Monday, September 19, 2005

கண்ணில் ஒன்றைக்குத்தி காட்சி கொடுத்தல் தகுமோ?!!!!

கண்ணில் ஒன்றைக்குத்தி காட்சி கொடுத்தல் தகுமோ?!!!!

கண்ணில் ஒன்றைக்குத்தி காட்சி கொடுத்தல் தகுமோ என்றான் பாரதி. எமக்கு இரண்டு கண்களுமே அவசியமாக உள்ளது. பாரதி திரைப்படம் பார்த்தவர்களுக்கு அது புரியும். மனைவியை ஏன் அழைத்து வரவில்லை என கேட்டபோது அந்த வெள்ளைக்காரப் பெண்மணி கூறியதே கண்ணில் ஒன்றைக்குத்தி காட்சி கொடுத்தல் தகுமோ என.

அன்றைய நிலையில் அது பெண்ணின் செயல்பாடுகளிற்காக சொல்லப்பட்டது. அன்றைய சூழலில் பாரதியால் இந்த கவிதையை எழுத முடிந்தது.

அதற்காக பாரதியார் கூறவில்லை ஆண் குழந்தைகளை கவனியாது அறிவைப் போதியாது விட்டுவிடாதீர்கள் என. அன்றைய நிலையில் பெண்ணின் பெருமையை உணர்த்த பெண்னின் திறமையை உணராத மனிதருக்காக பாடப்பட்டதே.

எமக்கு இரண்டு கண்ணும் அவசியம். அதில் ஒன்று ஆண்குழந்தையாகவும் மற்றயது பெண்குழந்தையாகவும் இருக்க வேண்டுமே அன்றி இரண்டு கண்ணும் பெண்குழந்தையாகவோ அன்றி ஆண் குழந்தையாகவோ இருக்க வேண்டும் என்பது பொருளல்ல.

புலத்தில் என்ன நடக்கிறது? புறச்சூழலால் பெரிதும் பயந்து பெண்குழந்தைகளின் மேல் அதிக அக்கறையும் அவளை எந்த வகையிலாவது நன்றாக படிப்பிக்கவேண்டும் என்கின்ற நிலையும் காணப்படுகிறது.

அதை விட சிலர் கல்வியை இடை நிறுத்தி திருமண பந்தத்துள் புகுந்தி விடும் நிலையும் உள்ளது. நல்லதை செய்கிறோம் என நினைத்து பெற்றோர் மீண்டும் பேரழிவுகளை குழந்தைகளின் மனவெளியில் உருவாக்கிக்கொண்டு இருக்கிறார்கள்.

நிலவுக்கு பயந்து பரதேசம் போகமுடியுமா?

கல்விமுறை பலதையும் அவர்களிற்கு போதிக்கிறது. அதற்கு ஏற்ப பெற்றோரும் தம்மை மாற்றிக்கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறார்கள். தனித்து புலத்தில் மட்டும் தான் கல்விமுறை பலதையும் வெட்ட வெளிச்சமாக்குகிறது என நினைத்தால் அது பெற்றோரின் தவறே.எங்கும் இதே நிலை தான். சினிமாவில் இருந்து பார்க்கும் தொலைக்காட்சி வரை எல்லாம் வாழ்வியலை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.

வீதியில் போகிறோம். இருவர் முத்தமிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அதற்காக குழந்தையின் கண்களை மூடவா முடியும். எத்தனை நாளிற்கு மூடப்போகிறோம்? அதன் நன்மை தீமைகளை எடுத்த சொல்ல வேண்டியவர்களாக இருக்கிறோம்.

இந்த பயங்களின் காரணமாக பெண்குழந்தைகளிற்கு அதிக பாதுகாப்பு என்கின்ற போர்வையில் பெண்குழந்தைகளின் உணர்வுகளிற்கு மதிப்புக்கொடாது குழந்தைகளை தமது கட்டுப்பாட்டுள் வைத்திருக்க முயல்வதை காணக் கூடியதாக உள்ளது.

பெற்றோரின் இத்தகைய செய்கைகள் குழந்தைகளின் மனவெளியில் அத்து மீறலை உருவாக்கும் என்பதே உண்மை.

ஒரு காலத்தில் ஈழத்தில் மிகவும் கட்டுப்பாடாக வளர்ந்த பெண்குழந்தைகள் காதலித்து திருமணம் செய்ததையும் தாய் தந்தையருக்கு தெரியாமல் காதலனும் காதலியும் ஓடிச்சென்று வாழந்ததையும் நாம் மறந்து போக முடியாது.

இத்தகைய வாழ்வியல் சிக்கல்கள் சில சமயம் புகலிடத்திலும் ஏற்படலாம். நாம் எமது பண்பாட்டு விழுமியங்களை குழந்தைகளிற்கு அன்றாடம் எடுத்து சொல்ல வேண்டியவர்களாக உள்ளோம். நல்லது எது தீயது எது என அவர்களிற்கு அன்றாட வாழ்வில் எம்மைச்சூழ நடப்பவற்றை சுட்டிக்காட்ட வேண்டியவர்களாக இருக்கிறோம்.

உதாரணமாக புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு என கூறினால் மட்டும் போதாது. அதன் பாதிப்புக்களை எடுத்து கூற வேண்டியவர்களாக உள்ளோம். இன்று தானே அத்தனைக்கும் படங்களுடன் கூடிய விளக்கங்கள் குவிந்து கிடக்கின்றன. அவற்றை அவர்களின் மனக்கண்முன் கொண்டு வரவேண்டியவர்களாக உள்ளோம்.

தினசரி தொலைக்காட்சியில் இவற்றுக்கான விவரணங்கள் நேரடி பேட்டிகளுடன் போகிறது அவற்றை காட்ட வேண்டியவர்களாக உள்ளோம். எதையும் காதால் கேட்பதை விட தொலைக்காட்சியில் நேரடியாக பார்க்கும் போது அதன் தாக்கம் அதிகமாகும்.

இன்னோர் உதாரணம் மிக இலகுவாக ஒரு விபத்தை நாம் வாயால் விளங்கப்படுத்துவதை விட அதை நேரில் பார்க்கிறபோது அல்லது தொலைக்காட்சியில் பார்க்கிறபோது ஒரு பயத்தை தருகிறது அல்லவா அதே போன்ற ஒரு தன்மையை குழந்தைகளின் மனதில் ஏற்படுத்த வேண்டியவர்களாக உள்ளோம்.

அதற்காக குழந்தைகளை பயப்படுத்த வேண்டும் என்பது பொருளல்ல.
உலக நடவடிக்கைகளை அன்றாடம் காணும் காட்சிகளை வைத்து அழகுற அன்பாக மிகவும் மென்மையாக மெது மெதுவாக அவர்களிற்கு புரியவைக்கும் கடமை பெற்றோரையே சார்ந்ததாகிறது.

அதற்காக ஒரே நாளில் எல்லாவற்றையும் போதித்து விட முடியாது மெது மெதுவாகத்தான். அவர்களின் மனவெளியில் பதியும் பதிக்க முடியும். ஒரேயடியாக புரியவைத்தால் அவர்களிற்கு ஒரு பயத்தைக் கூட தோற்றுவிக்கலாம்.

பெற்றோரின் அன்பான அணுகுமுறையிலேயே அவர்களின் மனப்பாதிப்பைத் தடுக்கமுடியும்.

புலம்பெயர் பெற்றோரில் பெரும்பாலானோர். பெண்குழந்தைகளில் அதிக கவனத்தை செலுத்துவதால் சிலவேளைகளில் ஆண் குழந்தைகளை கவனியாது விட்டு விடுகிறார்கள்:

காரணம் அவன் ஆண். எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்கின்ற கோட்பாட்டை இன்றுவரை கடைப்பிடிப்பதால்.

பாவம் அந்த ஆண்குழந்தையும் ஒரு நற் பிரஜையாக வாழ வழி என்ன?!!

அந்த ஆண் குழந்தையையும் அழகாக உங்கள் கண்ணில் ஒன்றாக கவனியுங்கள். கண்ணில் ஒன்றைக்குத்தி காட்சி கொடுத்தல் தகுமோ?!!!!!!


நளாயினி தாமரைச்செல்வன்.
24-03-2003

1 comment:

ரங்கா - Ranga said...

அழகாவும், யோசித்தும் எழுதியிருக்கிறீர்கள். துரதிர்ஷ்டவசமாக சமூகத்தில் இருபாலும் சமம் - இருபாலும் தேவை என்ற எண்ணம் அதிகமாக இல்லை. இது ஈழமாகட்டும், இந்தியாவாகட்டும் அல்லது அமெரிக்காவாகட்டும் - இன்னும் பாரபட்சங்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறது. பத்மா அர்விந்த் கூட பெண் சுதந்திரம் பற்றி எழுதியிருக்கிறார் தன் 'தேன் துளி' பக்கத்தில். நீங்கள் குழந்தை வள்ர்ப்பு முறைபற்றி அழகாக் கூறியிருக்கிறீர்கள். நன்றி! தொடர்ந்து எழுதவும்.

ரங்கா.