பனிமுகட்டை அளைந்து வந்து
எனை அணைத்து முத்தமிட்டு
நலம் விசாரிக்கும் குதூகலம்
இங்குள்ள கை கால் முளைத்த
பனிக்கால குளிர்காற்றுக்கு.
ஆனாலும் பனி மழை
ஓய்ந்த பின்னான
வான வீதியில்
தரையிறங்க முடியாத
கனத்த முகிலின் அவஸ்த்தை
எனக்குள்.
எனது இலங்கைத்தீவின்
உயிர்களுக்கு
இழைக்கும் துன்பத்தை
பனிப்பொழிவுக் காலத்தில்
என் கன்னம் அறைந்து சொல்கிறது
ஊசி கொண்டலையும் குளிர்காற்று.
பனியளைந்து எனது பிள்ளைகள்
விளையாடும்போது
சுழன்றடித்து
கண்ணாடித்துகள் கொண்டலையும்
பனிக்காற்று
கன்னம் செவிப்பறை அதிர
ஊழையிட்டு
எனை முடங்கச்செய்து
குருதிவெள்ளத்துள்
தோய்ந்து கிடக்கும்
பிணக்குவியல்கள் முன்னிருத்தி
ஓ.. வென கதறி அழவைத்து
நான் நடுங்குவதைப் பார்த்து
கைகொட்டிச்சிரிக்கிறது.
உணர்வும் உடலும்
மரத்துப்போன பொழுதுகளில்
என்னை நுள்ளி
என்னை நானே உரசி சூடேற்றுகையில்
இந்த பனிக்கால நினைவுகள்
என்ன செய்துவிடமுடியும் என
என்னுள் தீப்பொறி பட்டுத்தெறிக்கிறது.
மரத்துக்கிடந்த இயற்கை எல்லாம்
பூத்துக் குலுங்குகையில்
நான் வாழ்ந்த காலத்தில்
சிரித்து மகிழ்ந்த பெண்களின்
அவலக்குரல்களையும்
அழகாய்த்தெரிந்த ஆண்களின்
காணாமல் போன செய்திகளையும்
ஞாபகப்படுத்திக் கொன்று வதைக்கிறது.
நான் வாழ்ந்த சொற்க வெளிவாழ்வு
பயங்கரம் நிறைந்ததாய் இப்போதெல்லாம்.
எனது வேர்கள் சிதிலப்பட்டு சிதைக்கப்பட்டு.
கூட்டி அள்ளி ஒட்டினாலும்
வலியாலும் ரணங்களாலும்
சீழ்பிடித்த ஆறா மனக்காயங்களாலும்
நெளிந்துழலும் ஒரு பூமிப்பந்தாய் நான்.
சுவிற்சலாந்து.
20-03.2007
Thursday, April 05, 2007
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
ஒவ்வொரு சொல்லின் வலியையும் முற்றிலும் உணர முடிகிறது. அத்துனை ஆழம் இந்த கவிதையில்.
இத்தனை வலியிலும், பனிக்காலத்திலும் எட்டிப்பார்க்கும் சூரியன் போல், ஒருசில நிகழ்வுகள் இன்றும் உங்கள் மனதிலும் ஒட்டி உறவாடும்; மனக்காயத்திற்கு பூ மருந்தாய்!
நளாயினி,
மனதைக் கனக்க வைத்த கவிதை.
நளாயினி அக்கா
போரும், அதன் ஊடான வாழ்வும், அதன் வலியும் என்றும் நினைவுகளில் அலைக்கழித்தபடியே இருக்கும்.
கவிதை அருமை.
இன்றுதான் உங்கள் இருவரதும் பதிவுகளை பாற்தேன். நிறைய பயனாளர்கள் இருப்பதால் ஒரே நாளில் எல்லாவற்றையும் வாசித்தல் என்பது பயங்கர கடினம்.
விடுதலைப்பூரிப்பை வெற்றிக்களிப்பை விட போரின் வலியே பெரிதும் நம்மை வதைக்கும்.மறந்து போகாதபடி நம்மை துரத்தும்.
நன்றி காட்டாறு. வலிநிறைந்த துயரவாழ்வைத்தான் போர்வரலாறுகள் தந்தசென்றவை.பலது மறைக்கப்பட்டுமாகிவிட்டது.
Post a Comment