Saturday, May 12, 2007

ப.வி.ஸ்ரீரங்கன் பார்வையில் எனது கவித்தொகுதிகள்.

நன்றி திண்ணை.கொம்.

http://www.thinnai.com/?module=displaystory&story_id=60611091&format=html



நளாயினி தாமரைச் செல்வன்:உயிர்த்தீ ,நங்கூரம்.


"குறுங்கை இரும்புலிக் கோள்வல் ஏற்றை
ப+நுதல் இரும்பிடி புலம்பத் தாக்கித்
தாழ்நீர் நனந்தலைப் பெருங்களி றடூஉம்
கல்லக வெற்பன்" - நற்.36| 1-4

முன்னொரு காலத்தில்...பகிடிக்குப் பாடியவொரு கவிதையில் சுவைப்பதற்குப் பாவையின் அழகே முதலிடமாக...எனினும் மனதில் உரசி விரியும் ஒரு அற்ப உணர்வாக இந்த நெடி பண்டுதொட்டு வீசியபடிதாம் இருக்கிறது!இந்த நெடி மிகப் பழமையானது.அதன் சாரம் உயிரினது இருப்போடு உரசிக்கொண்ட அகாலப் பொழுதில்தாம் அது"காதல்"என்ற கோதாவில் நம்மிடம் அறிமுகமாகிறது.

"கவிழ்மயிர் எருத்திற் செந்நாய் ஏற்றை
குருளைப்பன்றி கொள்ளாது கழியும்
சுரன்"-ஐங்.397| 1-3

எனக்குத் தெரிந்த இந்தச் சமாச்சாரம் வெறும் புணர்வின் உந்துதலால் எப்பவோ தோன்றி என்னைத் தாழ்த்தியபடி,தடவியபடி,எனது காலை வாரியபடி மெல்லக் கொல்லும்!எனக்கும் அப்பப்ப நேசிக்கத் தெரிந்திருக்கிறது.நான் எனக்குள் கும்மியடிப்பதற்காகக் "காதலித்த"வரலாறு மிகக் குறுகியது.அந்தக் குறுகிய பொழுதில் எனக்கு நானே எமனாக விரிந்ததும் உண்டு.ஒரு அப்பாவியாய் வாழ்வில் குறுக்கிட்டவளை வசமாக வதைப்பதில் நான் எமனுக்கு நிகரானவன் என்பது அந்தக்"காதலின்"மறு பக்கமாய் நிழல் பரப்பிய இன்றைய பொழுதில் ஒருசில "காதற் கவிதைகளை"நளாயினி தாமரைச் செல்வன் தந்திருக்கிறார்!

"நங்கூரம்"
"உயிர்த்தீ"

நளாயினியின் முதற் தொகுப்பு நங்கூரம்!அது கடலிலிட்ட நங்கூரமாகவே இருப்பதில் வியப்பில்லை.அங்குமிங்குமாகவே படித்துப்பார்த்தேன்.பிடித்ததென்று கூறுமளவுக்கு அவரது உணர்வுகள் எதுவும் என்னை ஒன்றுஞ் செய்யவில்லை.ஆரம்பக் காலத்து எழுத்துகளுக்கு எப்பவும் இந்தக் கதைதாம்.எனினும் அவை பேசுவது படிமங்களில்பட்டுச் சிந்திப்பதன் உணர்வு தரும்"ஏற்ற இறக்கங்களாக"இருப்பதும் சாத்தியமானதே.

"உன்னை என் விழிகள் கண்டதும்
என்னமாய்ப் படபடக்கும்
அதனோடு கூச்சமும்,காதலும்
என்னுள் பவனி வரும்.
எனக்கு அருகில்
நீ வரும் போது
ப+கம்ப அதிர்வு..."-நங்கூரம்,நளாயினி.

காதல் என்பது காமத்தின் நெருக்குதல் தரும் தரும அடிதாம்.அதைமீறி அதற்கென்றொரு மண்ணுமில்லை.பச்சைக் கருக்கு மட்டையால சாத்தும் பருவக் கோளாறுக்கு புலம்பித்திரிதல் "எதிர்பால்"எழும் வினையோடு அலைந்து,சல்லாபத்துக்கான தோலின் தேடுதலோடு வண்டிகட்டி"காதற் சுமை"காவித் திரிவது மனித மொழிகளுக்குள் பல்வினைப் பயனாய்க் கிடந்தலைகிறது.

"காமம் காமம் என்ப காமம்
அணங்கும் பிணியு மன்றே நுணங்கிக்
கடுத்தலும் தணிதலும் இன்றே யானை
குளகுமென் றான்மதம் போலப்
பாணியு முடைத்தது காணுநர்ப் பெறினே" குறுந்தொகை.136

எந்தக் காலத்தில் நின்றாலும்,நிலைத்தாலும் சிந்தனைத் தொடர்ச்சிக்கு ஒரு குறுக்கு மதில் கட்டிக்கொள்ள முடிந்திருக்கா?எதைப்பற்றியுரைப்பினும்-"இது"பற்றியுரைப்பதும் சற்றுக் கடுப்பாகித் தணிவதற்கானதாக மேவுவது சாலப் பொருந்தும்-இடம்- எனக்கு சற்று அதிகமானதாகப் படும்போது, நான் காதல் என்றொரு கதையைக் கிளப்பி விடுவதுண்டு!அதுவும் சற்றுச் சிக்கல் நிறைந்த பருவத்தைக் கண்டால் "பட்டபாட்டுக்குக் கெட்டகேட்டுக்குப் பாயும்" உணர்வுக் கொதிக்கு நான் படும்பாடு அந்த"நாய்ப் பாடு",அப்படியொரு சக்கரத்தில் சுற்றிச் சுற்றி வரும் செக்கு மாட்டுச் சூழலை உடைத்தபடி நளாயினி எழ முனையும் தொகுப்பாக "உயிர்த்தீயை"படித்தபோது உணரத்தக்கதாக இருந்திருக்கிறது.

"மைவளம் ப+த்த மலரேர் மழைக்கண்ணார்
கைவளம் ப+த்த வடுவொடு காணாய் நீ
மொய்வளம் ப+த்த முயக்கம்யாம் கைப்படுத்தேம்
மெய்வளம் ப+த்த விளைதகு பொன்னணி"-பரி.18|16-19

பரிபாடலென்ன பண்டையப் பாட்டியின் பிதற்லென்ன எல்லாம் அந்தத் திசையை மேவுவதற்காகத் தெய்வத்தின்மீது "காதலாகிக் கசிந்து"தத்தம் காமத்தைக் குறியீடாக்கியது மட்டுமல்ல அதை வெளிப்படுத்துவதிலும் ஒரு புரட்சியைச் செய்து காட்டினாள் ஆண்டாள் என்ற சீமாட்டி.சிரித்து,இரசித்து,சுவைத்துத் தமிழை ஆண்டாள் அவள்.

நளாயினிக்கு உரிய காலம் இப்போது தோன்றிவிட்டது.பெண் தனது உணர்வுகளை அசலாக வெளிப்படத்தும் ஒரு காலத்தைக் கனிய வைத்த மானுட வளர்ச்சிப்போக்கு இத்தககைய உணர்வுகளை வெளிப்படையாகச் சொல்லும் அளவுக்கு ஆண்டாள்களை உருவகித்துள்ளது.இத்தகையவொரு சந்தர்ப்பத்தை எவரும் வருந்தித் தேடியதில்லை.எனினும் இதுவும் மிக முக்கியமானவுணர்தானே!

இஃதின்றி உண்டோ உலக உய்வு?
"காதல் காதல்,இல்லையேல் சாதல்,சாதல்"

என்றெல்லாம் நம்மட ஆட்கள் பாடிச் சென்றுள்ளான்கள்.இப்படி எக்கச்சக்கமான வீராதி வீரன்கள் எல்லாம் பாடிய நிலையில் நாமும் நளாயினியின்"காதற் கவிதைகளோடு"ஒன்றியும் ஒன்றாமலும் ஓரத்தில் நின்றபடி கொஞ்சம் உரசிப் பார்ப்பதும்,துரத்திப் பிடிப்பதும் சாத்தியமே.

நளாயினி தனது மனதைக் காதலோடு கண்டடைந்த பொழுதொன்று கவிதையாகிறது.

"...இப்போதாவது
கண்டெடுத்தேன!!
காமக் கிளர்வுகள் ஏதுமின்றி
உன் பாதச் சுவடுகளையும்
நினைவுகளையும்
சிரிப்பொலிகளையும்
துன்பங்களையும்
தாங்கியபடி
நட்பா!?காதலா!?
பிரித்துப் பார்க்க முடியவில்லை..."-உயிர்த்தீ.பக்கம்:8

எப்படியோ நளாயினிக்கும் இந்தப் பிரச்சனை வந்துவிட்டது.
நட்பு-காதல்!காதலென்றால் அதற்கு"எதிர்பால்"எழும் வினையுண்டென்று உணரத்தக்கவொரு சூழலில்தாம் இந்தப் பிரச்சனை முகத்தில் ஓங்கியொரு உதைவிடுகிறது.சும்மா நட்பு,காதலென்று உருட்டிப் புரட்டியொரு ரீல்விடுவதில் எந்தப் பலனுமில்லை.எனக்குக் காதலென்றால் அது எப்பவும் உடல் சார்ந்த"எதிர்பால் வினை"தாம்.இப்பவெல்லாம் நல்ல நல்ல மெழுகுத் தோல்களில்-அதுவும் பொன்னிறத் தோல்கள் படுத்தும்பாடு பெரும்பாடு!தமிழ்ச் சினிமாவின்"பெண்"என்னையெல்லாம் உருட்டிப் புரட்டியெடுத்து எச்சிலூறும் பொழுதுகளுக்குள் தள்ளி அவமானப்படுத்துவதும் மனசில் உரசும்போது,மீளவும்"காதலா,நட்பா"என்ற கேள்வியெல்லாம் நரகலோகத்துக்குரியது.

"மக்கள் பயந்து மனை அறம் ஆற்றுதல்
தக்கது அறிந்தார் தலைமைக் குணம் என்ப
பைத்தரவு அல்குல் படிற்றுரை யாரொடு
துய்த்துக் கழிப்பது தோற்றம் ஒன்றுஇன்றே."-வளையாபதி

எல்லோரும் நல்ல மனையாளோடு வாழ்வது...என்று பாடும்போது,நல்ல மனையானோடு(ஆண்பால்)வாழ்வதுபற்றி எந்தப் பெண்ணும் பாடித்தானாகவேண்டும்.அந்தக் காலத்துச் சுப்பர்களெல்லாம் தங்கட மனசில"பெண்டிர்களை"த் தகவமைத்தபோது"கொடியிடை,இஞ்சி இடுப்பழகி,நூலிடையாள்"என்று கக்கூசுக்குள்ளிருந்து யோசிச்சபோது,இந்தப் பெண்களும் தங்கட இரசனைகளை வலுவாகச் சொன்னாதாகச் சரித்திரமில்லை.கோகுலத்துப் பசுக்களெல்லாம் கோபாலனின் பேரைக்கேட்டே பலபடி பால் கறந்தபோது, நமது தேசத்துப் பெண்களெல்லாம் தத்தமது கோபாலர்களின் பெருமைகளைச் சொல்லித்தான் ஆகவேண்டும்.

"...உன் அழகு
உன் எழில்
உன் நடை
உன் தோற்றம்
உன் மதிநுட்பம்
அப்பப்பா
இன்னும் இன்னும்
எப்படி உன்னில் மட்டும்?..."-நங்கூரம்,பக்கம்:37

எல்லோரும் சொன்ன "பெருமைகளில்"உருவமைத்த ஊனங்களில் மிகுதி இன்புறல்"காதலிக்கும்"நளாயினிக்கும் சாத்தியமாவது புரிந்துகொள்ளத் தக்கதே.நமது வாழ்சூழலை மீறித் திடகாத்திரமாக எழுந்து உணர்வுகளைப் பகிர்வதற்கு மிகுந்த பயிற்சி வேண்டும்.அதை நளாயினி உயிர்த்தீயில் இப்படிச் சொல்கிறார்:

"உன் அங்கவஸ்த்திரம் கொண்டு
என் உயிர் பறித்தவனே!!
வாத்தியக் கருவி
ஒன்றைக் கண்டெடுத்தேன்.
அடடே!!
பார்த்துக் கொண்டிருக்கவே
எனக்குள் எத்தனை நாதம்."-உயிர்த்தீ,பக்கம்:48

கவிதையை வாசித்துவிட்டு,கொஞ்சம் கற்பனையை விரியவிட்டால் இரசவாதம் ரொம்பக் கறாராகவிரியும்!ஆனால் இது அப்படியல்ல.நளாயினியின் குடும்பம் இசைக் குடும்பம்-இசைக்கும் குடும்பம்!அவரால் கண்டெடுக்கப்பட்ட வாத்தியக் கருவி எதுவென்று பெரிதாக யோசிக்கத் தேவையில்லை.

இப்போதெல்லாம் காதலென்பதை தமிழ்ச் சினிமா மொழியில் சொல்வதைத் தவிர வேறுபல கூறுகளைப் பேசமுடியாதுள்ளது.தமிழ்ச் சினிமாவில் ஒரு துண்டு துணியோடு ஓடவோட விரட்டிப் பிடித்து,பிசைந்தெடுக்கப்படும் நாயகி "உண்டி சுருங்குதல் பெண்டிற்கு அழகு"என்று பிரக்டிக்கலாகாச் சொல்லும்போது,நாமும் அவளின் பொக்கிளின்(தொப்புள்) அழகோடு சங்கமித்து,நம்மை வருத்தும்போது-

"மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பு மிகை,அவை உள்வழிப்
பற்றா வினையாய்ப் பல பல யோனிகள்
அற்றா யுழலும் அறிதற்கு அரிதே."-வளையாபதி.

இப்படி வளையாபதியில் பாடுகிறதையும் கொஞ்சம் யோசித்துக் கிடக்கத்தாம் வேண்டும்.ஆனால் நளாயினி காதலிப்பதின் சுகத்தையும்,வலியையும்-தன்னைப் புரிவதையும்,உணர்வதையும் உயிர்த் தீயில் சொல்லும்போது அதையும் செவிகொண்டு கேட்பதில் நான் எதையும் இழப்பதற்கில்லைத்தாம்.

"என் உடலுக்கு
உயிர் தா.
என் இதயத்திற்குச் சுவாசம் தா.
என் நரம்புகளுள்
உணர்வு சேர்.
என் விழிகளுக்கு
ஒளிய+ட்டு.
எனக்குள் கவிதை
ஊற்றாய் வா.
நீ தந்த உயிர் மூச்சு
என்னை விட்டுப் பிரியும்வரை
உன்னையே என் கவி
தொழுது நிற்கும்..." என்று எழுதிய நளாயினிதாம் இப்படியும் எழுதுகிறார்:

"என் எதிர்பார்ப்புகள் எல்லாமே
தொலைந்து போவதாய்.
கல்லெறிந்தே கொல்லும் மனிதர்
வார்த்தை அம்புகளால்.
என் இதயத்தால் வழிகிறது குருதி...
...என்னைச் சூழ இருந்த
நண்பரைக் காணவில்லை.

அவர்களின்(ஒருமை இங்கே பன்மையுற்றிருப்பினும்...)சாயலில்
மர்ம மனிதர் பலர்.
என்னை நரபலி எடுக்கத் துடிக்கும் அவசரம்..." - உயித்தீ,பக்கம்:122

பறந்து பறந்து காதலைப் பாடினாலும் நாம் இந்தச் சமூதாயத்துள் கால் பதித்தேதாம் இருக்கிறோம் என்பதையும் நளாயினி புரிந்தே இருக்கிறார்.இந்தப் புரிதல் அவரிடம் நல்ல படைப்புகளைக் காலப்போக்கில் எதிர்பார்க்கத் தூண்டுகிறது.

"விரிதிரைப் பெருங்கடல் வளைய உலகமும்
அரிதுபெறு சிறப்பிற் புத்தேள் நாடும்
இரண்டுந் தூக்கிற் சீர்சா லாவே
ப+ப்போல் உண்கண் பொன்போல் மேனி
மாண்வரி அல்குற் குறுமகள்
தோள் மாறு படூஉம் வைகலோ டெமக்கே."-(குறுந்தொகை:101)

ப.வி.ஸ்ரீரங்கன்
01.11.2006

No comments: