Wednesday, March 28, 2007

கவிதையோடு கரைதல்! ( 4) கவிஞர் என்.ஆத்மாவின் மிக அதிகாலை நீல இருள்.

மிக அதிகாலை
நீல இருள்

கவிதைகள்

(C) ஆசிரியர்
முதற் பதிப்பு : டிசம்பர் 1996
வெளியீடு : விடியல் பதிப்பகம்
3, மாரியம்மன் கோவில் வீதி
உப்பிலிப்பாளையம்
கோவை - 641 015
வடிவமைப்பு : ரவி & ரஞ்சனி (சுவிஸ்)
விலை : ரூபா 25.-
அச்சு : மாணவர் மறுதோன்றி அச்சகம்
சென்னை - 600 017

.குஞ்சு பொரி மரமே இந்த கவிதை ஒரு மாமரம் பற்றியதாக விரிகிறது. ஆனாலும் முடிவில் கறுப்பு கரைகிற மண்ணில் வெய்யிலின் விரல்கள் புகா இருட்டுக்கும் கொடுக வைக்கிற கூதலுக்கும் ஒரு மாமரம் தேவையில்லை என முடித்திருக்கிறார். இது பல விடைதேடிமுடியாது கேள்விகளை மனதில் தோற்றுவித்தபடிக்கு அடுத்த பக்கத்திற்கு செல்கிறேன்.
அடுத்த கவிதையாக பட்டமேற்றும் காற்று விரிகிறது. தனிமையில் இருந்து இயற்கையை இரசித்திடும் பாக்கியம் இவருக்கு நன்கு வாய்த்திருக்கிறது. அனாலும் தனது இருப்பு நிலை தொலைந்து போகும் தருணங்களை இவர் அனுபவித்திருப்பது தெரிகிறது.

வருசம் தோறும்
ஞாபகத்தில் உட்காந்திராத மாதமொன்றில்
குப்பைகளை கூட்டிவருகிறதிப்
பட்டமேற்றுங்காற்று.
என் ஆணுடம்பு வெட்கமறியாதிருந்த
நாட்களின் மணத்தை அப்பி.


நாம் எமது இருப்பும் மகிழ்வும் தொலைக்கும் தருணங்களில் தான் எமது இளமைப்பருவத்து நிகழ்வுகளை ஞாபகப்படுத்துவது வழமை. அத்தகையதொரு இறுக்க மனநிலையில் இந்த கவிதையை எழுதி உள்ளார்.

வயசு சிறிதென்றால் நானும்
பட்டத்தால் வானத்தை சோடனை செய்திடலாம்.
வீட்டில் சினுங்கி
அல்லது கால்களை பூமியில் உதைத்து.
பட்டமென்றால் உச்சி குளிர்ந்ததெல்லாம்
மூக்கினால் ஓடிட்ட சளியை
துடைத்திடத் தெரியாதிருந்த காலத்தில் தான்.


தனது குழந்தைப்பருவத்து நினைவுகளில் மூழ்கிய கவிஞன் மீண்டும் தனது தற்போதைய இருப்பை உணர்பவராகவும் இருக்கிறார். குழந்தைப்பருவம் எதுவுமே அறியாப்பருவம். நாம் வளர வளர எமது தேடலும் வளர்கிறது உடலில் மாற்றங்களும் நிகழ்கிறது. அதை அழகாக சொல்கிறார்

உணர்வுகளை தின்று புத்தி
ஊதிப் பருத்ததுவோ!


அடுத்த கவிதையாக சூரியன் உச்சிக்கு ஒரு சாண் மேல். கவிதையின் தலைப்பே வித்தியாசமாக இருக்கிறதே என நெற்றியை சுருக்கி சிந்தனை வசப்பட்டவளாய் நான்.
ஓ..! காதல் வசப்பட்டிருப்பது தெரிகிறது. கால் தரையில் மேவாத நிலை. அந்தரத்தில் பறக்கும் உடல் மனசு. ஆனாலும் சோர்வு உடலைத்தாக்க தனது உயிரின் கடிதத்திற்காய்.

என் தகனக்கிரியை அடுத்த கவிதை.
பயங்கரம் நிறைந்த தனிமை ,இயலாமை யாருமே அருகிருந்து துன்பத்தை பகிர்ந்திட முடியாத ஒரு பொழுது, இயற்கையையின் அழகை புசித்த இந்த கவிஞனிடம் அன்றய இயற்கை கூட கைவிரித்து செல்லும் நிலமை.

இயற்கையையும் தனது மனவலியையும் சொன்ன கவிஞனது கோவம் அந்த மனவலியும் தனிமை இருளும் விலகும் பொழுதில் மீண்டும் மீண்டும் அதே செயல் நிகழ்வதாக கூறுகிறார். அதனை வாசிக்கிறபோது என்னுள் திகில் பரவுகிறது.

மீளவும் பிளேடுகளினாலும் குண்டுhசிகளினாலும்
செரிக்கட்டிய வார்த்தைகளோடு
வந்திடுகிறார் யாரேனும் இடைவிடெதெனை
அரித்திடவும் குத்திடவும்.


இங்கு அவரது வலியை, மனஉளச்சலை. ஏற்படுத்துகிற நிகழ்வுகள் பல. அதற்கான எடுத்துக்காட்டுகள் வித்தியாசமானவையாக உள்ளது. அத்தகைய தனது வலியை சொல்லும் முறையில் வெற்றி காண்கின்றார் இந்த கவிஞன்.

கொத்திச்
சிராய்களாகப் பிளக்கப்படுகிறதென் மனம்.
நாக்குக்குலையின் பிரதியீடாய்
கோடாரிகள் அமைந்திட்ட வாய்க்குழிகள்
இவருடையன.........
அறுத்துப்போட்ட கோழியாய்க்
கிடந்து புரண்டு உழத்திடும் எனதுயிர்.


அவளைப்பற்றிய கோடைமழைக் கவிதை என அடுத்த கவிதை விரிகிறது. காய்ந்த இதயபூமியில் தூறல் தூவானமென கவிஞனுடைய மனசெங்கும் மலர்த்தூவல். முதல் கவிதையில் முற்றத்து மாமரத்தை சபித்தவருக்கு இப்போ மனவெளியில் காதல் உலாவந்ததும்அதே மாமரம் பூத்து பிஞ்சுகளுடன் தெரிவது வினோதம் தான்.! காதல் உணர்வு இயற்கையை எப்படி எல்லாம் வர்ணிக்க வைக்கிறது. காதல் உணர்வை எப்பிடியெல்லாம் இயற்கையோடு ஒப்பீடுசெய்கிறார்.

ஆணலைகள் என அடுத்த கவிதை விரிகிறது. கடலையும் அலையையும் தன்மன உணர்வுகளோடு ஒப்பிடுகிறார். தோற்றுப் போகும் சமயங்களில் அல்லது இயலாமை; நம்மை துரத்து ம் போதும் காதல் நம்மை வதைக்கும் போதும் தனிமையை நாடுவது இயல்பே.இந்த கவிஞனுக்கு அந்த தருணங்கள் வாய்த்திருக்கிறது இந்த கவிதையில். அவரின் மனநிலைச்சோர்வினால் இயற்கை கூட அவரக்கு சோபை இழந்து காணப்படுவதாக உள்ளது. அதற்கு காரணம்

சேர்ச்சின் முன்னிருந்த செக் பொயின்ரினில்
என்சேட்கொலர் பிடித்து முறைத்து
உறுக்கிய மூவரதும் கோர முகங்கள்
தோன்றித் தோன்றிக் கிளறின எனை.
நெஞ்சுலர
வெளியேறும் மூச்செல்லாம் சுடுகாற்றாய்.
என்னிரு கண்வழியும்
தீ வரல் கூடும் இனி.


ஆனாலும் எதுவுமே செய்யமுடியாத நிலையில் தோற்றுப்போவது தெரிகிறது.

எனினும் நான் புழுதி அப்பிப் புரண்டளைந்த தாய் மண்ணில்
அந்நிய
காக்கிச் சட்டைச் சிங்கள நாய்களிடம்
தோற்றுத்தான் போனேன் காண் இன்று.


அடுத்த கவிதை மீளமிளக்கொல்லல். காதல் உணர்வு எத்தகைய உன்னதம் வாய்ந்தது...! காதல் இயற்கையை ரசிக்க வைக்கிறது. இதுவரை நாம் ரசிக்கதவறியவை எல்லாம் எமது ரசனைக்கு உட்படுகிறது.யாவுமே பிரமிப்பாகிப்போகிறது. அத்தகைய உணர்வை தரும் வல்லமை காதலுக்குத்தான் உண்டு.அத்தகைய உணர்வுகளை தரும் காதல் ஏமாற்றத்தில் முடியுமாயின் அத்தகைய அழகாய்ப்போன தருணங்கள் காணாமல் சிதைந்து பாழாய்ப்போகிறது. அந்த உணர்வை மிக அழகாக தனது கவிதைக்குள் கொண்டுவந்திருக்கிறார் இந்த கவிஞன்.

அடுத்த கவிதை பொன்னாத்தா பூவாத்தா.இக்கவிதை முஸ்லிம் மக்களிற்கு நடந்த அநீதியையும் அந்த அநீதி தந்த சென்ற திகிலை கூறும் கவிதையாகவும் தூரநோக்கோடு எழுதப்பட்ட கவிதையாகவும் மிளிர்கிறது. இந்த கவிதையில் மனிதநேயம் மிகுந்து காணப்படுகிறது. மனத்திடை ஈரக்கசிவை ஏற்படுத்திசெல்கிறது.

குழந்தை அதன்பாட்டில் துயில்கிறது.
விடாமல்வேட்டுக்கள் தீர்க்கப்பட
குண்டுகளால் நிலமும் கண்ணாடிகளும் அதிர
அடைமழைக்குப் பின்னான
புழுக்கமும் வியர்வையும்மிகுந்த இம்
மே மாத உஸ்ண இரவில்
பனிக்காலம் கூதலுக்கு கொடுக்குவது போல்
நடுங்குகிறது எனக்கு.
பள்ளிவாசலுள் சுட்டது
அம்பலாந்துறையில் கடத்தியது
கக்கத்தில் இடுக்கிய குழந்தைகள் அலற
முக்காடு போட்ட பெண்களும் ஆண்களும்
வடக்கை விட்டுப் பெயர்ந்து வந்தது
அழிஞ்சிப்பொத்தானை
ஏறாவூர்
மூன்றாம் ஈழப்போர் தொடங்கிய பின்
எல்லைப்புறச் சென்றிகள் தாக்கப்படுமிரவுகள்
இப்படித்தான் கழிகின்றன...........
மடியில் கிடக்கிற குழந்தை பற்றிய
கவலைகள் வளர்கின்றன என்னுள்.
இம் மண்ணில் அதனிருப்பு
கைகளை அகல விரித்து
பறந்த என் போன்ற சிறுபராயம்
ஒரு தமிழிச்சியைக் காதலிக்கிற
ராப்பட்ட பின் வீடு வருகிற வாலிபம்...........


மிக அதிகாலை நீல இருள் என்ற தலைப்பிலான கவிதை காதலி நினைவுகளையும் அதன் நினைவுகளால் எழும் உணர்வுகளையும் சுமந்து வந்திருக்கிறது.
கவிதைகள் காணாமல் போன இரவு. காதலை காதல் தந்த நினைவுகளை சுமந்து இக்கவிதை வந்துள்ளது. ரம்மியமான இராப்பொழுது கவிஞனுக்கு வாய்த்திருக்கிறது. அந்த தருணும் ஒரு குண்டு வெடிப்பால் சிதைந்து போவதும் தனதினத்தின் மீதான இருப்பு பற்றி சிந்திப்பதாயும் இக்கவிதை செல்கிறது.எத்தனை வலிகளை சுமந்திருக்கிறார்கள் என்பது ஓரளவு வெளிச்சமாகிறது.

என் சிற்றினத்தின் மீதான
இருபக்க பேரினவாத அமுக்கம் பற்றியும்
முன்னொருபோதும் நாமறியாதுள
எமதுரிமைகள் பற்றியும்
அமைச்சனாகிப்போன ஒரு சூதாடியின் கையில்
அகப்பட்டள்ள எங்கள்
அரசியல் இயக்கத்தின் அவலம் பறறியும்
நானுட்பட இச் சமூகத்தின்
அலட்சிய இருப்பு பற்றியும்
கவலை பேசினோம்.


இனிக் கடவுள் எரிவார் என்ற தலைப்பிலான கவிதை . தனது கோபத்தை முழுக்க முழுக்க அல்லா மீது திருப்புகிறார். வழிவழியாக வந்த கதைகள் கட்டுப்பாடுகள் கோட்பாடுகள் பற்றியெல்லாம் கேள்விகேக்கிறார்.தனக்கிழைத்த தனது இனத்துக்கிழைத்த கொடுமைகளை பட்டியலிடாமல் இத்தகைய கோபகனல் நல்ல மனிதநேயத்தை கொண்ட கவிஞனாக காணப்படுவது வெட்ட வெளிச்சமாகிறது.

அடுத்த கவிதை நாய் வால் என்ற தலைப்பில் அமைந்த கவிதை.
காதல் உணர்வுகள் பூத்துக்குலுங்கி நம்மை எல்லாம் வதைத்தே கொல்லும். ஆனாலும் கொல்ல கொல்ல மீண்டும் மீண்டும் புதிதாய் பெருத்து பிறப்பது உறுதி. சமூக கட்டப்பாடுகளுக்குள் மதக்கட்டப்பாட்டுக்குள் நம்மை திணித்து அதனுள் இருந்து வெளியேறவிடாமல் உணர்வும் மனசும் குhச்சலிடும். மதக்கட்டப்பாட்டு விழிமியங்களும் சமூகவொழும்கம் பற்றியதான கோட்பாடுகளுள்ளும் காதல் உணர்வுகள் போராடவேண்டி உள்ளது. அதை மிக அழகாக விபரித்திருக்கிறார்.

அந்த உணர்வை கவிதையில் தருவது என்பது மிகுந்த கடினமே. ஆனாலும் அந்த உணர்வை அழகாக மொழியினுள் கொண்டுவந்தமர்த்தி இருக்கிறார். பெண்கள் தான் சமூக கோடு விதித்த ஒழுக்காற்றுள் நின்று திணர்கிறோம் என்றால் இந்த கவிஞன் இன்னும் ஒரு படி மேலே போய் தங்களுக்கும் அத்தகையதொரு திணறல் இருக்கிறதென வெளிப்படுத்தியிருக்கிறார்.

பல கவிதைகளை படித்திருக்கிறேன். எந்த ஒரு ஆண் கவிஞனும் இப்படியாக தன் உணர்வை சொன்னது கிடையாது என்றே நம்புகிறேன். இதனை வாசிப்பவர்கள் அப்படியான கவிதை இருக்கும் பட்சத்தில் எனக்கு அனுப்பிவையுங்கள். ஆண்களின் உணர்வுகளை புரிதல் என்பது அவை கவிதைகளுக்குhடாக மட்டுமே. என்பது எனது வாதம். தனது உணர்வுகளை அழகாக தைரியமாக சொல்லி இருப்பது தான் இந்த கவிதையின் விசேடம்.
நாய் வால்

999வது தடவையாகவும் இன்று காலை
வெளியேறும் முனைப்பில் நகர்ந்து
பரிதி எல்லைக் கோட்டைத் தாண்ட இயலாமல்
வழக்கம் போல் தன் இடத்தில் மீளவும்
வந்தமர்ந்துளது மையம்.

என்னவென்று நோவதிம் மனதை.
துணிந்து எனக்கென எதையேனுமியற்ற
விடுகுதில்லை ஒருபோதும்.
சரி, இனிச் செய்வதே என நிமிரினும்
அனைத்தினது புற அக நிலைமைகளையும்
கொணர்ந்து காண்பிக்கிறது கண்முன்.
எண்ணற்ற பொறுப்புகள் எனக்கென உளதாய்
போதிக்கிறது நின்று.
அழிந்து நான் சிதையினும்
உருகியே எரியினும்
யார் மனதையும் நோகவிடல் தகாதென்கிறது.
மந்தைகள் யாவற்றினதும் மேய்ப்பன்
நீயன்றி வேறு யாரென
வினாவுகிறது பிசக்க.
கல்லடி சாத்திரக்காரி போல் இதுவும்
4ம் இலக்கத்தான் பிறர்க்காய்த் தேயும்
செருப்பே தான் என்கிறது பாரேன்.

கண்டி மாநகரின் விரால் மீன்கள் கொதிக்கும்
குடை விரித்த மரங்களடர்ந்த
தெப்பக் குளக் கரையோர பிளாட்போர்மில்
குளிரில் உதறும் கைகள் கோர்த்து
ஒட்டி ஒட்டி திரும்பவும் அவளோடு
திரிய,
குறிஞ்சிக் குமரன் கோயிலுக்குப் போகும்
மலை நெடுக வளைந்து நீளும் சாலையில்
சிவப்பு சல்வார் உடுத்திய அவளை
சோனக முக்காடு போட்டு அணைக்க
வானமளவு இலைபருத்த மரத்தின் கீழவள்
நோகிய வயிறைத் தடவியபடியே
யுகக் கணக்கில் போர்த்திக் கிடக்கவெலாம்
எத்தனை தவிப்புகள் விளையுது நாளும்

எவ்வாறேனும் இவ் வட்டத்தின் எல்லையை
கடந்து செல்லுதல் வேண்டும் நான்.
ஆயிரம் தடவைகளும் தோற்றேன் தான்.
ஐயா என்
சிறு மூளை புரியாதுள அவ் அதி வழியை
தயை கூர்ந்து யாராகினும் கூறிடுக.
மிக அதீத நம்பிக்கைகளுடன்
வெளியேறப் புறப்பட்டுத் தோற்றுத்
திரும்பும் ஒவ்வோர் முறையும்
எல்லைப் பரிதி அகன்ற
பரப்பின் விசாலிப்பை உணர்கிறேன் நான்.
மேல் மூச்சும் கீழ் மூச்சும் வாங்க
சமூகமும் கடவுளும் எனக்கெதிராய்
கை கோர்த்துச் செயல்படுவதாயும்
விரக்தியுற்றுத் துவள்கிறேன் தான்.
எல்லைகளைத் தாண்ட விடாமல் எனை
அமுக்கும் விசைகளே விலகுக விலகுக.

எவை எவ்விதமிருப்பினும்
நாளையும்
நாளையென்ன இதற்கடுத்த கணமேயே
எதுவுமே நிகழ்ந்து விடாதது போல்
முதன்முதலாய் இப்போதான் என்பது போல்
அனைத்துத் தோல்விகளின் சலிப்பும் களைந்து
புத்தம் புதிய நம்பிக்கைகளுடனும்
அவாக்களுடனும் புறப்படும் தான்
சுரணை கெட்ட இம் மையம்.


அடுத்த கவிதை என் பிரிய காதலே பிசாசே. என்றதாக அமைகிறது.
காதல் உணர்வின் மோட்சங்கள் இருவரும் மணித்தியாலக்கணக்காக பேசிக்கொண்டே இருப்பது. தனித்திருப்பது விரல்களை கோர்த்தபடி அமைதியாக பயணிப்பது இப்படியான சின்ன சின்ன வாழ்தலுக்கான ஆசைகள் தான். இப்படியாக இருந்தாலும் காதல் உணர்வின் உயர்ந்த மோட்சம் உடல்களை பகிர்வதிலேயே முக்தி இன்பம் காண்கிறது. இவை காதல் தோல்வியில் முடிகிறபோது எப்படியான உருத்தொலைத்த மனநிலைக்கு ஆளாவோம் என்பதை மிக அற்புதமாக தனது உணர்வுகளை மொழிக்கு மொழிபெயற்திருக்கிறார். உடலையும் தன்னையும் தன் உணர்வுகளையும் வதைத்துக்கொள்கிறார் கவிஞன். நம்மையும் அந்த வதைக்குள் தடுமாறுமாறும் செய்தே இருக்கிறார். வாசிப்பவர்களுக்குள்ளும் தனது வதைபடல உணர்வை தந்து சென்றிருக்கிறார்.

உயிர்பிய்யுமோர் பாடல் என்ற தலைப்பிலான கவிதை பலசோகங்களை தன்னகத்தே சுமந்து அழுதபடி நம் நெஞ்சை பதைபதைக்க வைத்தபடி தன் இனத்தவர்க்கு எம்மினம் செய்த கறைபடிந்த நாட்களையும் காதலியின் பிரிவையும் சுமந்து வந்திருக்கிறது. இந்த போராட்டம் நம்மை எல்லாம் பெரிதும் பாதிக்காதபோதும் நாமெல்லாம் புலம்பெயர்ந்த வாழ்கிறோம். இவர்களை சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கி 24 மணிநேரத்தில் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற்றிய கொடுமை ..வாயிருந்தும் மௌனித்து தலைகுனிந்து கைகளை பிசைந்தபடி விழியில் நீர்மல்க நின்றுபார்த்த சோகம் என்னை இப்போதும் வாட்டுகிறது.
எனது மண்ணில் வாழ்ந்த காலங்களில் நடந்த கண்ட மின்கம்ப தண்டனைகள் இன்றும் என்னை கனவில் பயமுறுத்திக் கொல்லும்.ஒரு உயிரை எடுப்பது காவுகொள்வது என்பது அத்தனை மலிவாய்ப்போன தேசம் என்னுடையது. அத்தகையதொரு தேசத்து என் சக கவிஞனது இக் கவித்தொகுதியில் ஓர் கவிதை கண்டு மீண்டும் நடுங்கலுற்றேன்.
ஒரு உயிரைகாவு கொள்வது என்பது சமாதானத்தக்காய் காலத்தேவை என்றோ களைபுடுங்கும் செயல் என்றோ எதிரி என்றோ துரோகி என்றோ மற்றவர்களைப்போல் என்னால் என்னை நானே சமாதானப்படுத்த ஒருபோதும் முயன்றதில்லை. முயலப்போவதுமில்லை. அடுத்த கவிதை அத்தகையதொரு வாழ்வியல் சூழல் எப்படி உருவானது உருவாக்கப்பட்டது என்பதை கவிதைக் குhடாக சொல்ல முனைந்திருக்கிறார். தனது அனுபவத்திற்கும் தேடலுக்குமூடாக. அனுபவமும் தேடலும் தானே எழுதவைக்கிறது.
கவிதையின் தலைப்பு செங்கோல் = சிவப்பு + கோல்

இந்தக்கவிதையை நாமெல்லாம் ஐpரணித்துத்தான் ஆகவேண்டும்.
_________________________________________________________________________________

அரசன் எழுந்தான்
அப்பாவிகளின் தொடை, கணைக்காலென்புகளால்
செய்யப்பட்டு
குழந்தைகளின் கன்னத் தசைகளால் போர்த்தப்பட்ட
ஆசனத்திலிருந்து.
வலது கையில்
எழுவன் குளத்துச் சிங்கள மக்களின்
புத்தம் புதிய குருதி நிரம்பிய கிண்ணம்
ஒரு மிடறு குருதியருந்தியபடி
திறந்து கிடந்த அடுத்த அறையை எட்டிப் பார்த்தான்.
அறைச் சுவரில்
ஆணியடித்துக் கொழுவப்பட்ட 103 தொப்பிகள்
காத்தான்குடிப் பள்ளிவாசலில்
சுட்டுக் குதறப்பட்டவர்களின் தலைகளிலிருந்து
கழற்றி எடுத்து வரப்பட்ட மாவீரச் சின்னங்களவை.
பக்கத்தில்
இரு கூறிடப்பட்டு வீசியெறியப்பட்ட சிறு பிள்ளையொன்றின்
குருதி பீய்ச்சியடிக்கப் பட்டுக் காய்ந்த சீமெந்துப் பேப்பர்.
பெருமிதத்தில் தனக்குள் சிரித்துக் கொண்ட அரசன்
திடுமென அதிர்ந்தான்.
மிக அருகில் எங்கோ பாங்கொலிக்கக் கேட்டான்.
அம்பிளாந்துறைச் சந்தியில் மரண ஓலமெழுப்பிய
அதே 157 ஹாஜிமாரினதும் குரல் அசப்பில்.
மடுவுக்குள் பாதி புதைந்தும்
பட்டை வாய் வெடித்த காட்டு மரங்களில் தொங்கியும்
இரத்தம் தோய்ந்த வெண்ணிற 'ஜுப்பா'க்கள்
அரண்மனைக்கு வெளியே
காற்றிலசைவதும் கண்டான்.
காதை இறுகப் பொத்தியபடி
கதவை இழுத்து அடைத்துச் சாத்தி
அறைக்குள் மீளவும் வந்தமர்ந்தான்
அருகில்
தப்பித் தவறியும் எதனையும்
சிந்தித்து விடக் கூடாதென்பதற்காய்
கழற்றிய மூளை ஒரு கையிலும்
சயனைட் குப்பி ஒரு கையிலுமாய்
யாரிலோ அல்லது எதிலோ
விழுந்து வெடித்துச் சிதறிட
தன் அரசனின் ஆணையைக் கோரி நிற்கும்
இயந்திரத் தனப்பட்டு இளைஞனாய்ப் போன
பன்னிரு வயதுத் தமிழ்ப் பாலகன்
மெல்லக் குனிந்து தன் அரசனைக் கேட்டான்
"முஸ்லிம்களைக் கொன்று கன நாளாயிற்றே
கொல்வதில்லையா இனி? "
அரண்மனை அதிரப் பேயிடியாய்ச்
சிரித்த அரசன் திருவாய் மலர்ந்தான்
"கொல்வதில்லை யென்றெதுவுமில்லை@
இப்போதில்லை!"


ஒரு பேய்மாரி நூறு மோகினிப் பிசாசுகள். மழைக்காலமொன்றையும் மழைக்காலங்களில் கொழும்பு நகரம் எப்பிடி இருக்கும் என்றதான சமூக அக்கறையோடும் தனது காதலியின் நினைவுகளால் எழும் விரகதாபத்தையும் கவிதைக்குள் கொண்டுவந்திருக்கிறார்.

எதையோ முணுமுணுத்தபடி கவட்டுள்
கைவைத்து இறுகிச்
சுருண்டிருப்பேன் நான்.
கணைக்காலிரண்டினதும் நடுவிடுக்கில்
தலையணை கிடந்து நசியும்
ஹோவென்ற விரகம்!
ஹோ!
அனுங்குவதும்
பெருமூச்செறிவதும்
நெஞ்சு விம்மித் தணிவதும்
மார்பு ரோமப் பரப்பிடை ஓர்
அணைத்தற் சுகத்தேவை எழுந்தெழுந்தழிவதுமாய்
வெறுந்தரையிற் பாயின்றி
ஊர்ந்தூர்ந்து கழியுமொரு கொடுமிரவு.

போன் பேசி ஆறுநாள்
அவள் குரலாச்சும் கேட்டால் சற்றுத்
தணியுமிது.
சீதேவிப்பெற்ற என் ஊரில் எல்லாம் கஸ்டம்
கரண்டும் இல்லயாம் இப்ப.
எந்த இருள் மூலையுள் கிடந்து கிடந்து
வேர்த்து விரகிக்கிறாளோ, அவள்


இந்த கவிஞனின் கரம் பிடித்து நடந்ததில் பல உணர்வுகளை அவல துன்ப துயரங்களை எனக்கே எனக்கான புதிய பல தேடல்களை தேடுவதற்கான புதிய உந்துதல்களை உணரவைத்ததில் இந்த கவிஞன் வெற்றி பெறுகிறான்.
முற்றும்.

"சிந்தனை கொள்
சிறை உடை.
நீயாய் வாழ்."

நளாயினி தாமரைச்செல்வன்.
சுவிற்சலாந்து
14-2-2007

No comments: