Friday, May 18, 2007

எனக்கே எனக்கான சூரியன் நீ.

photo by nalayiny.




படத்தின் மேல் கிளிக்செய்து பெரிதாக பார்க்கமுடியும்.

Wednesday, May 16, 2007

HYcoo poem.

1)உறவுகளை காணோம்.

மலர்க் கொத்துக்கள்.

முதியோர் இல்லம்.



2)ஈழ வான்பரப்பில்

இயந்திரப் பறவைகள்

தமிழின அறுவடை.


3)சிறகரிந்து

வீட்டில் கற்கும் கிளி

பெண்.


4)பசி

ஏப்பம் விட்டது

அம்மா தயே.


5)உழாது

விதைத்த நெல்மணி

சிசுக்கொலை.


6)முத்தம்

கலைத்த முகில்

கார் கூந்தல்


7)அம்மா திரித்த

கயிறு

தொப்புள் கொடி.



8)சூரியனின்

கை பிடித்துப் போகிறாள்.

சூரிய காந்திப்பூ



9)

மனிதம்

மண்டியிட மறுப்பு

போர்




10)சிவந்த விழி

கன்னத்தளும்பு

அராஜக கணவன்

ஆக்கம் நளாயினி தாமரைச்செல்வன்.

மலையின் உச்சியில் விலங்கொன்றின் இருப்பு.!

photo by nalayiny.

Saturday, May 12, 2007

ப.வி.ஸ்ரீரங்கன் பார்வையில் எனது கவித்தொகுதிகள்.

நன்றி திண்ணை.கொம்.

http://www.thinnai.com/?module=displaystory&story_id=60611091&format=html



நளாயினி தாமரைச் செல்வன்:உயிர்த்தீ ,நங்கூரம்.


"குறுங்கை இரும்புலிக் கோள்வல் ஏற்றை
ப+நுதல் இரும்பிடி புலம்பத் தாக்கித்
தாழ்நீர் நனந்தலைப் பெருங்களி றடூஉம்
கல்லக வெற்பன்" - நற்.36| 1-4

முன்னொரு காலத்தில்...பகிடிக்குப் பாடியவொரு கவிதையில் சுவைப்பதற்குப் பாவையின் அழகே முதலிடமாக...எனினும் மனதில் உரசி விரியும் ஒரு அற்ப உணர்வாக இந்த நெடி பண்டுதொட்டு வீசியபடிதாம் இருக்கிறது!இந்த நெடி மிகப் பழமையானது.அதன் சாரம் உயிரினது இருப்போடு உரசிக்கொண்ட அகாலப் பொழுதில்தாம் அது"காதல்"என்ற கோதாவில் நம்மிடம் அறிமுகமாகிறது.

"கவிழ்மயிர் எருத்திற் செந்நாய் ஏற்றை
குருளைப்பன்றி கொள்ளாது கழியும்
சுரன்"-ஐங்.397| 1-3

எனக்குத் தெரிந்த இந்தச் சமாச்சாரம் வெறும் புணர்வின் உந்துதலால் எப்பவோ தோன்றி என்னைத் தாழ்த்தியபடி,தடவியபடி,எனது காலை வாரியபடி மெல்லக் கொல்லும்!எனக்கும் அப்பப்ப நேசிக்கத் தெரிந்திருக்கிறது.நான் எனக்குள் கும்மியடிப்பதற்காகக் "காதலித்த"வரலாறு மிகக் குறுகியது.அந்தக் குறுகிய பொழுதில் எனக்கு நானே எமனாக விரிந்ததும் உண்டு.ஒரு அப்பாவியாய் வாழ்வில் குறுக்கிட்டவளை வசமாக வதைப்பதில் நான் எமனுக்கு நிகரானவன் என்பது அந்தக்"காதலின்"மறு பக்கமாய் நிழல் பரப்பிய இன்றைய பொழுதில் ஒருசில "காதற் கவிதைகளை"நளாயினி தாமரைச் செல்வன் தந்திருக்கிறார்!

"நங்கூரம்"
"உயிர்த்தீ"

நளாயினியின் முதற் தொகுப்பு நங்கூரம்!அது கடலிலிட்ட நங்கூரமாகவே இருப்பதில் வியப்பில்லை.அங்குமிங்குமாகவே படித்துப்பார்த்தேன்.பிடித்ததென்று கூறுமளவுக்கு அவரது உணர்வுகள் எதுவும் என்னை ஒன்றுஞ் செய்யவில்லை.ஆரம்பக் காலத்து எழுத்துகளுக்கு எப்பவும் இந்தக் கதைதாம்.எனினும் அவை பேசுவது படிமங்களில்பட்டுச் சிந்திப்பதன் உணர்வு தரும்"ஏற்ற இறக்கங்களாக"இருப்பதும் சாத்தியமானதே.

"உன்னை என் விழிகள் கண்டதும்
என்னமாய்ப் படபடக்கும்
அதனோடு கூச்சமும்,காதலும்
என்னுள் பவனி வரும்.
எனக்கு அருகில்
நீ வரும் போது
ப+கம்ப அதிர்வு..."-நங்கூரம்,நளாயினி.

காதல் என்பது காமத்தின் நெருக்குதல் தரும் தரும அடிதாம்.அதைமீறி அதற்கென்றொரு மண்ணுமில்லை.பச்சைக் கருக்கு மட்டையால சாத்தும் பருவக் கோளாறுக்கு புலம்பித்திரிதல் "எதிர்பால்"எழும் வினையோடு அலைந்து,சல்லாபத்துக்கான தோலின் தேடுதலோடு வண்டிகட்டி"காதற் சுமை"காவித் திரிவது மனித மொழிகளுக்குள் பல்வினைப் பயனாய்க் கிடந்தலைகிறது.

"காமம் காமம் என்ப காமம்
அணங்கும் பிணியு மன்றே நுணங்கிக்
கடுத்தலும் தணிதலும் இன்றே யானை
குளகுமென் றான்மதம் போலப்
பாணியு முடைத்தது காணுநர்ப் பெறினே" குறுந்தொகை.136

எந்தக் காலத்தில் நின்றாலும்,நிலைத்தாலும் சிந்தனைத் தொடர்ச்சிக்கு ஒரு குறுக்கு மதில் கட்டிக்கொள்ள முடிந்திருக்கா?எதைப்பற்றியுரைப்பினும்-"இது"பற்றியுரைப்பதும் சற்றுக் கடுப்பாகித் தணிவதற்கானதாக மேவுவது சாலப் பொருந்தும்-இடம்- எனக்கு சற்று அதிகமானதாகப் படும்போது, நான் காதல் என்றொரு கதையைக் கிளப்பி விடுவதுண்டு!அதுவும் சற்றுச் சிக்கல் நிறைந்த பருவத்தைக் கண்டால் "பட்டபாட்டுக்குக் கெட்டகேட்டுக்குப் பாயும்" உணர்வுக் கொதிக்கு நான் படும்பாடு அந்த"நாய்ப் பாடு",அப்படியொரு சக்கரத்தில் சுற்றிச் சுற்றி வரும் செக்கு மாட்டுச் சூழலை உடைத்தபடி நளாயினி எழ முனையும் தொகுப்பாக "உயிர்த்தீயை"படித்தபோது உணரத்தக்கதாக இருந்திருக்கிறது.

"மைவளம் ப+த்த மலரேர் மழைக்கண்ணார்
கைவளம் ப+த்த வடுவொடு காணாய் நீ
மொய்வளம் ப+த்த முயக்கம்யாம் கைப்படுத்தேம்
மெய்வளம் ப+த்த விளைதகு பொன்னணி"-பரி.18|16-19

பரிபாடலென்ன பண்டையப் பாட்டியின் பிதற்லென்ன எல்லாம் அந்தத் திசையை மேவுவதற்காகத் தெய்வத்தின்மீது "காதலாகிக் கசிந்து"தத்தம் காமத்தைக் குறியீடாக்கியது மட்டுமல்ல அதை வெளிப்படுத்துவதிலும் ஒரு புரட்சியைச் செய்து காட்டினாள் ஆண்டாள் என்ற சீமாட்டி.சிரித்து,இரசித்து,சுவைத்துத் தமிழை ஆண்டாள் அவள்.

நளாயினிக்கு உரிய காலம் இப்போது தோன்றிவிட்டது.பெண் தனது உணர்வுகளை அசலாக வெளிப்படத்தும் ஒரு காலத்தைக் கனிய வைத்த மானுட வளர்ச்சிப்போக்கு இத்தககைய உணர்வுகளை வெளிப்படையாகச் சொல்லும் அளவுக்கு ஆண்டாள்களை உருவகித்துள்ளது.இத்தகையவொரு சந்தர்ப்பத்தை எவரும் வருந்தித் தேடியதில்லை.எனினும் இதுவும் மிக முக்கியமானவுணர்தானே!

இஃதின்றி உண்டோ உலக உய்வு?
"காதல் காதல்,இல்லையேல் சாதல்,சாதல்"

என்றெல்லாம் நம்மட ஆட்கள் பாடிச் சென்றுள்ளான்கள்.இப்படி எக்கச்சக்கமான வீராதி வீரன்கள் எல்லாம் பாடிய நிலையில் நாமும் நளாயினியின்"காதற் கவிதைகளோடு"ஒன்றியும் ஒன்றாமலும் ஓரத்தில் நின்றபடி கொஞ்சம் உரசிப் பார்ப்பதும்,துரத்திப் பிடிப்பதும் சாத்தியமே.

நளாயினி தனது மனதைக் காதலோடு கண்டடைந்த பொழுதொன்று கவிதையாகிறது.

"...இப்போதாவது
கண்டெடுத்தேன!!
காமக் கிளர்வுகள் ஏதுமின்றி
உன் பாதச் சுவடுகளையும்
நினைவுகளையும்
சிரிப்பொலிகளையும்
துன்பங்களையும்
தாங்கியபடி
நட்பா!?காதலா!?
பிரித்துப் பார்க்க முடியவில்லை..."-உயிர்த்தீ.பக்கம்:8

எப்படியோ நளாயினிக்கும் இந்தப் பிரச்சனை வந்துவிட்டது.
நட்பு-காதல்!காதலென்றால் அதற்கு"எதிர்பால்"எழும் வினையுண்டென்று உணரத்தக்கவொரு சூழலில்தாம் இந்தப் பிரச்சனை முகத்தில் ஓங்கியொரு உதைவிடுகிறது.சும்மா நட்பு,காதலென்று உருட்டிப் புரட்டியொரு ரீல்விடுவதில் எந்தப் பலனுமில்லை.எனக்குக் காதலென்றால் அது எப்பவும் உடல் சார்ந்த"எதிர்பால் வினை"தாம்.இப்பவெல்லாம் நல்ல நல்ல மெழுகுத் தோல்களில்-அதுவும் பொன்னிறத் தோல்கள் படுத்தும்பாடு பெரும்பாடு!தமிழ்ச் சினிமாவின்"பெண்"என்னையெல்லாம் உருட்டிப் புரட்டியெடுத்து எச்சிலூறும் பொழுதுகளுக்குள் தள்ளி அவமானப்படுத்துவதும் மனசில் உரசும்போது,மீளவும்"காதலா,நட்பா"என்ற கேள்வியெல்லாம் நரகலோகத்துக்குரியது.

"மக்கள் பயந்து மனை அறம் ஆற்றுதல்
தக்கது அறிந்தார் தலைமைக் குணம் என்ப
பைத்தரவு அல்குல் படிற்றுரை யாரொடு
துய்த்துக் கழிப்பது தோற்றம் ஒன்றுஇன்றே."-வளையாபதி

எல்லோரும் நல்ல மனையாளோடு வாழ்வது...என்று பாடும்போது,நல்ல மனையானோடு(ஆண்பால்)வாழ்வதுபற்றி எந்தப் பெண்ணும் பாடித்தானாகவேண்டும்.அந்தக் காலத்துச் சுப்பர்களெல்லாம் தங்கட மனசில"பெண்டிர்களை"த் தகவமைத்தபோது"கொடியிடை,இஞ்சி இடுப்பழகி,நூலிடையாள்"என்று கக்கூசுக்குள்ளிருந்து யோசிச்சபோது,இந்தப் பெண்களும் தங்கட இரசனைகளை வலுவாகச் சொன்னாதாகச் சரித்திரமில்லை.கோகுலத்துப் பசுக்களெல்லாம் கோபாலனின் பேரைக்கேட்டே பலபடி பால் கறந்தபோது, நமது தேசத்துப் பெண்களெல்லாம் தத்தமது கோபாலர்களின் பெருமைகளைச் சொல்லித்தான் ஆகவேண்டும்.

"...உன் அழகு
உன் எழில்
உன் நடை
உன் தோற்றம்
உன் மதிநுட்பம்
அப்பப்பா
இன்னும் இன்னும்
எப்படி உன்னில் மட்டும்?..."-நங்கூரம்,பக்கம்:37

எல்லோரும் சொன்ன "பெருமைகளில்"உருவமைத்த ஊனங்களில் மிகுதி இன்புறல்"காதலிக்கும்"நளாயினிக்கும் சாத்தியமாவது புரிந்துகொள்ளத் தக்கதே.நமது வாழ்சூழலை மீறித் திடகாத்திரமாக எழுந்து உணர்வுகளைப் பகிர்வதற்கு மிகுந்த பயிற்சி வேண்டும்.அதை நளாயினி உயிர்த்தீயில் இப்படிச் சொல்கிறார்:

"உன் அங்கவஸ்த்திரம் கொண்டு
என் உயிர் பறித்தவனே!!
வாத்தியக் கருவி
ஒன்றைக் கண்டெடுத்தேன்.
அடடே!!
பார்த்துக் கொண்டிருக்கவே
எனக்குள் எத்தனை நாதம்."-உயிர்த்தீ,பக்கம்:48

கவிதையை வாசித்துவிட்டு,கொஞ்சம் கற்பனையை விரியவிட்டால் இரசவாதம் ரொம்பக் கறாராகவிரியும்!ஆனால் இது அப்படியல்ல.நளாயினியின் குடும்பம் இசைக் குடும்பம்-இசைக்கும் குடும்பம்!அவரால் கண்டெடுக்கப்பட்ட வாத்தியக் கருவி எதுவென்று பெரிதாக யோசிக்கத் தேவையில்லை.

இப்போதெல்லாம் காதலென்பதை தமிழ்ச் சினிமா மொழியில் சொல்வதைத் தவிர வேறுபல கூறுகளைப் பேசமுடியாதுள்ளது.தமிழ்ச் சினிமாவில் ஒரு துண்டு துணியோடு ஓடவோட விரட்டிப் பிடித்து,பிசைந்தெடுக்கப்படும் நாயகி "உண்டி சுருங்குதல் பெண்டிற்கு அழகு"என்று பிரக்டிக்கலாகாச் சொல்லும்போது,நாமும் அவளின் பொக்கிளின்(தொப்புள்) அழகோடு சங்கமித்து,நம்மை வருத்தும்போது-

"மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பு மிகை,அவை உள்வழிப்
பற்றா வினையாய்ப் பல பல யோனிகள்
அற்றா யுழலும் அறிதற்கு அரிதே."-வளையாபதி.

இப்படி வளையாபதியில் பாடுகிறதையும் கொஞ்சம் யோசித்துக் கிடக்கத்தாம் வேண்டும்.ஆனால் நளாயினி காதலிப்பதின் சுகத்தையும்,வலியையும்-தன்னைப் புரிவதையும்,உணர்வதையும் உயிர்த் தீயில் சொல்லும்போது அதையும் செவிகொண்டு கேட்பதில் நான் எதையும் இழப்பதற்கில்லைத்தாம்.

"என் உடலுக்கு
உயிர் தா.
என் இதயத்திற்குச் சுவாசம் தா.
என் நரம்புகளுள்
உணர்வு சேர்.
என் விழிகளுக்கு
ஒளிய+ட்டு.
எனக்குள் கவிதை
ஊற்றாய் வா.
நீ தந்த உயிர் மூச்சு
என்னை விட்டுப் பிரியும்வரை
உன்னையே என் கவி
தொழுது நிற்கும்..." என்று எழுதிய நளாயினிதாம் இப்படியும் எழுதுகிறார்:

"என் எதிர்பார்ப்புகள் எல்லாமே
தொலைந்து போவதாய்.
கல்லெறிந்தே கொல்லும் மனிதர்
வார்த்தை அம்புகளால்.
என் இதயத்தால் வழிகிறது குருதி...
...என்னைச் சூழ இருந்த
நண்பரைக் காணவில்லை.

அவர்களின்(ஒருமை இங்கே பன்மையுற்றிருப்பினும்...)சாயலில்
மர்ம மனிதர் பலர்.
என்னை நரபலி எடுக்கத் துடிக்கும் அவசரம்..." - உயித்தீ,பக்கம்:122

பறந்து பறந்து காதலைப் பாடினாலும் நாம் இந்தச் சமூதாயத்துள் கால் பதித்தேதாம் இருக்கிறோம் என்பதையும் நளாயினி புரிந்தே இருக்கிறார்.இந்தப் புரிதல் அவரிடம் நல்ல படைப்புகளைக் காலப்போக்கில் எதிர்பார்க்கத் தூண்டுகிறது.

"விரிதிரைப் பெருங்கடல் வளைய உலகமும்
அரிதுபெறு சிறப்பிற் புத்தேள் நாடும்
இரண்டுந் தூக்கிற் சீர்சா லாவே
ப+ப்போல் உண்கண் பொன்போல் மேனி
மாண்வரி அல்குற் குறுமகள்
தோள் மாறு படூஉம் வைகலோ டெமக்கே."-(குறுந்தொகை:101)

ப.வி.ஸ்ரீரங்கன்
01.11.2006

Friday, May 11, 2007

நவீன ஓவியத்தின் கூறுகள். 2

photo by nalayiny.


யாருடைய காலடித்தடம்.? ரணப்பட்டு கிடக்கிறது.

“நங்கூரம்” கவிதைத் தொகுப்பு -ஓர் அறிமுகம்!

-ஓர் அறிமுகம்!
-ரவி(சுவிஸ்) -
நன்றி http://www.vaarppu.com/





“புதிதாய்ப் பிறந்துவிட்டுப் போகிறேன்”

அந்த வீதியில்
நீயும் நானும்
நட்பாய்த் தெரிந்த
முகம் ஒன்று

நானோ நட்பாய்
சிரித்து வைத்தேன்

ஆனால் நீயோ
அவனைப் பார்த்து
என்ன சிரிப்பு
எனக் கூறியபோது
ஏனோ அதிகம்
இடிந்துபோனது
நம் காதல்தான்.

உனக்கான காத்திருப்பில்
நீ வரப் பிந்தியதால்
என் நண்பனோடு
சிரித்துக் கதைத்தேன்.

ஆனால் நீயோ
என்ன கதைத்தாய் என
என்னைக் குடைந்தெடுத்து
குற்றக் கூண்டில்
நிறுத்தினாய் பார்
அப்போ என் மனம்
நீ என்மீது வைத்துள்ள
காதலையும் நம்பிக்கையையும்
ஆய்வுசெய்து
அறிக்கை எழுதத் தவறவில்லை.

என் கூந்தலை வெட்டியதற்காய்
எப்படியெல்லாம் திட்டித்
தீர்த்தாய்
நான் உன்னிலிருந்து விலகிப்
போகவல்லவா செய்துவிட்டாய்.

காதல் என்றால் என்னவென்று
தெரியுமா உனக்கு?
எனக்கே எனக்கான வாழ்வையும்
உனக்கே உனக்கான வாழ்வையும்
நீயும் நானும்
மனம் கோர்த்து
வாழ்ந்து பார்ப்பதுதான்

அதற்காய்
என் வாழ்வை
என் விருப்புவெறுப்பை
எல்லாம் துறந்து
உனக்காய் மட்டும் என் விருப்பு வெறுப்போடு
உனக்காய் வாழ
எனக்கு இஸ்டமில்லை.

நீ நினைக்கும்
குருட்டு
செவிட்டு
ஊமைக் காதலியாக நான்
இருப்பேன் என நினையாதே.

என்னை சிதை ஏற்றாமல்
என்னை எனக்கே
திருப்பித் தந்துவிடு.

போதும்
நீ என்மீது வைத்த காதலும்
அதன் மீதான நம்பிக்கையும்.

போனால் போகிறது
நான் உன்மீது
கொண்ட காதலைப் புதைத்து
மீண்டும் புதிதாய்
பிறந்துவிடப் போகிறேன்.

-நளாயினி

காதல் பற்றி சினிமா சலிக்கச் சலிக்கப் பேசிவருகிறது. இன்று காசுக்குக் கவிதை பண்ணும் சினிமா பாடலாசிரியர்களிலிருந்து திருப்திக்காக எழுதும் கவிஞர்கள் வரையும் பேசிக்கொண்டுதானிருக்கிறார்கள். கவிதை எழுதுவது காதலுக்குத் தகுதியாய் இழையோடும் புள்ளி வரையிலும் கூட பெரிது படுத்தப்பட்டுக் கொண்டிருப்பது காதல். பண்டித சிகாமணிகளிலிருந்து அரட்டை அரங்கிப்போர் வரையிலும் படாத பாடுபட்டு இழுத்து வைத்து வரையறை செய்கிறார்கள். நட்பு, அன்பு, காதல் இதுவெல்லாம் கற்பிதம் என்கின்றனர் பின் நவீனத்துவ மொழிபெயர்ப்பில் அதுவறிந்தோர். ஒன்றை மட்டும் சொல்ல முடிகிறது. நிலவும் இந்த ஆண் பெண் உறவு முறைகளில் உளவியல் முறைமைக்குள் அதனடிப்படையான வாழ்முறைக்குள் காதல் என்பது உணர்வு சார்ந்து உணர்ச்சி சார்ந்து செயற்படுகிறது என்பதை சொல்ல முடியும். நட்பு அன்பு என்பதும் அப்படியே. அதுவும் கூட்டு வாழ்முறைக்குள் இது அதிகம் செயற்பட வாய்ப்பு உண்டு. அதேயளவு இவற்றின் மீதான இடக்குமுடக்குகளும் உண்டு. ஆக வாழ்நிலை சார்ந்து பேசப்படும் பொருளாக இவைகளெல்லாம் இருக்கிறது எனலாம். அறிவியல் பூர்வமாக காதலை நட்பை அன்பை கற்பிதமாக நிறுவக் கூடிய அல்லது நிறுவ முயல்பவர்கள் கூட தனது தாயின் இறப்பில் கண்ணீர் வடிக்கின்றனர்தான்.

“காதல் என்பது பொறாமையின் இன்னொரு வடிவம் என்பார்கள். காதல் என்பது வெறும் "சென்டிமென்ட் பிளாக் மெயில்" என்றே நான் கருதுகிறேன். இரு உடல்கள் சேருவதற்கு நமக்கு ஒரு கலாச்சார காரணம் தேவைப் படுகிறது. அதற்கு நாம் காதல் என்று பெயரிட்டுள்ளோம்...” என்கிறார் சோபாசக்தி, மலையாள இதழொன்றுக்கான தனது பேட்டியில்.

நூற்றாண்டுகளாக கொடுமைகளை அனுபவித்துவந்த பில்லீ கறுப்பின மக்களின் ஆத்மாவோடு பேசிய பாடகி.. காதலைப் பற்றி இவ்வாறு பாடினாள்...

“உறக்கமற்ற விழிகளோடு ஒவ்வொரு விடியலையும்
நீ எதிர்கொள்ளும் வரையிலும்...
காதலில் தோல்வியைச் சந்திக்கும் வரையிலும்...
அந்தத் தோல்வியின் மீது நீ வெறுப்புக் கொள்ளும் வரையிலும்...
உனக்குத் தெரியாது காதல் என்றால் என்னவென்று.”
என்று அரங்குகள் அதிர பாடித் திரிந்தாள்.

காதல் உயிரினும் மேலானது என்றவாறாக அதிமுக்கியத்துவம் கொடுத்துப் பேசுவது போலவே இதெல்லாம் கற்பிதம் என்ற உலர்த்தலுக்குப் பயப்பட்டு மௌனமாய் அடக்கி வாசிக்கும் அறிவுசீவிகளுக்கும் இடையில் பலவாறான வடிவில் பேசுபொருளாக அது இருந்து கொண்டுதானிருக்கிறது.

காதலை நட்பு அன்பு தோழமை என்பவற்றிற்கு கொடுத்த முக்கியத்துவத்தை விட பூதாகாரப்படுத்த -கட்டமைக்கப் பட்டிருக்கும் இந்த ஆண்-பெண் உறவு முறைக்குள் உளவியல் முறைமைக்குள்- உடல் மீதான வேட்கை முக்கியமானதுதான். அதனால் காதல் எதிர்ப்பால் தளத்துக்குள் உலாவுகிறது. கவிதையுள்ளும் இப்படியே.

நளாயினி காதல் என்றால் என்னவென்று இப்படிச் சொல்கிறார்...

“எனக்கே எனக்கான வாழ்வையும்
உனக்கே உனக்கான வாழ்வையும்
நியும் நானும்
மனம் கோர்த்து
வாழ்ந்து பார்ப்பதுதான்

அதற்காய்
என் வாழ்வை
என் விருப்புவெறுப்பை
எல்லாம் துறந்து
உனக்காய் மட்டும் என் விருப்பு வெறுப்போடு
உனக்காய் வாழ
எனக்கு இஸ்டமில்லை”

இதே கவிதை நட்பையும் காதலையும் எதிர்கொள்வதை -இவ் அறிமுகக் குறிப்பு தொடக்கத்தில் உள்வாங்கியுள்ள- “புதிதாய்ப் பிறந்துவிட்டுப் போகிறேன்” என்ற கவிதையில் பார்த்திருப்பீர்கள்.

நங்கூரம் நளாயினியின் முதல் கவிதைத் தொகுதி. தான் படைத்த காதல் கவிதைகளை தொகுப்பாக்கியிருக்கிறார். பெண் தனது மனநிலையில் நின்று பேசும் பொருளாக பொதுமையாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அது படைப்பை அளப்பதற்கான அளவுகோலுமி;ல்லை. பெரும்பாலும் ஆண் எழுத்தாளர்களிடம் வைக்கப்படாத இந்த அளவுகோல் பெண் எழுத்தாளர்களிடம் நீட்டப்படுவதுண்டு. இங்கு நளாயினி தனது நிலையில் நின்று பேசுகிறார். அவரது கவிதைகள் பேசுகின்றன. பொருந்திப் போவதான அனுபவங்கள் உணர்வுகள் கொண்டவர்களிடம் அவரது கவிதைகள் பேசுகின்றன.

உடற் தொடுகை மட்டுமின்றி எதிர்பார்ப்பு ஏமாற்றம் தோல்வி வெற்றி கோபம் பணிவு விரக்தி நம்பிக்கை...என முரண்களுக்கிடையே எட்டப்படும் உணர்வுநிலை உணர்ச்சிநிலை மனிதஜீவியை இரத்தமும் சதையும் கொண்ட இயங்குபொருளாக்குகிறது. காதலிலும் இது செயற்படுகிறது. இவற்றை தனது கவிதைகளில் பதிவுசெய்திருக்கிறார் நளாயினி.

உன் கடிதம்
நாளை வரும்
என்ற நம்பிக்கையில்
என் கண்களை
கடிதப் பெட்டிக்குள்
அடகுவைக்கிறேன்.
(பக்.14)

யாருக்கும் தெரியாமல்
உன் நினைவுகளைச் சுமந்தபடி
நானும்
என் நினைவுகளைச் சுமந்தபடி
நீயும்
காத்திருக்கும் காத்திருப்புகள்
எவ்வளவு அற்புதமானவை
(பக்.16)

இப்படியாய் காத்திருப்பின் சுகங்களைச் சொல்லும் கவிஞர் சுவாரசியமாக சிறுவயது நினைவுகளில் இவருடன் அறிமுகமாகிறார்.

ஓ இவன் என் முதல் கணவன்
அந்தப் புழுதி மண்ணில்
மூக்கு வடிய
கொன்றைப் பூப் பறித்து
இரு மாலை சூட்டி
தென்னோலை பிடுங்கி
தாலி செய்து
நானும் இவனும்
மாலை மாற்ற
அயல்வீட்டுச் சிறுவர் சிறுமியர்
பீப்பீப்பீ டும்டும்
என மங்கல வாழ்த்தொலிக்க
என் கழுத்தில் தாலி கட்டியவன்.
இவனுக்கு மண்ணில் சோறுகறி சமைத்து
சிரட்டையில்
உணவு கொடுத்தேன்
எனது ஐந்து வயதில்(பக்.48,49)

“இவர்கள் யார் தடுக்க” என்ற கவிதை காதலன் காதலி இடையில் முரண்நிலைகளை உரையாடலாக்கி நம்பிக்கைகளை வலியுறுத்துகிறது. அதுமட்டுமன்றி பொதுவில் ஆண்கள் கருத்தாளுமை செலுத்துபவர்களாகவும் பெண்கள் துவண்டுவிடுபவர்களாகவும் காட்டப்படும் ஆண்நோக்கு நிலையை தலைகீழாக்கியிருக்கிறார் இக் கவிதையில்.
கவிதை இவ்வாறு முடிவுறுகிறது.

காதலன் - “ஓ! நாம் இணைந்தால் பெற்றொர் சாவதாய்...”
காதலி- “எல்லாம் பொய்.
எந்தப் பெற்றொரும்
பிள்ளைகள் காதலுக்காய்
செத்ததாய்ச் சரித்திரமில்லை.
இந்த இயற்கை எல்லாம்
நம்மை வாழச் சொல்லும்போது
இவர்கள் யார் தடுக்கு?” என்று கவிதையை முடிக்கிறார்.

“நாளும் காதல் கொள்வோம்” என்ற கவிதையில் காதல் இன்பம் பற்றிப் பேசுகிறார்.

அன்பை வெளிப்படுத்தத்
தெரியாதவர் எம் இனம்
துன்பம் இன்பம் என்பர்
உயிரைக் கொடுப்பேன் என்பர்
இன்பத்தை நாக்கு சுவர்களுக்குள் -என
நினைத்து அமுக்கிவிட்டனர்
வார்த்தையிலும் ஒவவோர் தொடுகையிலும் -ஏன்
நடத்தையிலும்கூட
இன்பம் உண்டு என
அறியாததும் ஏனோ?
காதலது நாளும் காதலென்றால்
எம் இனம்
காமமாய்ப் பார்ப்பதும் ஏனோ?
காதல் என்றால்
வார்த்தையிலும்
ஒவ்வோர் தொடுகையிலும் -ஏன்
நடத்தையிலும்கூட
நாளும் இன்பமாய்
காதல் கொள்வோம். (பக்.41)

பெண்கள் தமது உணர்ச்சிகளை வேட்கைகளை வெளிப்படையாகப் பேசினாலே காமமுறும் ஆண்மன வக்கிரங்கள் பெண்களை நுகர்பொருளாகப் பார்ப்பதன் வெளிப்பாடு. இந்த வெளிப்பாட்டை பூசிமெழுக இன்று பெண்கள் பாவிக்கும் உடல்சார்ந்த மொழிகளின்மீது கலாச்சாரக் கூச்சல் இடுகின்றனர். ஆண்உலகு வகுத்த ஒழுக்கங்களை சமூக ஒழுக்கமாக கேள்வியின்றி வரித்துக்கொண்ட அல்லது மனசின் ஒரு மூலையில்தன்னும் உறங்கவைத்துக் கொண்டிருக்கிற பெண்களும்கூட இந்தச் கூச்சலை நிகழ்த்துகின்றனர். இதை எதிர்கொள்ளும் உக்கிரமான தளத்தில் நளாயினியின் கவிதைகள் பேசவில்லை. ஆனாலும் உணர்ச்சிகளை வெளிப்படையாகப் பேசமுனையும் அவரின் உந்தல் இங்கு “மனத்திரையில்” தெரிகிறது...

நாம் இடைக்கிடை
சந்திக்கும் அந்த மாலைப் பொழுதுகளில்
உன்னை
ஆரத் தழுவத் துடிக்கும் அந்தக் கைகளை
வலுக்கட்டாயமாக இழுத்துப் பிடிக்கிறேன்.
உன்னை
முத்தமிடத் துடிக்கும் என் உதடுகளை
பற்களால் அடிக்கடி கடித்து
தண்டனை கொடுக்கிறேன்.
உன் கைவிரல்களுடன் கைகோர்க்கத் துடிக்கும்
என் விரல்களை
கைரேகைகளுடன் பின்னிக் கொள்கிறேன்... (பக்.32)
என்கிறார்.

சமூக வெறியுள் அகப்பட்ட காதலிடை பேசுகிறார்...
“நமக்கு வயதானதுபோல்
சமூகவெறிக்கும் வயதாகாதா என்ன?
புதிதாயல்லவா பிறப்பெடுக்கிறது...”

காதலி நொந்துகொள்ளவில்லை. காதலனிடம் கேட்கிறாள்...
“சமூகம் திருந்தாது.
நாம்தான் மாற வேண்டும்
காலம் போகிறது
வயதும் போகிறது
வாயேன் ஓடிப்போய் மாலை மாற்றுவோம்.”

உடனடிப் பிரச்சினைகளுக்கான தீர்வுக்கு சமூக மாற்றம்வரை காத்திருக்கக் கோரும் கோமாளித்தனத்துக்கு இங்கு விடை சொல்லப் பட்டிருக்கிறது. ஆனால் கவிஞர் றோகண உடனான காதலில் இதற்கு முரண்நிலை எடுப்பது தமிழ்த் தேசியத்தின் ஊட்டலோ என எண்ண வைத்துவிடுகிறார். இது ஒரு அவலம்தான்.

இனவெறி
மொழிவெறி
மதவெறி
எமக்கல்ல -உன்
இனத்துடன் மோத.
உரிமைவெறி ஒன்றுதான்.
அரசு உன் இனமாதலால் -எம்
உரிமை கிடைக்கும் வரை
கைகோர்ப்புகள் கனவில் மட்டுமே.
விடியலுக்காய்க் காத்திருப்போம். (பக்.47)

இத் தொகுப்பில் பாடல் வடிவிலமைந்த இரு கவிதைகளும் “தேதி ஒன்று குறிங்கையா”, “அழகு” இரண்டும் உள்ளடங்கியிருக்கிறது. இது கவிஞரின் இன்னொரு பரிமாணத்தைத் தொடுகிறது எனலாம்.

தொகுப்பின் பொதுவான உள்ளடக்கங்களுக்கு முரணானதாய் சராசரியாய் எழுதப்பட்டிருக்கும் வரிகள் இத் தொகுப்பில் சில வெளிப் பட்டிருக்கின்றன என்பதையும் சொல்லித்தான் ஆகவேண்டும்.. கவிதையின் காலக்குறிப்பு இல்லாததால் இவ் வரிகள் ஆரம்ப காலங்களில் எழுதப்பட்ட கவிதைகளில் வெளிப்பட்டவையா என்றும் எண்ணத் தோன்றுகிறது.
உதாரணமாய்...

காதல் தோல்விகளும் வெற்றிகளே
வாழ்வின் படிக்கற்களே
சாகாவரமாய் இதயமதில் வாழ்வதும்
காதல் தோல்விகளே.
காதல் என்றும் தோற்பதில்லை. (பக்.15)

உன் பாதத்தின் வேகம்
எனை உன்னோடு அழைக்கும்
உன் கரங்கள் சொல்லும் கதைகள்
எனை உனக்கே அர்ப்பணம் செய்யும்.... (பக்.36)

நீ என்னை விழிகளால்
பருகியபோதே
உன் விழித் தொலைநகல்மூலம்
உன் இதயத்தில் பிறின்ரானேன்... (பக்.38)

இந்த “வைர” வரிகளை தொகுப்பிலிருந்து வீசிவிடச் சொல்கிறது இக் கவிதைத் தொகுப்பின்மீதான என் வாசிப்பு.

கவிஞர் சொல்கிறார்...
மனச்சாட்சி கயிற்றின் விளிம்பில் நடப்பதால்
விமர்சன கல் எறிவுகளைக்கூட
மலர்களின் தாவலாய்
மாலை ஏற்புகளாய்
செங்கம்பள வரவேற்பாய்

இது எனக்கான பயணம்
எனக்கான இருப்பைக்கூட
உறுதிசெய்யும் படிநிலை. ... (பக்.57)

தேவையற்ற ரணவலிகளுக்கு
மனம் அசையா
வைராக்கியத்தை தீபமாய் ஏற்றி.
எனக்கானவை இனி
எனக்கானவைதான்
பகிர்தல்கள் இனி என்
பரந்த பசுமை வெளியுள் மட்டுமே.
இது எனக்கான பயணம்
எனக்கான இருப்பைக்கூட
உறுதிசெய்யும் படிநிலை... (பக்.59)

தொடருங்கள் நளாயினி.

குறிப்பு:
அட்டைப்பட ஓவியத்தின் மிளிர்வுக்கு நூலின் உள் வடிவமைப்பு (லேஅவுட்) ஈடுகொடுக்கவில்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. ஜீவனின் படைப்பாற்றல் இங்கு கணனி ஓவியமாக அற்புதமாக வெளிப்பட்டுள்ளது.

மேலும் “பூஜிக்கத் தொடங்கிவிட்டேன்” (பக்.29) என்ற கவிதை “உதடுகளுக்குக் காதல் கடிதம்” (பக்.63) என்ற தலைப்புடன் மீண்டும் தொகுக்கப்பட்டிருக்கிறது. இதேபோல் “காத்திருப்புகள்” (பக்.16) என்ற கவிதை “இன்ப வலி” (பக்.30) என்ற தலைப்புடன் மீண்டும் தொகுக்கப்பட்டிருக்கிறது. இது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய தவறுகள்.

Thursday, May 10, 2007

புதியமாதவியின் பார்வையில் உயிர்த்தீ.




நன்றி ஊடறு
http://udaru.blogdrive.com/archive/296.html


உலகில் எல்லா தத்துவவாதிகளும் ரொம்பவே புறக்கணித்துவிட்ட தலைப்புகளில் ஒன்று "நட்பு".ஆண்-பெண் இருவரின் சமத்துவமும் தனித்தன்மையும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிகழ்வாகி விடும்போது மட்டுமே ஆணும் பெண்ணும் சமாதானமாகி நட்புடன் வாழ முடியும். ஆனால் பெண்ணுக்கு சம உரிமையும் அவளுடைய தனித்தன்மையும் காலம் காலமாக நசுக்கப்பட்டே வந்துள்ளது.

எல்லா மதங்களையும் ஆண்கள்தான் உருவாக்கினார்கள். எல்லா சட்டங்களையும் ஆண்கள்தான் படைத்தார்கள். எல்லா கல்விமுறைகளையும் ஆண்கள்தான் நிர்ணயித்தார்கள். இப்படி எல்லாமே ஆண்களால் உண்டாக்கப்பட்டுள்ள சமுதாயத்தில் இதுவரைக்கும் அவள் தன் தனித்துவம் மரிக்காமல் பிழைத்திருப்பதே மாபெரும் அற்புதம்தான். அவளது ஆளுமைக்கு எதிராக இந்த அளவுக்கு தாக்குதல் நடந்தும் அவளின் தனித்துவம் எஞ்சியிருப்பது இயற்கையின் தேவை. இயற்கையே பெண்ணே பாதுகாத்து வந்துள்ளது எனலாம். உயிர்த்தீ அணையாமலிருக்க இயற்கை அவள் தனித்துவத்தை அடைகாத்து வந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

தடுக்கப்பட்ட அனைத்து தளங்களிலும் பெண் தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும்போது அதன் தன்மை முற்றிலும் வித்தியாசமாக அதிக அழகுடன் அதிக உயிர்ப்பு தன்மையுடன் இருக்கும்.

ஆடை கிழிந்தால் ஒட்டுப்போடலாம்
வானம் கிழிந்தால்..
கணவன் இல்லாது வாழ்ந்து முடியலாம்
காதலன் இல்லாது..?
என்று பஞ்சாப் கவிஞர் அம்ருதாப்ரிதம் விடுதலைக் காதலைப்பாடுவார்.

'ராக்கி கட்டி
நம் நட்பை
சகோதரப் பாசமாக
பரிணாமம் செய்து
தொடர நினைத்தேன்

நம் நட்பு
ராக்கி கயிற்றையும்
மஞ்சள் கயிற்றையும்விட
மேலானது -என்று
புன்னகையுடன் சொன்னாய்'

என்று நட்பின் உன்னத நிலையை 'நெல்லிக்கனி' கவிதையில் சொல்லுவார் கவிஞர் புதியமாதவி.

'தனியாக இருக்க எவரும் விரும்புவதில்லை. அவருக்கு நண்பர்கள் தேவைப்படுகிறார்கள்! நண்பர்கள் தேவைப்படும்வரை அவர் சரியான நண்பராக இருக்க முடியாது. ஏனென்றால் தேவை என்பது மற்றவரை ஒரு பொருளாக தாழ்த்தி விடுகிறது. தனித்திருக்க எவரால் முடியுமோ அவர் மட்டுமே நண்பராயிருக்கவும் முடியும். நட்பு- அது அவர் தேவை அல்ல. அவரது மகிழ்ச்சி. ' என்பார் ஓஷோ. நட்பின் இக்கருத்தைப் பிரதிபலிக்கும் கவிஞர் வைகைச்செல்வியின் இக்கவிதை. (இது முதல் அத்தியாயம் அல்ல -அம்மி க.தொ)

'நண்பனே!
எந்நேரத்திலும்
எதற்காகவும்
நீ என்னைப் பிரிந்து செல்லலாம்
அது உன்னுடைய சுதந்திரம்
சொல்லாமல் பிரிந்திட்டாய்
அதற்காக வருந்தாதே.
தண்ணிலவும் செங்கதிரும்
யார் அழைத்து வந்தன?
யார் சொல்லிப் போயின?
நீயும் பிரிந்து செல்லலாம்.
அது உனது சுதந்திரம்'

இப்படியாக தோழமை உணர்வுகள் குறித்து பல்வேறு பெண்கவிஞர்கள் தங்கள் கவிதைகளைப் படைத்துள்ளார்கள்.' அந்த வரிசையில் கவிஞர் நளாயினி தாமரைச்செல்வன் அவர்கள் தன் தோழமையை 'உயிர்த்தீ" யாக உருவகப்படுத்தி நட்புக்கு ஒரு மணிமண்டபம் படைத்துள்ளார் என்றுதான் சொல்லவேண்டும்.

எத்தனையோ செடி
வளர்க்கிறேன் வீட்டில்
தினமும் நீர் ஊற்றி
பசளை இட்டு
சூரிய ஒளி படவைத்து
அதெப்படி
சூரிய வெளியில்
பச்சையமே தயாரியாது
என்னுள் இத்தனை
பசுமையாக வளர முடிகிறது
உன்னால்

என்று மற்ற உறவுகளிலிருந்து நட்பின் பசுமை முற்றிலும் வேற்பட்டது என்பதை அறிவியல் பார்வையுடன் ஒப்பிட்டுச்
சொல்லுவார்.

'வால் பிய்ந்த பல்லியாய்
உன் ஞாபகங்களை
வெட்டிக்கொண்டாலும்
மீண்டும் மீண்டும்
பல மடங்கு
வீரியத்துடனும்
வேகத்துடனும்
வளரத்தான் செய்கிறது


என்று நடப்பியல் காட்சிகளையும் நட்புக்கு உருவகப்படுத்திக் காட்டி இருப்பார்.

'பேசாப் பொருளாகிய
ஆண்-பெண் நட்பு
நம்மால் பேசு
பொருளாகி உள்ளது'

என்று சொல்லியிருந்தாலும் கவிதைகள் முழுக்கவும் காதலும் நட்பும் பின்னிப்பிணைந்து ஒரு சில இடங்களில் மயங்கி ஒரே சாயலாய் முகம் காட்டி இருக்கிறது. காதல் நினைவுகளுக்கும் ஏக்கங்களுக்கும் இலக்கியங்கள் ஏற்கனவே சொல்லிவைத்துள்ள அனைத்தையும் நட்புக்குள்ளும் கவிஞர் அடைத்து வைக்க முயற்சி செய்கிறார். சில இடங்களில் கைகொடுக்கும் காட்சிகள் பல இடங்களில் மயக்கம் தரத்தான் செய்கின்றன.

"வெறும்
காதலையும் கமத்தையும்
உடலெங்கும் பூசிக்கொண்டு"
வாழும் மனிதர்களுக்கு தங்கள் நட்பின் உன்னதப் பக்குவ நிலை எங்கே புரியும்? என்று அங்கலாய்க்கும் கவிஞர்
பிறிதொரு இடத்தில்

நீ சொல்லித்தான்
நான் தெரிய வேண்டுமென்பதில்லை
உன் நிலை.

முட்டாளே
நீயும் என்னை
காதலிக்கக் கற்றுவிட்டாய்.

முக்கித்திணறி
மூர்ச்சையாவது
எனக்குப் புரிகிறது.

இப்போதாவது தெரிகிறதா
காதலின் வலி என்னவென்று..!

என்று சொல்லியிருப்பது வாசிப்பவனுக்கு மயக்கத்தை ஏற்படுத்தத்தான் செய்யும். கவிஞரே சொல்லியிருப்பது போல

நட்பா!? காதலா!?
பிரித்துப் பார்க்க முடியவில்லை
எப்படி வேண்டுமானாலும்
இருந்துவிட்டுப் போகட்டும்

பெண்ணுக்குள் இருக்கும் அக்கினிக்குஞ்சை யாராலும் அணைக்க முடியாது. காதலாய், நட்பாய் அவள் உயிர்த்தீ கசிந்துருகி உயிரின் அந்தம் வரைப் பரவி இந்த மண்ணுக்கு உயிர்ப்பிச்சைத் தருகிறது.

உயிர்த்தீ - கவிதைகள்
வெளியீடு - இமேஜ் ரூ இம்ப்ரெஷன், (உயிர்மை)
சென்னை 18
பக் - 144 , விலை- ரூ.70

Monday, May 07, 2007

என்ன சொல்ல.. என்ன சொல்ல.!



* மழலைத் தமிழ் பேசுகிற போது
தமிழ்ச் சோலை மலர்த்தோட்டத்துள்
கொய்து குவித்து வைத்துள்ள
பூக்கள் மேல் புரண்டெழும் உணர்வு.

* நீ செய்யும் குறும்பில்-என்
குழப்பம் தொலைந்து போகும்.

* உன் சிரிப்பலையில்-என்
சிந்தனை அமிழ்ந்து போகும்.

* உன் பார்வை ஒன்று போதும்
பனித்துகள்களாய் நான் மாற.

* உன் முத்தப்பதிப்பில்-என்
கருப்பை உன் சுகம் அறியும்.

* உன் மென்மையான அம்மா எனும்
உதட்டசைவில் என் மேனியில்
கோடி முத்தங்கள் பதிந்தெழும் உணர்வு.


நளாயினி தாமரைச்செல்வன்.

Thursday, April 19, 2007

நட்பு கேட்டதும் கிடைத்துவிடும் வரமா என்ன.!?


பிரிந்தா செல்கிறாய்.?!!!
போ.!!போ.!!போ.!!
மீண்டும் வருவாய் தெரியும் எனக்கு.



நட்பு கேட்டதும்
கிடைத்து விடும்
வரமா என்ன.?


என்னோடு பேச
நீ எப்போதும் வேண்டும்.




எனக்கருகில் நீ இருந்தால்
துன்பமே நெருங்காது......!

Tuesday, April 17, 2007

பிரான்ஸ் எவியோன் வாவிக்கரையில் அழகியதொரு பொழுது.....!




Sunday, April 15, 2007

வசந்தம் வந்தாச்சு.


Thursday, April 05, 2007

போரின் வலி

பனிமுகட்டை அளைந்து வந்து
எனை அணைத்து முத்தமிட்டு
நலம் விசாரிக்கும் குதூகலம்
இங்குள்ள கை கால் முளைத்த
பனிக்கால குளிர்காற்றுக்கு.

ஆனாலும் பனி மழை
ஓய்ந்த பின்னான
வான வீதியில்
தரையிறங்க முடியாத
கனத்த முகிலின் அவஸ்த்தை
எனக்குள்.

எனது இலங்கைத்தீவின்
உயிர்களுக்கு
இழைக்கும் துன்பத்தை
பனிப்பொழிவுக் காலத்தில்
என் கன்னம் அறைந்து சொல்கிறது
ஊசி கொண்டலையும் குளிர்காற்று.

பனியளைந்து எனது பிள்ளைகள்
விளையாடும்போது
சுழன்றடித்து
கண்ணாடித்துகள் கொண்டலையும்
பனிக்காற்று
கன்னம் செவிப்பறை அதிர
ஊழையிட்டு
எனை முடங்கச்செய்து
குருதிவெள்ளத்துள்
தோய்ந்து கிடக்கும்
பிணக்குவியல்கள் முன்னிருத்தி
ஓ.. வென கதறி அழவைத்து
நான் நடுங்குவதைப் பார்த்து
கைகொட்டிச்சிரிக்கிறது.

உணர்வும் உடலும்
மரத்துப்போன பொழுதுகளில்
என்னை நுள்ளி
என்னை நானே உரசி சூடேற்றுகையில்
இந்த பனிக்கால நினைவுகள்
என்ன செய்துவிடமுடியும் என
என்னுள் தீப்பொறி பட்டுத்தெறிக்கிறது.

மரத்துக்கிடந்த இயற்கை எல்லாம்
பூத்துக் குலுங்குகையில்
நான் வாழ்ந்த காலத்தில்
சிரித்து மகிழ்ந்த பெண்களின்
அவலக்குரல்களையும்
அழகாய்த்தெரிந்த ஆண்களின்
காணாமல் போன செய்திகளையும்
ஞாபகப்படுத்திக் கொன்று வதைக்கிறது.

நான் வாழ்ந்த சொற்க வெளிவாழ்வு
பயங்கரம் நிறைந்ததாய் இப்போதெல்லாம்.
எனது வேர்கள் சிதிலப்பட்டு சிதைக்கப்பட்டு.
கூட்டி அள்ளி ஒட்டினாலும்
வலியாலும் ரணங்களாலும்
சீழ்பிடித்த ஆறா மனக்காயங்களாலும்
நெளிந்துழலும் ஒரு பூமிப்பந்தாய் நான்.


சுவிற்சலாந்து.
20-03.2007

Wednesday, March 28, 2007

கவிதையோடு கரைதல்! ( 4) கவிஞர் என்.ஆத்மாவின் மிக அதிகாலை நீல இருள்.

மிக அதிகாலை
நீல இருள்

கவிதைகள்

(C) ஆசிரியர்
முதற் பதிப்பு : டிசம்பர் 1996
வெளியீடு : விடியல் பதிப்பகம்
3, மாரியம்மன் கோவில் வீதி
உப்பிலிப்பாளையம்
கோவை - 641 015
வடிவமைப்பு : ரவி & ரஞ்சனி (சுவிஸ்)
விலை : ரூபா 25.-
அச்சு : மாணவர் மறுதோன்றி அச்சகம்
சென்னை - 600 017

.குஞ்சு பொரி மரமே இந்த கவிதை ஒரு மாமரம் பற்றியதாக விரிகிறது. ஆனாலும் முடிவில் கறுப்பு கரைகிற மண்ணில் வெய்யிலின் விரல்கள் புகா இருட்டுக்கும் கொடுக வைக்கிற கூதலுக்கும் ஒரு மாமரம் தேவையில்லை என முடித்திருக்கிறார். இது பல விடைதேடிமுடியாது கேள்விகளை மனதில் தோற்றுவித்தபடிக்கு அடுத்த பக்கத்திற்கு செல்கிறேன்.
அடுத்த கவிதையாக பட்டமேற்றும் காற்று விரிகிறது. தனிமையில் இருந்து இயற்கையை இரசித்திடும் பாக்கியம் இவருக்கு நன்கு வாய்த்திருக்கிறது. அனாலும் தனது இருப்பு நிலை தொலைந்து போகும் தருணங்களை இவர் அனுபவித்திருப்பது தெரிகிறது.

வருசம் தோறும்
ஞாபகத்தில் உட்காந்திராத மாதமொன்றில்
குப்பைகளை கூட்டிவருகிறதிப்
பட்டமேற்றுங்காற்று.
என் ஆணுடம்பு வெட்கமறியாதிருந்த
நாட்களின் மணத்தை அப்பி.


நாம் எமது இருப்பும் மகிழ்வும் தொலைக்கும் தருணங்களில் தான் எமது இளமைப்பருவத்து நிகழ்வுகளை ஞாபகப்படுத்துவது வழமை. அத்தகையதொரு இறுக்க மனநிலையில் இந்த கவிதையை எழுதி உள்ளார்.

வயசு சிறிதென்றால் நானும்
பட்டத்தால் வானத்தை சோடனை செய்திடலாம்.
வீட்டில் சினுங்கி
அல்லது கால்களை பூமியில் உதைத்து.
பட்டமென்றால் உச்சி குளிர்ந்ததெல்லாம்
மூக்கினால் ஓடிட்ட சளியை
துடைத்திடத் தெரியாதிருந்த காலத்தில் தான்.


தனது குழந்தைப்பருவத்து நினைவுகளில் மூழ்கிய கவிஞன் மீண்டும் தனது தற்போதைய இருப்பை உணர்பவராகவும் இருக்கிறார். குழந்தைப்பருவம் எதுவுமே அறியாப்பருவம். நாம் வளர வளர எமது தேடலும் வளர்கிறது உடலில் மாற்றங்களும் நிகழ்கிறது. அதை அழகாக சொல்கிறார்

உணர்வுகளை தின்று புத்தி
ஊதிப் பருத்ததுவோ!


அடுத்த கவிதையாக சூரியன் உச்சிக்கு ஒரு சாண் மேல். கவிதையின் தலைப்பே வித்தியாசமாக இருக்கிறதே என நெற்றியை சுருக்கி சிந்தனை வசப்பட்டவளாய் நான்.
ஓ..! காதல் வசப்பட்டிருப்பது தெரிகிறது. கால் தரையில் மேவாத நிலை. அந்தரத்தில் பறக்கும் உடல் மனசு. ஆனாலும் சோர்வு உடலைத்தாக்க தனது உயிரின் கடிதத்திற்காய்.

என் தகனக்கிரியை அடுத்த கவிதை.
பயங்கரம் நிறைந்த தனிமை ,இயலாமை யாருமே அருகிருந்து துன்பத்தை பகிர்ந்திட முடியாத ஒரு பொழுது, இயற்கையையின் அழகை புசித்த இந்த கவிஞனிடம் அன்றய இயற்கை கூட கைவிரித்து செல்லும் நிலமை.

இயற்கையையும் தனது மனவலியையும் சொன்ன கவிஞனது கோவம் அந்த மனவலியும் தனிமை இருளும் விலகும் பொழுதில் மீண்டும் மீண்டும் அதே செயல் நிகழ்வதாக கூறுகிறார். அதனை வாசிக்கிறபோது என்னுள் திகில் பரவுகிறது.

மீளவும் பிளேடுகளினாலும் குண்டுhசிகளினாலும்
செரிக்கட்டிய வார்த்தைகளோடு
வந்திடுகிறார் யாரேனும் இடைவிடெதெனை
அரித்திடவும் குத்திடவும்.


இங்கு அவரது வலியை, மனஉளச்சலை. ஏற்படுத்துகிற நிகழ்வுகள் பல. அதற்கான எடுத்துக்காட்டுகள் வித்தியாசமானவையாக உள்ளது. அத்தகைய தனது வலியை சொல்லும் முறையில் வெற்றி காண்கின்றார் இந்த கவிஞன்.

கொத்திச்
சிராய்களாகப் பிளக்கப்படுகிறதென் மனம்.
நாக்குக்குலையின் பிரதியீடாய்
கோடாரிகள் அமைந்திட்ட வாய்க்குழிகள்
இவருடையன.........
அறுத்துப்போட்ட கோழியாய்க்
கிடந்து புரண்டு உழத்திடும் எனதுயிர்.


அவளைப்பற்றிய கோடைமழைக் கவிதை என அடுத்த கவிதை விரிகிறது. காய்ந்த இதயபூமியில் தூறல் தூவானமென கவிஞனுடைய மனசெங்கும் மலர்த்தூவல். முதல் கவிதையில் முற்றத்து மாமரத்தை சபித்தவருக்கு இப்போ மனவெளியில் காதல் உலாவந்ததும்அதே மாமரம் பூத்து பிஞ்சுகளுடன் தெரிவது வினோதம் தான்.! காதல் உணர்வு இயற்கையை எப்படி எல்லாம் வர்ணிக்க வைக்கிறது. காதல் உணர்வை எப்பிடியெல்லாம் இயற்கையோடு ஒப்பீடுசெய்கிறார்.

ஆணலைகள் என அடுத்த கவிதை விரிகிறது. கடலையும் அலையையும் தன்மன உணர்வுகளோடு ஒப்பிடுகிறார். தோற்றுப் போகும் சமயங்களில் அல்லது இயலாமை; நம்மை துரத்து ம் போதும் காதல் நம்மை வதைக்கும் போதும் தனிமையை நாடுவது இயல்பே.இந்த கவிஞனுக்கு அந்த தருணங்கள் வாய்த்திருக்கிறது இந்த கவிதையில். அவரின் மனநிலைச்சோர்வினால் இயற்கை கூட அவரக்கு சோபை இழந்து காணப்படுவதாக உள்ளது. அதற்கு காரணம்

சேர்ச்சின் முன்னிருந்த செக் பொயின்ரினில்
என்சேட்கொலர் பிடித்து முறைத்து
உறுக்கிய மூவரதும் கோர முகங்கள்
தோன்றித் தோன்றிக் கிளறின எனை.
நெஞ்சுலர
வெளியேறும் மூச்செல்லாம் சுடுகாற்றாய்.
என்னிரு கண்வழியும்
தீ வரல் கூடும் இனி.


ஆனாலும் எதுவுமே செய்யமுடியாத நிலையில் தோற்றுப்போவது தெரிகிறது.

எனினும் நான் புழுதி அப்பிப் புரண்டளைந்த தாய் மண்ணில்
அந்நிய
காக்கிச் சட்டைச் சிங்கள நாய்களிடம்
தோற்றுத்தான் போனேன் காண் இன்று.


அடுத்த கவிதை மீளமிளக்கொல்லல். காதல் உணர்வு எத்தகைய உன்னதம் வாய்ந்தது...! காதல் இயற்கையை ரசிக்க வைக்கிறது. இதுவரை நாம் ரசிக்கதவறியவை எல்லாம் எமது ரசனைக்கு உட்படுகிறது.யாவுமே பிரமிப்பாகிப்போகிறது. அத்தகைய உணர்வை தரும் வல்லமை காதலுக்குத்தான் உண்டு.அத்தகைய உணர்வுகளை தரும் காதல் ஏமாற்றத்தில் முடியுமாயின் அத்தகைய அழகாய்ப்போன தருணங்கள் காணாமல் சிதைந்து பாழாய்ப்போகிறது. அந்த உணர்வை மிக அழகாக தனது கவிதைக்குள் கொண்டுவந்திருக்கிறார் இந்த கவிஞன்.

அடுத்த கவிதை பொன்னாத்தா பூவாத்தா.இக்கவிதை முஸ்லிம் மக்களிற்கு நடந்த அநீதியையும் அந்த அநீதி தந்த சென்ற திகிலை கூறும் கவிதையாகவும் தூரநோக்கோடு எழுதப்பட்ட கவிதையாகவும் மிளிர்கிறது. இந்த கவிதையில் மனிதநேயம் மிகுந்து காணப்படுகிறது. மனத்திடை ஈரக்கசிவை ஏற்படுத்திசெல்கிறது.

குழந்தை அதன்பாட்டில் துயில்கிறது.
விடாமல்வேட்டுக்கள் தீர்க்கப்பட
குண்டுகளால் நிலமும் கண்ணாடிகளும் அதிர
அடைமழைக்குப் பின்னான
புழுக்கமும் வியர்வையும்மிகுந்த இம்
மே மாத உஸ்ண இரவில்
பனிக்காலம் கூதலுக்கு கொடுக்குவது போல்
நடுங்குகிறது எனக்கு.
பள்ளிவாசலுள் சுட்டது
அம்பலாந்துறையில் கடத்தியது
கக்கத்தில் இடுக்கிய குழந்தைகள் அலற
முக்காடு போட்ட பெண்களும் ஆண்களும்
வடக்கை விட்டுப் பெயர்ந்து வந்தது
அழிஞ்சிப்பொத்தானை
ஏறாவூர்
மூன்றாம் ஈழப்போர் தொடங்கிய பின்
எல்லைப்புறச் சென்றிகள் தாக்கப்படுமிரவுகள்
இப்படித்தான் கழிகின்றன...........
மடியில் கிடக்கிற குழந்தை பற்றிய
கவலைகள் வளர்கின்றன என்னுள்.
இம் மண்ணில் அதனிருப்பு
கைகளை அகல விரித்து
பறந்த என் போன்ற சிறுபராயம்
ஒரு தமிழிச்சியைக் காதலிக்கிற
ராப்பட்ட பின் வீடு வருகிற வாலிபம்...........


மிக அதிகாலை நீல இருள் என்ற தலைப்பிலான கவிதை காதலி நினைவுகளையும் அதன் நினைவுகளால் எழும் உணர்வுகளையும் சுமந்து வந்திருக்கிறது.
கவிதைகள் காணாமல் போன இரவு. காதலை காதல் தந்த நினைவுகளை சுமந்து இக்கவிதை வந்துள்ளது. ரம்மியமான இராப்பொழுது கவிஞனுக்கு வாய்த்திருக்கிறது. அந்த தருணும் ஒரு குண்டு வெடிப்பால் சிதைந்து போவதும் தனதினத்தின் மீதான இருப்பு பற்றி சிந்திப்பதாயும் இக்கவிதை செல்கிறது.எத்தனை வலிகளை சுமந்திருக்கிறார்கள் என்பது ஓரளவு வெளிச்சமாகிறது.

என் சிற்றினத்தின் மீதான
இருபக்க பேரினவாத அமுக்கம் பற்றியும்
முன்னொருபோதும் நாமறியாதுள
எமதுரிமைகள் பற்றியும்
அமைச்சனாகிப்போன ஒரு சூதாடியின் கையில்
அகப்பட்டள்ள எங்கள்
அரசியல் இயக்கத்தின் அவலம் பறறியும்
நானுட்பட இச் சமூகத்தின்
அலட்சிய இருப்பு பற்றியும்
கவலை பேசினோம்.


இனிக் கடவுள் எரிவார் என்ற தலைப்பிலான கவிதை . தனது கோபத்தை முழுக்க முழுக்க அல்லா மீது திருப்புகிறார். வழிவழியாக வந்த கதைகள் கட்டுப்பாடுகள் கோட்பாடுகள் பற்றியெல்லாம் கேள்விகேக்கிறார்.தனக்கிழைத்த தனது இனத்துக்கிழைத்த கொடுமைகளை பட்டியலிடாமல் இத்தகைய கோபகனல் நல்ல மனிதநேயத்தை கொண்ட கவிஞனாக காணப்படுவது வெட்ட வெளிச்சமாகிறது.

அடுத்த கவிதை நாய் வால் என்ற தலைப்பில் அமைந்த கவிதை.
காதல் உணர்வுகள் பூத்துக்குலுங்கி நம்மை எல்லாம் வதைத்தே கொல்லும். ஆனாலும் கொல்ல கொல்ல மீண்டும் மீண்டும் புதிதாய் பெருத்து பிறப்பது உறுதி. சமூக கட்டப்பாடுகளுக்குள் மதக்கட்டப்பாட்டுக்குள் நம்மை திணித்து அதனுள் இருந்து வெளியேறவிடாமல் உணர்வும் மனசும் குhச்சலிடும். மதக்கட்டப்பாட்டு விழிமியங்களும் சமூகவொழும்கம் பற்றியதான கோட்பாடுகளுள்ளும் காதல் உணர்வுகள் போராடவேண்டி உள்ளது. அதை மிக அழகாக விபரித்திருக்கிறார்.

அந்த உணர்வை கவிதையில் தருவது என்பது மிகுந்த கடினமே. ஆனாலும் அந்த உணர்வை அழகாக மொழியினுள் கொண்டுவந்தமர்த்தி இருக்கிறார். பெண்கள் தான் சமூக கோடு விதித்த ஒழுக்காற்றுள் நின்று திணர்கிறோம் என்றால் இந்த கவிஞன் இன்னும் ஒரு படி மேலே போய் தங்களுக்கும் அத்தகையதொரு திணறல் இருக்கிறதென வெளிப்படுத்தியிருக்கிறார்.

பல கவிதைகளை படித்திருக்கிறேன். எந்த ஒரு ஆண் கவிஞனும் இப்படியாக தன் உணர்வை சொன்னது கிடையாது என்றே நம்புகிறேன். இதனை வாசிப்பவர்கள் அப்படியான கவிதை இருக்கும் பட்சத்தில் எனக்கு அனுப்பிவையுங்கள். ஆண்களின் உணர்வுகளை புரிதல் என்பது அவை கவிதைகளுக்குhடாக மட்டுமே. என்பது எனது வாதம். தனது உணர்வுகளை அழகாக தைரியமாக சொல்லி இருப்பது தான் இந்த கவிதையின் விசேடம்.
நாய் வால்

999வது தடவையாகவும் இன்று காலை
வெளியேறும் முனைப்பில் நகர்ந்து
பரிதி எல்லைக் கோட்டைத் தாண்ட இயலாமல்
வழக்கம் போல் தன் இடத்தில் மீளவும்
வந்தமர்ந்துளது மையம்.

என்னவென்று நோவதிம் மனதை.
துணிந்து எனக்கென எதையேனுமியற்ற
விடுகுதில்லை ஒருபோதும்.
சரி, இனிச் செய்வதே என நிமிரினும்
அனைத்தினது புற அக நிலைமைகளையும்
கொணர்ந்து காண்பிக்கிறது கண்முன்.
எண்ணற்ற பொறுப்புகள் எனக்கென உளதாய்
போதிக்கிறது நின்று.
அழிந்து நான் சிதையினும்
உருகியே எரியினும்
யார் மனதையும் நோகவிடல் தகாதென்கிறது.
மந்தைகள் யாவற்றினதும் மேய்ப்பன்
நீயன்றி வேறு யாரென
வினாவுகிறது பிசக்க.
கல்லடி சாத்திரக்காரி போல் இதுவும்
4ம் இலக்கத்தான் பிறர்க்காய்த் தேயும்
செருப்பே தான் என்கிறது பாரேன்.

கண்டி மாநகரின் விரால் மீன்கள் கொதிக்கும்
குடை விரித்த மரங்களடர்ந்த
தெப்பக் குளக் கரையோர பிளாட்போர்மில்
குளிரில் உதறும் கைகள் கோர்த்து
ஒட்டி ஒட்டி திரும்பவும் அவளோடு
திரிய,
குறிஞ்சிக் குமரன் கோயிலுக்குப் போகும்
மலை நெடுக வளைந்து நீளும் சாலையில்
சிவப்பு சல்வார் உடுத்திய அவளை
சோனக முக்காடு போட்டு அணைக்க
வானமளவு இலைபருத்த மரத்தின் கீழவள்
நோகிய வயிறைத் தடவியபடியே
யுகக் கணக்கில் போர்த்திக் கிடக்கவெலாம்
எத்தனை தவிப்புகள் விளையுது நாளும்

எவ்வாறேனும் இவ் வட்டத்தின் எல்லையை
கடந்து செல்லுதல் வேண்டும் நான்.
ஆயிரம் தடவைகளும் தோற்றேன் தான்.
ஐயா என்
சிறு மூளை புரியாதுள அவ் அதி வழியை
தயை கூர்ந்து யாராகினும் கூறிடுக.
மிக அதீத நம்பிக்கைகளுடன்
வெளியேறப் புறப்பட்டுத் தோற்றுத்
திரும்பும் ஒவ்வோர் முறையும்
எல்லைப் பரிதி அகன்ற
பரப்பின் விசாலிப்பை உணர்கிறேன் நான்.
மேல் மூச்சும் கீழ் மூச்சும் வாங்க
சமூகமும் கடவுளும் எனக்கெதிராய்
கை கோர்த்துச் செயல்படுவதாயும்
விரக்தியுற்றுத் துவள்கிறேன் தான்.
எல்லைகளைத் தாண்ட விடாமல் எனை
அமுக்கும் விசைகளே விலகுக விலகுக.

எவை எவ்விதமிருப்பினும்
நாளையும்
நாளையென்ன இதற்கடுத்த கணமேயே
எதுவுமே நிகழ்ந்து விடாதது போல்
முதன்முதலாய் இப்போதான் என்பது போல்
அனைத்துத் தோல்விகளின் சலிப்பும் களைந்து
புத்தம் புதிய நம்பிக்கைகளுடனும்
அவாக்களுடனும் புறப்படும் தான்
சுரணை கெட்ட இம் மையம்.


அடுத்த கவிதை என் பிரிய காதலே பிசாசே. என்றதாக அமைகிறது.
காதல் உணர்வின் மோட்சங்கள் இருவரும் மணித்தியாலக்கணக்காக பேசிக்கொண்டே இருப்பது. தனித்திருப்பது விரல்களை கோர்த்தபடி அமைதியாக பயணிப்பது இப்படியான சின்ன சின்ன வாழ்தலுக்கான ஆசைகள் தான். இப்படியாக இருந்தாலும் காதல் உணர்வின் உயர்ந்த மோட்சம் உடல்களை பகிர்வதிலேயே முக்தி இன்பம் காண்கிறது. இவை காதல் தோல்வியில் முடிகிறபோது எப்படியான உருத்தொலைத்த மனநிலைக்கு ஆளாவோம் என்பதை மிக அற்புதமாக தனது உணர்வுகளை மொழிக்கு மொழிபெயற்திருக்கிறார். உடலையும் தன்னையும் தன் உணர்வுகளையும் வதைத்துக்கொள்கிறார் கவிஞன். நம்மையும் அந்த வதைக்குள் தடுமாறுமாறும் செய்தே இருக்கிறார். வாசிப்பவர்களுக்குள்ளும் தனது வதைபடல உணர்வை தந்து சென்றிருக்கிறார்.

உயிர்பிய்யுமோர் பாடல் என்ற தலைப்பிலான கவிதை பலசோகங்களை தன்னகத்தே சுமந்து அழுதபடி நம் நெஞ்சை பதைபதைக்க வைத்தபடி தன் இனத்தவர்க்கு எம்மினம் செய்த கறைபடிந்த நாட்களையும் காதலியின் பிரிவையும் சுமந்து வந்திருக்கிறது. இந்த போராட்டம் நம்மை எல்லாம் பெரிதும் பாதிக்காதபோதும் நாமெல்லாம் புலம்பெயர்ந்த வாழ்கிறோம். இவர்களை சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கி 24 மணிநேரத்தில் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற்றிய கொடுமை ..வாயிருந்தும் மௌனித்து தலைகுனிந்து கைகளை பிசைந்தபடி விழியில் நீர்மல்க நின்றுபார்த்த சோகம் என்னை இப்போதும் வாட்டுகிறது.
எனது மண்ணில் வாழ்ந்த காலங்களில் நடந்த கண்ட மின்கம்ப தண்டனைகள் இன்றும் என்னை கனவில் பயமுறுத்திக் கொல்லும்.ஒரு உயிரை எடுப்பது காவுகொள்வது என்பது அத்தனை மலிவாய்ப்போன தேசம் என்னுடையது. அத்தகையதொரு தேசத்து என் சக கவிஞனது இக் கவித்தொகுதியில் ஓர் கவிதை கண்டு மீண்டும் நடுங்கலுற்றேன்.
ஒரு உயிரைகாவு கொள்வது என்பது சமாதானத்தக்காய் காலத்தேவை என்றோ களைபுடுங்கும் செயல் என்றோ எதிரி என்றோ துரோகி என்றோ மற்றவர்களைப்போல் என்னால் என்னை நானே சமாதானப்படுத்த ஒருபோதும் முயன்றதில்லை. முயலப்போவதுமில்லை. அடுத்த கவிதை அத்தகையதொரு வாழ்வியல் சூழல் எப்படி உருவானது உருவாக்கப்பட்டது என்பதை கவிதைக் குhடாக சொல்ல முனைந்திருக்கிறார். தனது அனுபவத்திற்கும் தேடலுக்குமூடாக. அனுபவமும் தேடலும் தானே எழுதவைக்கிறது.
கவிதையின் தலைப்பு செங்கோல் = சிவப்பு + கோல்

இந்தக்கவிதையை நாமெல்லாம் ஐpரணித்துத்தான் ஆகவேண்டும்.
_________________________________________________________________________________

அரசன் எழுந்தான்
அப்பாவிகளின் தொடை, கணைக்காலென்புகளால்
செய்யப்பட்டு
குழந்தைகளின் கன்னத் தசைகளால் போர்த்தப்பட்ட
ஆசனத்திலிருந்து.
வலது கையில்
எழுவன் குளத்துச் சிங்கள மக்களின்
புத்தம் புதிய குருதி நிரம்பிய கிண்ணம்
ஒரு மிடறு குருதியருந்தியபடி
திறந்து கிடந்த அடுத்த அறையை எட்டிப் பார்த்தான்.
அறைச் சுவரில்
ஆணியடித்துக் கொழுவப்பட்ட 103 தொப்பிகள்
காத்தான்குடிப் பள்ளிவாசலில்
சுட்டுக் குதறப்பட்டவர்களின் தலைகளிலிருந்து
கழற்றி எடுத்து வரப்பட்ட மாவீரச் சின்னங்களவை.
பக்கத்தில்
இரு கூறிடப்பட்டு வீசியெறியப்பட்ட சிறு பிள்ளையொன்றின்
குருதி பீய்ச்சியடிக்கப் பட்டுக் காய்ந்த சீமெந்துப் பேப்பர்.
பெருமிதத்தில் தனக்குள் சிரித்துக் கொண்ட அரசன்
திடுமென அதிர்ந்தான்.
மிக அருகில் எங்கோ பாங்கொலிக்கக் கேட்டான்.
அம்பிளாந்துறைச் சந்தியில் மரண ஓலமெழுப்பிய
அதே 157 ஹாஜிமாரினதும் குரல் அசப்பில்.
மடுவுக்குள் பாதி புதைந்தும்
பட்டை வாய் வெடித்த காட்டு மரங்களில் தொங்கியும்
இரத்தம் தோய்ந்த வெண்ணிற 'ஜுப்பா'க்கள்
அரண்மனைக்கு வெளியே
காற்றிலசைவதும் கண்டான்.
காதை இறுகப் பொத்தியபடி
கதவை இழுத்து அடைத்துச் சாத்தி
அறைக்குள் மீளவும் வந்தமர்ந்தான்
அருகில்
தப்பித் தவறியும் எதனையும்
சிந்தித்து விடக் கூடாதென்பதற்காய்
கழற்றிய மூளை ஒரு கையிலும்
சயனைட் குப்பி ஒரு கையிலுமாய்
யாரிலோ அல்லது எதிலோ
விழுந்து வெடித்துச் சிதறிட
தன் அரசனின் ஆணையைக் கோரி நிற்கும்
இயந்திரத் தனப்பட்டு இளைஞனாய்ப் போன
பன்னிரு வயதுத் தமிழ்ப் பாலகன்
மெல்லக் குனிந்து தன் அரசனைக் கேட்டான்
"முஸ்லிம்களைக் கொன்று கன நாளாயிற்றே
கொல்வதில்லையா இனி? "
அரண்மனை அதிரப் பேயிடியாய்ச்
சிரித்த அரசன் திருவாய் மலர்ந்தான்
"கொல்வதில்லை யென்றெதுவுமில்லை@
இப்போதில்லை!"


ஒரு பேய்மாரி நூறு மோகினிப் பிசாசுகள். மழைக்காலமொன்றையும் மழைக்காலங்களில் கொழும்பு நகரம் எப்பிடி இருக்கும் என்றதான சமூக அக்கறையோடும் தனது காதலியின் நினைவுகளால் எழும் விரகதாபத்தையும் கவிதைக்குள் கொண்டுவந்திருக்கிறார்.

எதையோ முணுமுணுத்தபடி கவட்டுள்
கைவைத்து இறுகிச்
சுருண்டிருப்பேன் நான்.
கணைக்காலிரண்டினதும் நடுவிடுக்கில்
தலையணை கிடந்து நசியும்
ஹோவென்ற விரகம்!
ஹோ!
அனுங்குவதும்
பெருமூச்செறிவதும்
நெஞ்சு விம்மித் தணிவதும்
மார்பு ரோமப் பரப்பிடை ஓர்
அணைத்தற் சுகத்தேவை எழுந்தெழுந்தழிவதுமாய்
வெறுந்தரையிற் பாயின்றி
ஊர்ந்தூர்ந்து கழியுமொரு கொடுமிரவு.

போன் பேசி ஆறுநாள்
அவள் குரலாச்சும் கேட்டால் சற்றுத்
தணியுமிது.
சீதேவிப்பெற்ற என் ஊரில் எல்லாம் கஸ்டம்
கரண்டும் இல்லயாம் இப்ப.
எந்த இருள் மூலையுள் கிடந்து கிடந்து
வேர்த்து விரகிக்கிறாளோ, அவள்


இந்த கவிஞனின் கரம் பிடித்து நடந்ததில் பல உணர்வுகளை அவல துன்ப துயரங்களை எனக்கே எனக்கான புதிய பல தேடல்களை தேடுவதற்கான புதிய உந்துதல்களை உணரவைத்ததில் இந்த கவிஞன் வெற்றி பெறுகிறான்.
முற்றும்.

"சிந்தனை கொள்
சிறை உடை.
நீயாய் வாழ்."

நளாயினி தாமரைச்செல்வன்.
சுவிற்சலாந்து
14-2-2007

Friday, March 23, 2007

வாழ்வின் நிம்மதி.




Friday, March 16, 2007

இயற்கை வரைந்த நவீன ஓவியம்.

செங்கதிர் ஒளிக்கிழை.




இத்தனை பனிப்புகாரினுள்ளும் சூரியனின் கரம்பட்டு நாணிநிற்கும் மரக்கிழை.

Wednesday, March 14, 2007

ஓர் இன அழிப்பின் கதை.

முடக்குதல் அல்லது ஒடுக்குதல்.


வேரோடு புடுங்குதல்.



சுவடு தெரியாமல் மறைத்தல்.



இன அழிப்பின் உக்கிரம்.


வலி.



புதைத்து மறைக்கப்பட்ட உண்மைகள்.





ரணம்.


Monday, March 12, 2007

சுடுகதிர் கொண்டு உருகவைத்தல்.!




சூரியனின் மூடுபனிக் கோவம்.!

Friday, March 09, 2007

கவிதையோடு கரைதல்! பெண்ணியாவின் தொகுப் பு (3)





பெண்ணியாவின் தொகுப்பான என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்புவை! என்ற கவித்தொகுதியை வாங்கியபோது என் மனதுள் ஊற்றெடுத்த அருவிகள் ஏராளம். பச்சைப்பசேல் என காட்சி தரும் மரக்காடு.

தனிமைச்சுகம் வேண்டி காலாற தனியே நடந்தவர்களுக்கும், மனச்சுமை கூடிய பொழுதுகளில் மன ஆறுதலுக்கு இயற்கையின் லயிப்பில் தம்மை இழந்து நடந்தவர்களுக்கும், காதலனோடு அன்றி கணவனோடுகைகோர்த்து நடந்தவர்களுக்கும் இவ் அட்டைப்படம் பலதை கூறுகின்றது. அத்தனை பசுமைச் சூழல். ஆங்காங்கே சூரியனின் கரம் பட்டு நாணி நிற்கும் இலைத்தளிர்கள். சூரியனின்; தொடுகைக்காக கரம் காத்திருந்து, காத்திருந்து ஏங்கப் பெருமூச்சால் கரிய புகைபடிந்த இருள் பிரதேசம். எதையுமே தியானியாது பச்சைப் பசுமையாகி உணவைத் தயாரிக்கும் பொறுப்பில் ஆழ்ந்திருக்கும் பச்சை இலைகள் இப்படியாக விவரித்துக் கொண்டே போகலாம்.

ஆனாலும் தலைகீழான மரக்காடு. இது எனது உத்வேகத்தைக் கூட்டினாலும் இந்தக் கவிஞரோடு என்னால் கரம் பிடித்து செல்ல முடியுமா என ஒரு கணம் ஏற்பட்ட சிறு சலனம் கிழமைக் கணக்காகி மாதக்கணக்காகும் என நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. கவிதைகளை வாசிப்பதும் வைப்பதுமாகிவிடுகின்ற பொழுதுகளே அதிகமாகியது.

சில உண்மைகளை உரத்துச் சொல்வதோடு ஒப்புக்கொள்ள வேண்டியும் உள்ளது. வேலைப் பழுவும் குடும்பப் பாரமும் அதிகமான இந்த புலம் பெயர் வாழ்வில் அலுப்பையும் வாழ்வின் மீதான சலிப்பையும் தந்தாலும் இங்குள்ள இயற்கையின் கொடை நம்மை வாழச் சொல்லித் தூண்டுகின்றது.

வீட்டில் அமைதியாக இருந்து எழுதிய ஒரு காலம். அந்த நேரம் இப்போதெல்லாம் பிள்ளைகளுக்கு என்றாகிவிட்டது. எனக்கு அப்பப்போ கிடைக்கக் கூடிய சொற்ப துளிகள் தாம். குழந்தைகள் வளர வளர தமக்கான இடத்தை தக்கவைத்து வளர்வது தானே இயல்பு. பெற்றோராகிய நாம் இடம் விட்டுக் கொடுத்தல் அதை விட உயரிய பண்பு. இப்போதெல்லாம் எனக்கான வாசிப்புக்கள் மலைக்காடுகள், வாவிக்கரைகள் பரந்த புல்வெளிகள் என்றாகிவிட்டது. அழகியதொரு மாலைப்பொழுதில் அல்ப்ஸ் மலைத்தொடரெங்கும் தூவிவிட்ட மாக்கோலமாய் வெண்பஞ்சு பனித்துகள்கள். மெலிதான குளிர்காற்று சில்லென்று என்னை அணைக்க ஓர் வாவிக்கரை. என் கார் வாவிக்கரை நோக்கி வேகமெடுக்கிறது. ஆனாலும் என் மனக்கிடங்கில் இருந்து பெண்ணியாவின் கவித்தொகுதியின் பின் அட்டையில் இருக்கக் கூடிய கவிதை வரிகள் என்னுள் பல தடவை மனதில் எழுந்து ஓய்கிறது.

"காற்றில்
எல்லையற்று விரியும் கிளைகளின்
பச்சை இளம் நுனிகளின்...
முடிவிலியில்
மண்ணைத் துளையிட்டு
விரல் விரியும்
வேர்களின் முனைப்பின் …
உயிற்துடிப்பைக்கேள்.!"


அத்தகையதொரு நுண்ணிய உயிர் துடிப்பை அதன் மெலிதான அதிர்வை புரிதல் என்பது மென்மையான இதயம் படைத்தவர்களால் மட்டுமே முடியும் என்பது எனது வாழ்வியல் அறிவுக்கு எட்டிய உண்மை. நம்மை தமது உயர்வுகளுக்கெல்லாம் பயன்படுத்திக்கொண்டு சந்தோசங்களில் மட்டுமே பங்கெடுத்துவிட்டு துன்ப, துயரம் ஏற்படுகிறபோது நம்மை எல்லாம் விட்டு ஓடி, ஒளிந்து, ஒதுங்கி நம்மையும் ஒதுக்கிவிடுகின்றதான இந்த உலகு.

துன்பம் நேர்கையில்
யாழெடுத்து நீ
இன்பம் சேற்க மாட்டாயா…"


இயன்ற வரை மென்மையான மனசோடு அத்தனை உயிர்த்; துடிப்பையும் உணரக்கூடிய ஓர் மெல்லிய உணர்வலை யோடு இக் கவிதைகளுக்குள் நனைகிறேன்.நேசம் அல்லது நெல்லி மரம் என்ற கவிதையில்


"வஞ்சமும் பொறாமையும் நிறைந்த மனிதர்களது
முகத்தை விட அந்த
நெல்லிமரத்தின் உடல் முழுக்க
அழகாகவே உள்ளது."


தேம்பித் தேம்பி அழும் பொழுதுகள் - தலைசாய்த்துக் கொள்ள மனிதர்கள் இல்லாத இந்த பூமியில் இயற்கையை சரண் அடைவது ஒரு வரப்பிரசாதமே. அத்தகையதொரு வஞ்சகம், பொறாமை நிறைந்த மனிதர்களது தொல்லை தாங்க முடியாது திணறிய கணப்பொழுதில் இந்தக் கவிதை வந்தமர்ந்திருக்கிறது.தனிமைச் சூழலும் இந்த உலகமானிடமே வெறுத்ததாய் உணரும் பொழுதுகளில் எங்கோ ஒன்றில் மனம் லயித்து வாழ்வின் மிச்ச சந்தோசங்களை உணர்வதாலும் வாழ்வின் மீதான நம்பிக்கையை தருவதாலும் நாமெல்லாம் இன்று குதூகலித்தும், நொறுங்கிப்போயும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.



அடுத்த கவிதை மாதராய் பிறந்திட என்ற தலைப்பு

ஒரு உருண்டையின்
நுனியில் தொங்கிக்கொண்டிருக்கிறேன்….
கேவலமான கௌரவவெறியுடன்
அலையும் சிவந்த கண் மனிதர்
இவர்களை நினைத்து மிகவும்
நடுங்குகிறேன் இரவில்.


பெண்ணாக பிறந்து விட்டோமே என்கின்ற சோகம் அதிகரிக்கிறது. ஒரு உருண்டையின் நுனியில் தொங்கிக் கொண்டிருக்கிறேன். தொப்பள் கொடி உறவு. காலம் காலமாக எமக்குள் வந்து சேர்ந்த அல்லது திணிக்கப்பட்ட சமூக அடக்கு முறைகள். ஆணாதிக்க வெறியுடன் அடக்கியாள முற்படும் சிவந்த விழிகளுடன் திரியும் மனிதர்கள் இவைகளால் என்றுமே பெண்கள் இருளில் தம்மைத்தாமே ஒடுக்கிக்கொள்ளும் நிலமை. ஆனாலும் கவிஞர் தன்னைப்பற்றி, தனது இருப்பு பற்றி சிந்திக்கத்தொடங்கி இருப்பது சந்தோசத்தைத் தருகிறது. இப்படியாக நான் சொல்லி சந்தோசப்பட்டுக்கொண்டு தலையை நிமிர்த்துகிறேன். வாவிக்கரை யெங்கும் வாத்துக்கள் நிறைந்து வழிந்தன. தமக்குள் தலையை இழுத்தபடிக்கு தூங்கி வழிந்தன. அல்ப்ஸ் மலைத்தொடர் வாவியுள் தெரிந்தது. வானமே நீலமாகி ஆங்காங்கே வெண்பஞ்சு முகில் கூட்டங்கள் வாவியுள் ஓடியது. அத்தனை சலனமற்றுக் கிடந்தது வாவி. நான் மட்டும் அடுத்த கவிதையைபற்றி எழுதும் அவசரத்தில்.
இப்படியாக நான் எழுதிவிட்டு அடுத்த கவிதையான கல் அதனுள் நுழை கிறபோது கவிஞர் தன்னை உணரவும் தேடவும் தொடங்கிவிட்டிருப்பது தெட்டத்தெளிவாகிறது.

ஆனால் அவள் உணரவில்லை
குளிரையோ
வெப்பத்தையோ
அவளின் உட்காவு நரம்புகள்
பழக்கப்பட்டன இவற்றுக்கெல்லாம்.
ஆனால் அவளின் மூளையோ
குழம்பிற்று.
எதையோ சிந்தித்தது
------
சில சமயம் அவள் உணர்ந்தாள்
தான் ஒரு
சிலையாக்கப்பட்டிருப்பதாக.



எமது சமூகத்தில் பெண்களை இயல்பாய் வளர்ப்பதில்லையே. உருவம் அமைத்தல்லவா வளர்க்கப்படுகிறார்கள். எம் உணர்வுகள் நெரிக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு நம்மை நாமே உணராது மற்றவர்களின் உணர்வுகளுக்கு ஏற்ப நம்மை அப்பப்போ மாற்றி ஜடமாக வாழப் பழக்கினர். கண்ணீரும் கம்பலையுமாக்கி இது தான் வாழ்வென வரையறுத்த சட்டகத்துள் புன்னகை பூத்தபடி மனதில் பல ரணங்களை சுமந்தபடி வாழ்தலே வாழ்வென எம்மை வளர்த்தார்கள். பெரு மூச்சுடன் வாங்கை விட்டு எழுகிறேன். காலாற கொஞ்சம் நடக்கலாம் போல இருந்தது.


பரந்த புல் வெளிகள், சூரியனைக் காணாது தமது சோபை இழந்து கிடந்தன. ஆங்காங்கே குறுக்கும் நெடுக்குமாக ஒற்றையபடிப் பாதைகள் நீண்டபடிக்கு தென்பட்டது. நடக்கிறேன். என்னை முத்தமிட்டுச் செல்லும் இதமான குளிர் அணைப்பு. மேனி சிலிர்க்கிறது. இத்தனை நேரம் இந்த குளிர் என்னை ஒன்றும் செய்யவில்லை. அத்தனை லயிப்புடன் பெண்ணியாவின் கவிதைத் தொகுதியுள் மூழ்கி இருந்தது இப்போது எனக்கு புலனாகியது. என் சமூகத்தின் மீது கொண்ட கோபத்தால் குளிர் தெரியவில்லையோ என நினைத்துக்கொண்டேன்..இலையுதிர் காலமாதலால் மர இலைகள் எல்லாம் பல வர்ணங்களில் தெரிந்தது. அதன் பிரதிபலிப்பாய் வாவிக் கரைகளெல்லாம் பல வர்ணக்கலவையாக காட்சியளித்தது. யாரோ ஒரு ஓவியர் எனக்காக வரைந்து விட்டு சென்றிருக்கிறாரோ என்கின்றதான ஒரு மன நெகிழ்வுடன் கூடியதொரு படபடப்பு என்னுள் தொற்றிக் கொண்ட போது ஒரு வண்ணத்துப் பூச்சியாகியது என் மனசு. இந்த இயற்கையே ஒரு ஓவியக் கவிஞர் தானே. அடடா.. புகைப்படக்கருவியை எடுத்து வரவில்லையே என் மனசு தவித்தது. கண்களால் அத்தனை அழகையும் பருகிக்கொண்டேன்.
மீண்டும் வாவிக் கரையில் இருந்த வாங்கு நோக்கி நடக்கிறேன். அடுத்த கவிதையை என் விழிகள் பருகின. நான் மேலே சொன்ன கருத்து முட்களின் கற்கள் என்ற கவிதையில் பிரதிபலிக்கிறது.

உண்மைகளை விழுங்கும்
உணர்வுகளைச் சிதைக்கும்
சம்பிரதாயக் கயிற்றில் எனைத்
திரித்து வதை செய்ய வேண்டாம்.
அதனுள் அழுகிய மனிதனாய் வாழுதல்
அழிந்து அமிழ்ந்து போதல்
என்னால் இயலாது…

வாழ்தலையும் மரணித்தலையும்
எனக்காய்ப் புரிய இசைகிறேன்.
தீக்கிடங்கினுள் கிடந்து
நான் உயிர்வாழ்வதற்காய்க் கூச்சலிட
எத்தகைய பிடிப்புகளுமில்லை எனக்கு…


உணர்வுகளைத் தனியே உறிஞ்சி
பிணங்களாய்த்தான் வாழவைப்பீரெனின்
உடனேயே எனைக்
கொன்று விடுங்கள்.
ஏனெனில்
வாழ்தலுடன் கூடிய நடிப்புத்திறன்
எனக்கிருப்பதாய் மார்தட்டிக் கொள்ள
நான் நிஐங்களைப் பொய்ப்பிப்பவளல்ல…


சபாஸ்! நேர்மையாக தன் உணர்வுகளை உரத்துச் சொல்லும் தைரியம் மிக்க ஓர் கவி விடுதலைப் பெண் உருவாகிவிட்டார். பெண்ணின் உணர்வுகளை அடக்கி ஒடுக்குகின்ற அல்லது அதை சொல்ல முடியாத படி உருவமைக்கப்பட்ட எம் சமூக வரையறைக்குள் தன்னை திணித்து வைத்திராது வெளியேறுகின்றதான முயற்சி என்றே கூறலாம்.
சமூக கட்டுப்பாடுகளை உணர்ந்து அதிலிருந்து தன்னை விடுவித்தல் என்பது பெரியதொரு மனக்குழப்பம் நிறைந்த உணர்வைத் தரும் என்பது நிஜம். அந்தமனக் குழப்பம் ஒரு சமயம் அதிக சந்தோச உணர்வையும் இன்னொரு தரம் அதிக சோம்பல் தனத்தை அல்லது வாழ்வின் மீதான பற்றற்ற நிலையையும் உணர்கின்றதான கணங்களாக அவை பல்வேறு உணர்வுகளோடு எம்மை ஆட்கொள்கிறது. நம்மை நாமே சமாதானப் படுத்தி மீண்டும் வைராக்கியத்தை மனத்திடை ஏற்றி எழுதல் என்பதில் இயற்கையை சமாதானத்துக்கு உருவகித்து திடம் கொள்கிறோம். அதே போலவே முட்களின் கதைகள் என்ற கவிதையிலும் வெறுமை என்ற கவிதையிலும் இயற்கையை தன்வசப்படுத்தி தன்னை திடம்கொள்ள வைத்து நம்பிக்கையை வான்வரை விரிக்கின்ற தன்மையை காணக் கூடியதாக இருக்கிறது. முட்களின் கதைகள் என்ற கவிதையில் மீண்டும் சில வரிகள் இவ் வரிகள் என்னை மிகவும் பாதித்தவையாக உள்ளன.



நான் எனை ஓர்
உன்னத பிறவியெனக் கருதிக்கொள்வேன்.
ஒளிர்ந்து பின் தேய்தல்
உறுதியென விதியெழுதப்பட்ட பின் கூட
பொன்னிலவு கரைந்து விடவில்லையே.!
என் முயல்வுகளும் சிந்தனைகளும்
தோற்கடிக்கப்படலாமென உணர்ந்தும்
நான் போரிடுகிறேன்
உங்களுள் ஒருத்தியாய்!
எனக் கூறுகிறார் கவிஞர்

அதே போல வெறுமை என்ற கவிதையிலும்
என்னவாயிற்றோ எனக்கு
ஒளிர்ந்து பின் இருள் சூழும்
இப் புவியின் மீது ஓர்
கழிவிரக்கம் தோன்றலாயிற்று...


பெண்ணானவள் தன்னை உணர முற்பட்டபின் இந்த உலகின் மூடத்தனங்கள், கள்ளம் கபடங்கள், சூதுவாதுகள் யாவுமே புரியப்படுவனவாக மாறிவிடுகிறது. தன்னைத்தானே உணராத பெண் எல்லோராலும் ஏமாறுபவளாக, ஏமாற்றப்படுபவளாகவே வாழ்ந்து முடிக்கிறாள். இந்த கவிஞர் தன்னை உணர்ந்ததால் இந்த மனித வாழ்வின் மீதான பொய்மைத்தனங்களை நன்கு உணரக் கூடியவளாக இருக்கிறார்.


எல்லாவற்றினதும் செய்கைகளின் பின்னும்
ஒளிந்து மறைந்து கிடக்கும்
பெருமையின் தேடலை
பொய்மைத்தனத்தை உணர்கிறேன் - என்கிறார்


அதே போல தொடர்கிறார் மேலும்.

ஆதலால் தனித்து
எல்லாவற்றினதும் கைவிடுதல்களின் பின்
இந்த வானம்
இந்தக் காகம்
இவற்றுடன் என் நாட்களை
எண்ணிக் கழிக்கிறேன்.
என்னதான் மனித ஜீவன்கள்
இல்லையேயாயினும்
இவற்றுடன் என்நாட்கள்
மிக இனிமையாகத்தான்...


மொத்த மானிடப் ஜீவன்களின் செய்கைகள் யாவுமே பொய்மையானது என உணர்கிறபோது யாவும் போலி என உணர்கிறபோது தனிமை தானே வாழ்வாகிறது. ஆனாலும் அத்தனை தனிமையையும் போக்குவது இந்த இயற்கைதான். என்பதை எத்தனை நாசூக்காக சொல்லிவிட்டார்.

சோகமும் விரக்தியுமே தோன்றும் இன்றய போர்ப்பிரகடன தேசங்களில் எம்மை எல்லாம் வாழச்சொல்வதும் சந்தோசம் தருவதும் எதுவென்றால் நமது இளமைக்கால வாழ்வை அல்லது சந்தோசம் பொருந்திய வாழ்வுக் காலத்தை மீட்டுப்பாத்தல் என்பதாக அமைகிறது. சோகங்களையும் சுமைகளையும் தாங்கித் தாங்கி பழகிப்போன மனசுக்கு இளமைக் கால சந்தோசங்களை நினைவூட்டுதல் என்பது கூடிய மகிழ்ச்சியான கணங்களாக மாறி துன்பம், துயரங்களை தூக்கிப்போட்டு எரித்துவிடுகிறது. பீனிக்ஸ் பறைவையைப் போல் மீண்டும் பலமடங்காக துன்பமும் துயரமும் நம்மை ஆட்கொண்டு வதைப்பது தீராத வலி,ரணம் நிறைந்த காயங்களையும் தழும்புகளையும் தந்தபடியே உள்ளது என்பதை மறைக்க மறுக்க முடியாத உண்மையாகிவிடுகிறது. அத்தகையதொரு இனிய வரிகளை வெறுமை என்ற கவிதையில் காணக் கூடியதாக உள்ளது.

அதே வெறுமை என்ற கவிதையில் இளமைக்கால தோழியின் பிரிவு சொல்லப்பட்டாலும் அந்த இனிமையான பொழுதுகள் மனத்திடை வந்த போகின்றதான வரிகள்.. இக் கவிதையில் ஒரு காதலனின் பிரிவை தத்ரூபமாக பாசாங்கு செய்யாமல் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
காதலர் பிரிகிறார்கள் என்பது எத்தனை கொடுமையிலும் கொடுமை. நினைவுகளை மீட்பதென்பது ஓர் அலாதியான வேதனை நிறைந்த இன்பம் தான். அழுது அழுது சிரித்தபடிக்கு மீட்டல் என்பது... அத்தகையதொரு பிரிவின் கொடுமையை உணரவைத்திருக்கிறார் இந்தக் கவிஞர். நமது வேர்கள் யாவுமே அறுந்து கிடக்கும் நிலை, வெறுமை பூதாகாரமாக நம்மை துரத்தும். அப்பப்போ தனிமையும் இயற்கையும் நமக்கு உதவிக்கரம் நீட்டும். ஆனாலும் நின்று நிதானித்து வாழ்வின் பாதையில் அஞ்சலோட்டம் ஓடவேண்டியவரான கடமைப்பாடாய் விரிகிறது வாழ்க்கை.

எதுவும் உன்னிடம் பேச முடியாதபடி
நான் ஊமையாக இருத்தப்பட்டுள்ளேன்.
உன்னுடன் பேசிக்கொண்டிருந்த
இந்தப்பொழுதுகளைப்பற்றி
இப்போது மழையுடன் பேசுகிறேன


போதெல்லாம் எனக்கு இவை
பெறுமதியான பொழுதுகளாய்த்
தெரியவில்லை.
நீயும் நானும் வாழ்ந்த
அந்தக்கணங்களை விட.
ஆத்மா பிரிந்த ஆவியாய்க்கிடக்கின்றேன்.


அடுத்த கவிதை உதிரும் இலைக்கனவு விரிகிறது. இதுவும் காதலனின் பிரிவை கூறுகின்றதான ஓரு கவிதை. காதல் வசப்படுகிறபோது பெண் மிகவும் மென்மையாக்கப்படுகிறாள். இயல்பாக காதல் வரும் போதே இது சாத்தியமாகிறது. அத்தனை தைரியங்களும் அவர்களை விட்டு போய்விடுகின்றது. அதிலும் காதல் பிரிவு என்கிறபோது மேலும் சூனியம் நிறைந்ததாகிவிடுகிறது. இதயமோ பலவீனமாகிவிடுகிறது. பல்வேறு சிந்தனைகளை ஆட்கொள்ளும் மனநிலைக்கு ஆளாகிவிடுகிறாள் பெண். பிரிந்து விட்டோம் என தெரிந்தும் ஒருவரை பித்துப்பிடித்த நிலைக்கு கொண்டுவரும் இந்த காதல் தோல்வி. புற்று அற்ற நிலையாகி காதலன் நினைவில் உணர்வுகள் பூத்து குலுங்கி அதில் அமிழ்வதும் அழுவதும், அழிவதும,; மீண்;டும் உயிர்ப்பதும் தான் காதல் தோல்வியின் மனநிலை. அதை அழகாக இக்கவிதையில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

உன் பெயரை உச்சரிப்பதில் தான்
என் உணர்ச்சிகள் மெய்ப்படுகின்றன.
சிறிது உன்னை நினைக்கிறேன்
பிறகு அழுகிறேன்.
அதே கவிதையில் ஒரு பந்தியில் இப்படி விளிக்கிறார்
அழவேண்டும்.
என் உணர்ச்சிகளைக் கொட்டி.
என் இதயம் கனக்கிறது.
ஏதோ ஒன்று மனதில்
பாரம்போல் உணர்கிறேன்.
அது உன்நினைவின் துயரா அன்பே.
எனக்கு இது பிடித்திருக்கிறது.
உன் நினைவில் அமிழ்வதும்
அழிவதும்...
---
ஜீவனாய்...
இன்னும் உனக்காகவே...
நீ எனக்குள் உயிர்க்கிறாய்
என் மனதில் துளிர்க்கும்
நினைவின் குருத்துகளாயென..


கருகுதல்களும் கனவுகளும்,பச்சைக்கனவு, இருட்டு என்ற தலைப்புகளில் விரிகிறது அடுத்த கவிதைப்பிரபஞ்சம். போர்க்கால சூழல் தந்த வலியை கூறும் கவிதைகளாக வந்தமர்கிறது இக்கவிதைகள். ஒரு பெண்ணின் மரணம் ஏற்படுத்திய தாக்கத்தின் பின்னர் போர் தனக்கும் தனது சமூகத்திற்கும் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தை பகிர்ந்து கொள்கிறார் கவிஞர். அந்தப்பெண்ணின் மரணத்தின் பின்னான தேடல் கவிஞரை விழித்தெழ வைத்திருக்கிறது. போரால் ஆட்பட்டிருக்கும் மரண பூமியில் எங்கும் இருள் வாழ்வின் மீதான நம்பிக்கையற்று இருள் சூழ்ந்து காணப்படும் ஒரு மனநிலை. அது எல்லோருக்கும் இயல்பே. யாரும் தட்டிக்கேட்டலின்றி சாகடிக்கப்படுகின்றனர்; என்பதை உணராது இன்றும் இவ் போர்ச் சமூகம். உள்ளது. மரணங்களோ செய்திகளாக்கப்படும் சம்பவங்களாகி விடுகிறது. மதில் ஓரங்களிலும் வாசற்படிகளிலும் கிணறுகளுக்குள்ளும், புதர்களுக்குள்ளும் இப்படியாக கொலைகள் தொடர்வதான ஒரு பூமிதான் என்னுடையது. அத்தகையதொரு பூமியில் வாழும் இச் சக கவிஞரின் மனத்திடை பெரியதொரு பாதிப்பை ஏற்படுத்திய கவிதையாக இக் கவிதைகள் வந்திருக்கிறது. வாயிருந்தும் ஊமைகளாப்பட்டு விழியிருந்தும், குருடர்களாக்கப்பட்டு காதிருந்தும் செவிடர்களாக்கப்பட்ட மரண பூமியது. ஆனாலும் கவிஞருக்கே உரிய கவிமனசு ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தன் உணர்வுகளை இனம்காட்டவே முனையும் என்பது எத்தனை உண்மையாகிறது.

ஏனோ இது நாள் வரை
ஒளியிருந்தும் என் கண்கள்
திறத்தலற்றிருந்தன.
நேற்றைக்கு முதல் தினம் அவள்
மிதித்து துவைத்து
சாகடிக்கப்படும் வரை
இன்று தான் என்னுள் இத்தேடல்---


சோகங்களுக்குள்ளும் துன்ப துயரங்களுக்குள்ளும் தமது வாழ்வை செலுத்துபவர்கள் மனத்திடை இயலுமையற்று வாழ்கின்றதான சூழலை இக்கவிதையில் அழகாக கூறிச்செல்கிறார். மீண்டும் தனது சமூகம் மீது கோபம் வருகிறது இவருக்கு. அதை இப்படி கூறுகிறார்.

எவ்விதமெனினும்
நாளை இவர்கள்
இறத்தல் மட்டும் உறுதி...
மிதிபட்டோ நல்லது நசிபட்டோ.
ஆக்கினைகளுற்று இறப்பதென்பது
மிக மிக உறுதி...
என்றேனும் அதிசயமாய்
கண்கள் விழித்தாலேயேயன்றி.!


இருட்டு என்ற கவிதையில்

வாழ்வு தொடங்கி பல்லாண்டுகள் பின்னும்
பிள்ளைகள் எம் பிறப்பின் பின்னும்
முடிவுறாத இவர்கள் குடும்பப்போரில்
எனது காற்றின் எனது மலரின்
எனது கனவின் முகம் கிழிந்து தொங்கிற்று.
கோணல் மாணலாய்
ஓய வேண்டாம் இவர்கள் போர்
இவர்கள் கூத்துக்கள் முன்
என் முழுமையையும் வெறுக்கின்றேன்.
---

எப்பிறவியின் சாபமோ
நானும் அவர்களும் அறியோம்...
ஒரு யுகத்திலும் எறித்துவிடாதபடி
நிலவின் கறுத்த பின்புறத்தை எம் வாசல் நோக்கி
திருப்பிப் பிடித்திருப்பது எவருடைய கைகளோ..!
எத்தனையோ தெளிந்தேன் ஆயினும்
இப்போரின் மனநிலைகள்
இன்னும் இன்னும் புரியாதனவாகவே!


நிலவின் கறுத்த பின்புறத்தை எம் வாசல் நோக்கி மிகவும் அற்புதமான வரிகள் இவை. பெண் என்றாலே எங்கோ யாரோ ஒருவரால் எப்போதுமே வதைபட்டு மடியக் கூடிய ஒரு நடைப்பிணமாகவே கணித்து இன்று பெண்ணை வதைக்கும் கோரம் நிகழ்ந்த படியே உள்ளது. என்பதை வதைபடலம் கவிதை என்ற கவிதை கூறிச் செல்கிறதுஅதேகவிதையில்
மீண்டும் சில வரிகள்

உன் ஆதிக்கம் என்பது
என்னை
என் நாவை
அடக்கி ஆள்கிறவரை மட்டுமே.


என ப் பொங்கி எழுகிறார்.


தன்னை உணர்ந்த ஒரு பெண்ணானவள் அப்பப்போ கனவுலகில் சஞ்சரிப்பவளாக தன்னை பாவனை செய்கின்றதான மனநிலைக்கு ஆளாகின்றாள். அதனை உணர்த்துவதாக வந்தமைகின்றது அடுத்த கவிதையான ஓர் வானமும் ஓர் அருவமும் என்ற கவிதை..

எல்லாக் கனவுகளின்
முடிவுகளின் பின்னும்
என்னுள் நான்
எனைத் தொலைத்து
வானத்தில் ஓர்
விடிவெள்ளியாய்
என் உரிமைகளை
வென்று கொள்கிறேன்.
என்றும் ஓர்
கனவுகளில் நடப்பவளாய்.


விடிவெள்ளியது எப்போதுமே விடியலைத் தோற்றுவித்தபடியே வருகிறது. அதே போல இவரது கவிதைகளும் எம்முள் பல விடியலைத் தோற்று வித்தபடி மிளிர்கிறது என்றால் மிகையாகாது;இருள் சூழ்ந்த சூனியவெளிகளுள் இன்னதென்றே புரியாமல் வீழ்கிறபோது மரணம் நிகழ்ந்து விட்டதாக பாவனை செய்கின்றதான ஒரு மனநிலை. உணர்வுகளை கொன்று போடுதல் என்பது அத்தனை சாத்தியமா என்ன...? அது நிகழ்ந்த ஒரு பொழுதில் இக்கவிதை. அது தான் படியோலையின் ஒரு குரல் என்ற கவிதை.

அதே போலவே தனக்கெதிரான வன்முறைகளுக்கு எதிராகவும், தன்கனவுகளின் மீது ஏறிமிதிப்போருககு எதிராகவும், தன் சுதந்திரங்களின் மீதும் தன் உணர்வுகளின் மீதும் கொடுரங்களை பாய்ச்சும் மனிதர்களுக்கு எதிராக புறப்படுகிறார். தனது உணர்வுகளோடும் தன் சகல சுதந்திரச் சிறகுகளோடும். தனித்து நின்று எதிர்த்து உயிரப்பறக்க முனையும் ஓர் உந்துதல் இவருள்.அதனால் அக் கவிதைக்கு தலைப்பிடுகிறார் என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வை என அமைகிறது அக்கவிதை.

அடுத்த கவிதையாக புத்துயிர்த்தல். கனவுகள் சிதைக்கப்பட்ட ஒரு நாளில் இக் கவிதை வந்தமர்கிறது. ஆனாலும் தன்னைத்தானே உணர்கிற போது அதை அவளைச் சுற்றிய உறவுகள் புரியாதபோது கனவுச் சிதைவும், வாழ்வுச் சிதைவும் ஏற்படும் என்பதை யாராலுமே மறுக்க முடியாது .
ஆனாலும் அவற்றையும் தாண்டி தான் வாழ்வேன் என உறுதியிட்டு மீண்டும் தனக்கே தனக்கான கனவுகளோடும் இன்னும் பலமான நம்பிக்கை வலைகளை போட்டபடிக்கும் வானம் அகல தனது சிறகுகளை விரிக்கிறார் கவிஞர் பன் மடங்கு வீரியத்தோடும்

எனையழுத்தும் இவ்
இறுகிய பார்வைகளினூடிருந்து
வீறு கொண்டதொரு புல்லாய் நிமிர்வேன்.
கூவத்தான் முடியாதாயினும்
ஈனஸ்வரத்திலேனும் என் பாடல்களை முனகியபடி
யார் முன்னும் பணிதலன்றி
எனது உணர்வுகளோடும் அவாக்களோடும்
எவ்வகை வாழ்வெனப் புரியாது இது
குழப்பமிகு வாழ்வேதானாயினும்
வாழ்வேன்
வாழ்வேன்
வாழ்வேன் நான்.


என கூறி விடைபெறுகிறார் கவிஞர் பெண்ணியா.
இக் கவிதைகளோடு கரைந்து ஆவியாகிய பெருமிதம் என்னுள். வானம் இருட்டிக்கொண்டு வந்தது. ஆங்காங்கே வாவியுள் வாத்துக்கள் நீந்தித் திரிந்தன சின்னதாக ஓர் நீர் அசைவை எற்படுத்தியபடி. முழுநிலா வானத்தில் தெரிந்தது. நாளைக்காவது சூரியன் வருவான் என்ற ஏக்கத்தோடு பரந்த புல்வெளிக்காடு அமைதியாக இருந்தது. கார் நோக்கி எனது கால்கள் நகர்கின்றன.


உன்னை எழுது.
உயர்வாய்
உணர்வாய்."


ஆனாலும் இக் கவிஞரிடம் இருந்து இன்னும் பல கவிதைகளை எதிர்பார்த்த படி நாம்.

20.1.2007

Thursday, March 08, 2007

பசுமை தொலைத்து...


சூரியனின் வரவின்றி உணர்வுகள் தொலைத்து வெறுமையாகி..




















பனிக்கால சூரிய அஸ்த்தமனம்.

படத்தின் மேல் சொடுக்கி பெரிதாக்கி பார்க்கவும்.

Wednesday, March 07, 2007

பனிக்கால சூரிய வருகை..!








பனிக்காலத்தில் சூரியனை காண்பதென்பது மிக குறைவாகவே இருக்கும்: அப்பப்போ முகம் காட்டி விட்டு ஓடிவிடுவார்.பனிக்காலத்தில் சூரியன் சரியான சோம்பேறி. பனியோடு அவரால் போட்டி போட்டு வெல்ல முடிவதில்லை ஒரு போதும். அப்பப்போ சோம்பல் முறிக்கிற போதும் ;கொட்டாவி விடுகிறபோதும்; திரும்பி படுக்கிறபோதும் ;மட்டுமே ஒளி நமக்கு கிடைக்கிறது.



Monday, March 05, 2007

எனது வீட்டைச்சுற்றி இரு விழிகள்.!













அமைதியானதொரு பனிக்கால காலைப்பொழுது.!
படத்தின் மேல் கிளிக்செய்து பெரிதாக்கி பார்த்து மகிழுங்கள்.



பனிப்பொழிவு!


கைகளை விரித்து
வானம்பாற்தல்
சுகமது சுகமே.
பஞ்சுப்பஞ்சாய்
வண்ணப்பொதிகள்
கரைந்து ஓடும்.
உள்ளத்துணர்வுகளை
எந்த மொழியில் பெயற்பது..!

மழை ஓய்ந்த பின்னான ஒரு பொழுது..!


தரை இறங்க முடியாத முகிலின் அவஸ்த்தை...!
படத்தின் மேல் கிளிக்செய்து பெரிதாக்கி பார்த்து மகிழுங்கள்.

பனி மணல்..!

அல்ப்ஸ் மலைத்தொடரின் ஒரு பகுதி.
படத்தின் மேல் கிளிக்செய்து பெரிதாக்கி பார்த்து மகிழுங்கள்.

பனிக்கால சூரியோதயம்.



மர உச்சியில் குருவிக் கூடு.!

ஆதித்தாய்.



முள்ளந்தண்டு முன் வளைந்த படிக்கு
கையில் தடியோடும் கோணிப்பையோடும்.

அப்பப்போ
மண்ணள்ளி முகத்தில் பூசுவதும்
அழுவதும் ஆடுவதும் பாடுவதும் சிரிப்பதுமாய்.
புரிந்து கொள்ள முடியவில்லை.

மாமரத்தின் கீழும்
தென்னையின் கீழும்
கிணற்றடி ஆடுகாலினுள்ளும்
ஏலாத போது தனது வீட்டுத் திண்ணையிலுமாய்
தன்னை காப்பாற்றிபடியே.
இன்னும் சாகேலை ஆச்சி.

ஆடிப்பாடி குதாகலித்து
நிலாக்காட்டி சோறூட்டி
மடியிலும் தோழிலுமாய்
சுமந்து தூங்க வைத்து......

பூட்டி பேரன்கள்
யாருமில்லை அவளருகில்.

பசியோடும்
துன்ப துயரோடும்
போரின் கொடுமையோடும்
வெறுமை பொழுதை
சுமந்தும் துடைத்தெறிந்தும்..

வீரத்தோடும்
இன்னும் பல மடங்கு வீரியத்தோடும்
மகரந்தங்களையும்
விதைகளையும்
வேர்களையும்
இன்னும் இன்னும் அதிகமாய்
தன்னகத்தே சேமித்தபடிக்கு ஆச்சி.

உரு சிதைந்து சிதிலமாகுமுன்
நாமெல்லாம் தன் மடியில் வந்து வீழ்வோம்
என்ற நம்பிக்கையோடு
கோணிப்பையை இறுக அணைத்தபடி ஆச்சி.

நளாயினி தாமரைச்செல்வன்.
10-02-2007