குhடாக .

ஐயோ ஐயோ--
உயிரின் உயிரில்
காதல் சிற்பம் செதுக்குகிறாள்.

அடடாhh. ஒன்றுமே செய்ய இயலாத நிலையில் வரும் உணர்வு இந்த கவிதை வரி.

காதல் நோய் என்ற கவிதை அழகுற இயல்பாக வந்த அமர்ந்திருக்கிறது. எந்த ஒளிவுமறைவுமின்றி அத்தனை உணர்வையும் இயல்பாக வெளிச்சமிட்டிருக்கிறார்.

அடியே சகியே வலிக்குதடி
கண்ணில் நீர்தான் துமிக்குதடி.
உள்ளங்கால்கள் குhசுதடி
உச்சந்தலை கொதிக்குதடி
மூச்சுக்காற்றும் உளறுதடி.
மண்டைத்தேசம் குளிருதடி.

இதை வாசித்து முடித்தவிட்டு அடுத்த கவிதைக்குள் நகர்கிறேன். காதல் என்றால் என்ன என உணர முயல்கிறார். அத்தனை காதல் மாற்றங்களுக்குள்ளும் தன்னை உட்படுத்திய கவிஞன் ஆற அமர இருந்து சிந்தனைச் சிறகை விரிக்கிறார்.

வெளிச்சக்குப்பை அதற்கு தொடக்கப் ப(பு)ள்ளியாக அமைகிறது. ஆரம்பகால மழலைப்பருவம் மிளிர்கிறது. அது ஒரு கனாக்காலமாக கழிந்துவிடுவது வேதனை தான். வளர வளர வயதும் ஏற ஏற ஏனோ நாமெல்லாம் ஆண், பெண் என பிரிந்து கிடக்கிறோம். அதே மழலை உணர்வோடு இங்கே இந்த கவிஞன் அழைக்கிறான் தனது தோழியை. அடடாh--! திடீர் என வீரம்பேசி சிந்தனைச் சிறகை உயரவிரிக்கிறான். மிக கவனமாக கையாண்டு இருக்கிறார் சொற்பதங்களை இதில் எங்கே தான் சோர்ந்து போனது தெரியாமல் இருக்க மிகவும் பிரயத்தனப்பட்டிருக்கிறார்.

அடுத்து உலகம் தின்போம் கவிதையை பலமுறை வாசித்தேன். மனதில் ஒரு புத்தணர்வை புது உத்வேகத்தை தருவதான கவிதை.வாசித்து வாசித்து அந்த கவிதையோடு இரண்டறக்கலந்துவிட்டேன். தன்னைத்தானே திடப்படுத்தி மீண்டும் தனது பயணத்தில் உறுதியான நடையை தன்னகத்தே வரவழைத்திருக்கிறார்.
திரைகள் அகற்றி
முன் தெரி
திமிறித் திமிறி
முன் நகர்.

வெளிச்சக்குப்பையில் தனது சோர்வை மறைக்க பிரயத்தனப்பட்ட கவிஞன். இதில் அதனை வெளிச்சம் போட்டு காட்டிவிடுகிறார். அது தானே கவிதையின் தார்ப்பரியம். துடிப்பின் துளி அதற்கு ஈடுகொடுத்து பல நம்பிக்கைகளை தாங்கி வந்திருக்கிறது.

செயற்படு பொருள் ஆச்சரியப்படுகிறேன். நல்லதொரு கவிதை.
சமூதாயத்தை
நிர்வாணப்படுத்து
அதன் காயங்களில்
முத்தமிடு
அழுக்குகளை
நக்கு.

பலமுறை இந்த கவிதை வாசிக்கத் தூண்டுகிறது. எத்தனை உண்மையை இயல்பாக சின்னச் சின்ன வரிகளுக்குள் சொல்லி முடித்திருக்கிறான் இந்த கவிஞன்.

ஒருமுறை என்ற கவிதையில் தன்னைத்தானே மீண்டும் இரண்டாவது முறையாக பகிரங்கமாக பிரகடினப்படுத்திக்கொள்கிறான்.

எடிசன் நண்பா
ஆயிரம் கண்டு பிடிப்புக்களில்
நீ பிறப்பு எடுத்ததாய்க்
கேள்விப்பட்டேன்

ஆனால் நீ
ஆயிரம் தடவைகள்
எனக்குள் பிறக்கிறாய்.

நானும் உங்களைப்போல்
நாளை யாருக்கோ
பலமுறையாகப்போகும்
இளைய தலைமுறை.

திலீபனையும,; காந்தியையும் அழகுற இன்றைய திலீபன் தான் அன்றைய காந்தி என நிறுவி இருக்கிறார் பாராட்டுக்கள்.

இன்றைய இந்த கவிஞன் சஞ்சீவ்காந்த்த் எடிசனாயிருப்பானோ...!!!?

அடுத்து பெரியாரைப்பற்றியதான கவிதை. கவிதையில் காதல் கொண்ட என்னை பெரியாரிலும் காதல் செய்ய வைத்துவிட்டான் இந்த கவிஞன் தனது பெரியார்க் கவிதைக் குhடாக. பெரியாரையும் காந்தியையும் திலீபனையும் தத்துவஞானியையும் தனித்தனியே அழைத்து வந்து கவிதைசொன்ன கவிஞனுள்ளும் ஏதோ ஒரு புரட்சி ஒன்று தெரிகிறது.மன நிறைவுடன் அடுத்த கவிதைக்குள் நுழைகிறேன்.

மனிதமனம். இத்தனை வயதுள் அத்தனை படிப்பினை அனுபவமா..!! விழிகள் விரிகிறது கவிதையைப் படித்து மேலே செல்லச்செல்ல. இந்தக் கவிதைக் குhடாக இந்த கவிஞன் ஞானம் பெற்று விட்டதை உணரமுடிகிறது.

ஒளி வழி விழி என்ற அடுத்த கவிதை வாழ்க்கையை கோட்டை விட்டு இந்த உலகத்தோடு ஒன்றிடமுடியாத புலத்தமிழருக்கான வழிகாட்டலாகவே நான் இதை நினைக்கிறேன். கட்டிடக்காட்டின் தனிமையை உணரமுடிகிறது. தனிமையில் குமைந்து போவோருக்கு நல்லதொரு நம்பிக்கை வழிகாட்டியாகிறது இந்த கவிஞனின் இந்த கவிதை.

காதல் பகிர்,புலம் இலக்கியம்,மீண்டும் சந்திப்போம் ஆகிய கவிதைகளில் சமூக அக்கறை அதிகமாக மேலிட்டு இருப்பதை காணமுடிகிறது. மூடக்கொள்கைகளை பீடமேற்றும் நாயக கவிஞனா தெரிகிறான் இந்த இளைஞன்.

எல்லொரும் இன்புற்று வாழ்வதே வாழ்க்கை என நினைத்த இந்த கவிஞனால் நாடு சிதறிப்போவதை இப்போதெல்லாம் பொறுத்தக்கொள்ள முடியவில்லை. அதனை அழகுற மீண்டும் சந்திப்போம் என்கின்ற கவிதை சொல்லி நிற்கிறது. ம்.... தைரியம் தான். கவித்தமிழ் எடுத்து கசையடி நடந்தேறி உள்ளது.

கண்டு பிடி, உறுதிசெய் என்கின்றதான கவிதை. இந்த போர் எப்படியெல்லாம் கவி எழுத வைக்கிறது....!! சின்னனிலேயே இப்படியெல்லாம் சிந்தித்திருக்கிறானே...!ஆனாலும் போரையும் அகதிவாழ்வையும் பயங்கர வாதத்தையும் அழிக்க முடியும் என நம்பிக்கையோடு சொல்லும் இந்த கவிஞனின் கவிகள். ஆனாலும் முன்னைய கவிதையான எடிசன் , காந்தி திலீபன் பற்றிய கவிதையில் இயல்பாகவே நிறுவ சொல்கிறது கவிதை. அதே போல இந்த இரு கவிதைகளையும் நிறுவ முயல்கையில் போர், புலம்பெயர் வாழ்வு பயங்கர வாதம் இவை முடிவடையவே மாட்டாது என்பது தெரிகிறது. இறுதியில் இத்தகையவை நடந்தேறினால் அழிவு தான் நிச்சயம் என இயல்பாகவே புரியவைத்தவிடுகிறது அடுத்த கவிதையான மூன்றெழுத்து.

அடுத்த கவிதையான இணையம் புதியதொரு பயங்கரவாதமாக மனதில் தோன்றச் செய்கிறது. மரபணு கணணி என இரு கவிதைகள் விரிகிறது. இவை பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளத்தேவையில்லை என அடுத்த கவிதை நம்மை நிறுவச்செய்கிறது.ஓசோன் எனும் தலைப்பிலான கவிதை.

அடுத்த கவிதைக்குள் நுழைகிறபோது பெண்ணியப்பேச்சுக்கள் விரிகிறது. நல்லதொரு எழுச்சிகொள் கவிதைகள் அனைத்தும்.இல்லையே இல்லையே இல்லையே என முடிவின் வரிகளாய் அமைந்த கவிதை ஒவ்வொரு பெண்ணையும் சிந்திக்கத் தூண்டுகின்றதாக அமைகிறது.

திருமண பந்தத்திற்கும், சீதனப்பிரியர்களிற்கும் கவிச்சாட்டை அடி கிடைத்திருக்கிறது. சம்பிரதாயங்களை தூக்கிப்போட்டெரித்து வெளிச்சமிடும் துணிவு.

நான் மட்டும் என்கின்ற கவிதை மனம் சோர்ந்த அல்லது குழப்பத்தில் இருந்த போது கருக்கட்டி உள்ளது தெரிகிறது. சில சமயங்களில் சூனியவெளியுள் சிக்குண்ட நிலையை இந்த புலம்பெயர் வாழ்வு நமக்கெல்லாம் தந்திருக்கிறது. அத்தகைய தொரு சூனியவெளியுள் இந்த கவிஞனும் சிக்குற தவறவில்லை.

அடுத்த கவிதைக்குள் போகிறபோது அந்தக் குழப்பத்தை ஓரளவு உணரமுடிகிறது. வாழ்க்கை என்ற தலைப்பிலான கவிதையும் இடைவெளி என்ற தலைப்பிலான கவிதையும் தெளியவைக்கிறது வாசகனை.

உண்மை என்கின்ற அடுத்த கவிதைக் குhடாக கவிஞனும் தன் சோர்வு நிலையில் இருந்து மீள்வது தெரிகிறது.இரவு என்கின்ற கவிதைக்குள் பலதை தேக்கி மறைத்து வைத்திருப்பது தெரிகிறது.அதை புடம் போட்டு காட்டுகிறது அடுத்த கவிதையான சுதந்திரம்.

மீண்டும் சில்லுப் பூட்டி, சிறகு கட்டி,நம்பிக்கை விதைகளை தூவி, பறக்க முனைகிறது அடுத்த கவிதையான நம்பிக்கை, பகை ஏதுள என்ற தலைப்பிலான கவிதைகள்.

அடுத்து அலை என்ற தலைப்பிலான கவிதை. வாசித்து வாசித்து ரசித்தேன் பலதடவை. காதல் கருக்கொண்டு (கரை)மையம் தொடுகிறது.காதலியர் கடைக்கண் காட்டிவிட்டால் இளைஞர்க்கு மாமலையும் ஓர் கடுகாம். இந்த கவிஞனால் இன்னும் பலதை தரமுடியும். தருவான். பல நம்பிக்கை ஒளிக்கீற்றுக்கள் மனதில் தோன்றி nஐhலிக்கிறது.

தலைமுறை இடைவெளியை தூக்கிப்போட்டெரித்து துணிவுடன் நடைபோட வாழ்த்துக்கள். காகங்களிற்கு இங்கு வேலையில்லாமல் போய்விட்டது . உடல்கொழுக்க இனிவழியேது..? நல்ல (கவி) பசிதீர்ந்த அனுபவம்.

புரட்சி விதை சேகரி
உன்னுள் விதை
விருட்சமாய் எழு.

நளாயினி தாமரைச்செல்வன்
சுவிற்சலாந்து.
23-09-05

Thursday, September 22, 2005

முகத்திரை விலக்கு.
மனசை திற.
வானம் அகல நடைபோடு
உலகம் உனக்குள்.
நளாயினி தாமரைச்செல்வன்.
24.09-2003

Tuesday, September 20, 2005

நினைவுகள்..!
நினைவுகள்..!

நிலையாய் இல்லை
தலை கீழாயும்
மாறி மாறியும்
குறுக்கும் நெடுக்குமாய்
நடக்கிறேன்.

சிலசமயம்
அந்தரத்தில்
தொங்கும்
வெளவாலாய்.

இன்று
வெள்ளிக் கிழமை
வீட்டில்
பூக்களின் நறுமணம்
ஊதுபத்தியின் வாசம்
நிதானமாய் எரியும்
சுடர் விளக்கு
தாளித்த சமையல்
எதுவும்
என்நுகர்வில் இல்லை.

நீயும் நானும்
அவரவராய் இருந்துபேசிய
அந்தஆலமரவயல்வெளிநினைவுகள்
ஊமைப்பட
ஒளிப்பதிவு போல்
உயிரைச் சுட
நிதானமாய்
எரியும்சுடர் விளக்கை
வயல்வெளிக்காற்று வந்து
அலைக்களிக்கிறது.

இன்றும்
உன் கடிதம் வராததால்
உதிர்ந்த பூவாய்
எரிந்து முடிந்த
ஊதுபத்தியாய்
காற்றில் அணைந்த
விளக்காய்
பசியின்றி
உணவை வாங்கும்
இரைப்பையாய் நான்.

கண்ணாடி பார்க்கிறேன்.
நெற்றியில் மட்டும்
திருநீற்றுக் கீறு
மிளிர்கிறது.
உன் கடிதம்
நாளைவரும்என்ற
நம்பிக்கையில்
என் கண்களை
கடிதப் பெட்டிக்குள்
அடகு வைக்கிறேன்.

நளாயினி தாமரைச்செல்வன்.

Monday, September 19, 2005

கண்ணில் ஒன்றைக்குத்தி காட்சி கொடுத்தல் தகுமோ?!!!!

கண்ணில் ஒன்றைக்குத்தி காட்சி கொடுத்தல் தகுமோ?!!!!

கண்ணில் ஒன்றைக்குத்தி காட்சி கொடுத்தல் தகுமோ என்றான் பாரதி. எமக்கு இரண்டு கண்களுமே அவசியமாக உள்ளது. பாரதி திரைப்படம் பார்த்தவர்களுக்கு அது புரியும். மனைவியை ஏன் அழைத்து வரவில்லை என கேட்டபோது அந்த வெள்ளைக்காரப் பெண்மணி கூறியதே கண்ணில் ஒன்றைக்குத்தி காட்சி கொடுத்தல் தகுமோ என.

அன்றைய நிலையில் அது பெண்ணின் செயல்பாடுகளிற்காக சொல்லப்பட்டது. அன்றைய சூழலில் பாரதியால் இந்த கவிதையை எழுத முடிந்தது.

அதற்காக பாரதியார் கூறவில்லை ஆண் குழந்தைகளை கவனியாது அறிவைப் போதியாது விட்டுவிடாதீர்கள் என. அன்றைய நிலையில் பெண்ணின் பெருமையை உணர்த்த பெண்னின் திறமையை உணராத மனிதருக்காக பாடப்பட்டதே.

எமக்கு இரண்டு கண்ணும் அவசியம். அதில் ஒன்று ஆண்குழந்தையாகவும் மற்றயது பெண்குழந்தையாகவும் இருக்க வேண்டுமே அன்றி இரண்டு கண்ணும் பெண்குழந்தையாகவோ அன்றி ஆண் குழந்தையாகவோ இருக்க வேண்டும் என்பது பொருளல்ல.

புலத்தில் என்ன நடக்கிறது? புறச்சூழலால் பெரிதும் பயந்து பெண்குழந்தைகளின் மேல் அதிக அக்கறையும் அவளை எந்த வகையிலாவது நன்றாக படிப்பிக்கவேண்டும் என்கின்ற நிலையும் காணப்படுகிறது.

அதை விட சிலர் கல்வியை இடை நிறுத்தி திருமண பந்தத்துள் புகுந்தி விடும் நிலையும் உள்ளது. நல்லதை செய்கிறோம் என நினைத்து பெற்றோர் மீண்டும் பேரழிவுகளை குழந்தைகளின் மனவெளியில் உருவாக்கிக்கொண்டு இருக்கிறார்கள்.

நிலவுக்கு பயந்து பரதேசம் போகமுடியுமா?

கல்விமுறை பலதையும் அவர்களிற்கு போதிக்கிறது. அதற்கு ஏற்ப பெற்றோரும் தம்மை மாற்றிக்கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறார்கள். தனித்து புலத்தில் மட்டும் தான் கல்விமுறை பலதையும் வெட்ட வெளிச்சமாக்குகிறது என நினைத்தால் அது பெற்றோரின் தவறே.எங்கும் இதே நிலை தான். சினிமாவில் இருந்து பார்க்கும் தொலைக்காட்சி வரை எல்லாம் வாழ்வியலை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.

வீதியில் போகிறோம். இருவர் முத்தமிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அதற்காக குழந்தையின் கண்களை மூடவா முடியும். எத்தனை நாளிற்கு மூடப்போகிறோம்? அதன் நன்மை தீமைகளை எடுத்த சொல்ல வேண்டியவர்களாக இருக்கிறோம்.

இந்த பயங்களின் காரணமாக பெண்குழந்தைகளிற்கு அதிக பாதுகாப்பு என்கின்ற போர்வையில் பெண்குழந்தைகளின் உணர்வுகளிற்கு மதிப்புக்கொடாது குழந்தைகளை தமது கட்டுப்பாட்டுள் வைத்திருக்க முயல்வதை காணக் கூடியதாக உள்ளது.

பெற்றோரின் இத்தகைய செய்கைகள் குழந்தைகளின் மனவெளியில் அத்து மீறலை உருவாக்கும் என்பதே உண்மை.

ஒரு காலத்தில் ஈழத்தில் மிகவும் கட்டுப்பாடாக வளர்ந்த பெண்குழந்தைகள் காதலித்து திருமணம் செய்ததையும் தாய் தந்தையருக்கு தெரியாமல் காதலனும் காதலியும் ஓடிச்சென்று வாழந்ததையும் நாம் மறந்து போக முடியாது.

இத்தகைய வாழ்வியல் சிக்கல்கள் சில சமயம் புகலிடத்திலும் ஏற்படலாம். நாம் எமது பண்பாட்டு விழுமியங்களை குழந்தைகளிற்கு அன்றாடம் எடுத்து சொல்ல வேண்டியவர்களாக உள்ளோம். நல்லது எது தீயது எது என அவர்களிற்கு அன்றாட வாழ்வில் எம்மைச்சூழ நடப்பவற்றை சுட்டிக்காட்ட வேண்டியவர்களாக இருக்கிறோம்.

உதாரணமாக புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு என கூறினால் மட்டும் போதாது. அதன் பாதிப்புக்களை எடுத்து கூற வேண்டியவர்களாக உள்ளோம். இன்று தானே அத்தனைக்கும் படங்களுடன் கூடிய விளக்கங்கள் குவிந்து கிடக்கின்றன. அவற்றை அவர்களின் மனக்கண்முன் கொண்டு வரவேண்டியவர்களாக உள்ளோம்.

தினசரி தொலைக்காட்சியில் இவற்றுக்கான விவரணங்கள் நேரடி பேட்டிகளுடன் போகிறது அவற்றை காட்ட வேண்டியவர்களாக உள்ளோம். எதையும் காதால் கேட்பதை விட தொலைக்காட்சியில் நேரடியாக பார்க்கும் போது அதன் தாக்கம் அதிகமாகும்.

இன்னோர் உதாரணம் மிக இலகுவாக ஒரு விபத்தை நாம் வாயால் விளங்கப்படுத்துவதை விட அதை நேரில் பார்க்கிறபோது அல்லது தொலைக்காட்சியில் பார்க்கிறபோது ஒரு பயத்தை தருகிறது அல்லவா அதே போன்ற ஒரு தன்மையை குழந்தைகளின் மனதில் ஏற்படுத்த வேண்டியவர்களாக உள்ளோம்.

அதற்காக குழந்தைகளை பயப்படுத்த வேண்டும் என்பது பொருளல்ல.
உலக நடவடிக்கைகளை அன்றாடம் காணும் காட்சிகளை வைத்து அழகுற அன்பாக மிகவும் மென்மையாக மெது மெதுவாக அவர்களிற்கு புரியவைக்கும் கடமை பெற்றோரையே சார்ந்ததாகிறது.

அதற்காக ஒரே நாளில் எல்லாவற்றையும் போதித்து விட முடியாது மெது மெதுவாகத்தான். அவர்களின் மனவெளியில் பதியும் பதிக்க முடியும். ஒரேயடியாக புரியவைத்தால் அவர்களிற்கு ஒரு பயத்தைக் கூட தோற்றுவிக்கலாம்.

பெற்றோரின் அன்பான அணுகுமுறையிலேயே அவர்களின் மனப்பாதிப்பைத் தடுக்கமுடியும்.

புலம்பெயர் பெற்றோரில் பெரும்பாலானோர். பெண்குழந்தைகளில் அதிக கவனத்தை செலுத்துவதால் சிலவேளைகளில் ஆண் குழந்தைகளை கவனியாது விட்டு விடுகிறார்கள்:

காரணம் அவன் ஆண். எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்கின்ற கோட்பாட்டை இன்றுவரை கடைப்பிடிப்பதால்.

பாவம் அந்த ஆண்குழந்தையும் ஒரு நற் பிரஜையாக வாழ வழி என்ன?!!

அந்த ஆண் குழந்தையையும் அழகாக உங்கள் கண்ணில் ஒன்றாக கவனியுங்கள். கண்ணில் ஒன்றைக்குத்தி காட்சி கொடுத்தல் தகுமோ?!!!!!!


நளாயினி தாமரைச்செல்வன்.
24-03-2003

Sunday, September 18, 2005

.

இறந்தகாலம்
எதிர்காலம்
புதை ..புதை
கிடைத்த பொழுதை
இன்பமாய்க்களி.

நளாயினி தாமரைச்செல்வன்.

உணர்ந்து செய்வோம் காதல்

ன்பை வெளிப்படுத்த
தெரியாதவர் எம் இனம்.


துன்பம் இன்பம் என்பர்
உயிரையே கொடுப்பேன் என்பர்
இன்பத்தை நான்கு சுவர்க்குள் -என
நினைத்து அமுக்கி விட்டனர்.


வார்த்தையிலும்
ஒவ்வோர் தொடுகையிலும்-ஏன்
நடத்தையிலும் கூட
இன்பம் உண்டு என
அறியாததும் ஏனோ?


காதலது நாளும்
காதல் என்றால்
எம் இனம்
காமமாய் பார்ப்பதும் ஏனோ..!?

காதல் என்றால்..!
வார்த்தையிலும்
ஒவ்வோர் தொடுகையிலும்-ஏன்
நடத்தையிலும் கூட
நாளும் இன்பமாய்
காதல் கொள்வோம்.


நளாயினி தாமரைச்செல்வன்.

காதல் செய்வோம் !
காதலின் பக்கங்களை புரட்டிப்பாற்கலாம் வாருங்கள். காதல் இன்றி வாழ்வேது......?!!!!!. காதலே எனது மூச்சாய். சூரியனோடு சண்டைசெய்பவள் நான். சூரியனையே எனது கைக்குள் அடக்க நினைப்பவள். காதலின்றி வாழ்வேது...!? காதலாகி கசிந்துருகி.....!!!!!!!!!! இன்னும் சொற்பமாய் மனிதமனங்களை ஒன்றிணைப்பது இந்த காதல் தானே..!.வாருங்கள்..! தாராளமாக காதல் செய்வோம். உணர்வுகள் இங்கே கவிதைகளாக; கட்டுரைகளாக;ஓவியங்களாக; நிழற்படங்களாக; நகைச்சுவைகளாக; சிறுகதைகளாக; வடிவம் பெறுகிறது.

வாழ்க்கை ஒரு முறை
வாழ்ந்து பார்.
வீழ்ந்து விடாதே.


தலையில் காக்கா எச்சம்
தற்செயல் நிகழ்வு
தடை தாண்டு.

மனிதருள் இறங்கு
மிரட்சி வேண்டாம்.
இயல்பறி.


வலைப்பூக்களின் வட்டத்தோடு இணைவதில் மட்டற்ற மகிழ்வு

நட்புறவோடு
உங்கள் நளாயினி
நளாயினி தாமரைச்செல்வன்.